குண்டு மல்லி, கொஞ்சம் கேளு! - பழைய உடை; புதிய உத்வேகம்!
உடல் எடை குறைக்கும் ஆலோசனைகளைக் கேட்டே, அலுத்து விட்டேன். 26 வயதில், 78 கிலோ இருந்தேன். தோழியின் பிறந்த நாள் விழாவிற்கு சென்ற போது, இறுக்கமாக இருந்த உடை கிழிந்து விட்டது. 'அதிக உடல் எடையுடன் இருக்கிறேன்' என்பதை உணர்ந்தாலும், இந்த நிகழ்விற்கு பின், எடையை குறைக்க தீவிர முயற்சி செய்தேன்.தவறான உணவுகளான, மிகவும் பிடித்த, பாஸ்தா, வெள்ளை சாஸ், சாக்லேட், சர்க்கரை, சீஸ், கேக், ஜிலேபி, சாப்பிடுவதை நிறுத்தினேன். காலையில் எழுந்தவுடன், 1 லிட்டர் தண்ணீர் குடிப்பேன். கலோரி குறைந்த, விதவிதமாக, உணவை வீட்டிலேயே செய்து சாப்பிடுகிறேன். பகலில் துாங்குவதில்லை; ஜிம்மிற்கு செல்லாமல், சூரிய நமஸ்காரம் உட்பட சில யோகா பயிற்சிகளை செய்ததில், 5 கிலோ குறைந்தது.இரவு, 7:00 மணிக்கு மேல் எதுவும் சாப்பிட மாட்டேன். ஆறு மாதத்தில், 15 கிலோ குறைத்தேன். என் பழைய உடைகளை பத்திரமாக வைத்துள்ளேன். அதை பார்க்கும் பொழுதெல்லாம், எடை கூடும் ஆபத்தை நினைவு படுத்துகிறது.- சேத்னா கபூர், வலைப் பூ எழுத்தாளர்