உள்ளூர் செய்திகள்

இருதயம் காப்போம்: "பாரம்பரியமும் மாரடைப்பு ஏற்பட காரணமே

எனது வயது 50. எனக்கு அதிகமாக மூச்சு வாங்குகிறது. எக்கோ பரிசோதனையில், Aortic Regurgitation Grade 23 என வந்துள்ளது. எனது டாக்டர் ஆப்பரேஷன் தேவையில்லை என கூறுகிறார். நான் என்ன செய்வது? சுந்தரம், மதுரை.

இருதயத்தின் இடதுபாகத்தில் உள்ளது,'Aortic' வால்வு. இதில் ரத்தக்கசிவு ஏற்படுவதை Aortic Regurgitation என்பர். இதன் அளவை 4 கிரேடுகளாக பிரிக்கலாம். உங்களுக்கு ரத்தக் கசிவின் தன்மை லேசாகவும் இல்லை; தீவிரமாகவும் இல்லை. இரண்டுக்கும் இடையில் உள்ளது. இந்த ரத்தக்கசிவு நாளடைவில் கூடுவதற்கு வாய்ப்புள்ளது. எனவே ஆறுமாதத்திற்கு ஒருமுறையாவது எக்கோ பரிசோதனை செய்து, 'Echo Progress Studies' செய்து ரத்தக்கசிவு கூடியுள்ளதா என கண்டறிவது முக்கியம். ஏனெனில், பிற்காலத்தில் அவசியம் ஆப்பரேஷன் தேவைப்படும். அதாவது, பழுதான வால்வை நீக்கி, செயற்கை வால்வை பொருத்த வேண்டியதிருக்கும். எனவே, ஆப்பரேஷன் தேவையா, இல்லையா என்பதைவிட, அது எப்போது என்பது தான் முக்கியம். எப்போது ஆப்பரேஷன் தேவைப்படுகிறதோ, அதற்கு முன் ஆஞ்சியோகிராம் பரிசோதனையும் தேவைப்படும். அதுவரை நீங்கள் உணவில் உப்பை நன்கு குறைத்து, கடினமான வேலைகளை தவிர்த்து, டாக்டர் தந்துள்ள மருந்துகளை எடுப்பது அவசியம்.

நான் ரத்தக்கொதிப்பு அதிகமாக உள்ளதால், 'Atorva Statin 20 மி.கி., எடுத்து வருகிறேன். எனது கொலஸ்ட்ரால் நன்கு குறைந்துள்ளது. ஆனால் ரத்தத்தில் S.G.O.T., மற்றும் S.G.P.T.,அளவு 112, 120 என வந்துள்ளது. நான் என்ன செய்வது?எஸ். சதீஷ்பாபு, சிவகங்கை

ஸ்டேட்டின் வகை மாத்திரையால் மிகச்சிலருக்கு 'லிவர் என்சைம்களான S.G.O.T., மற்றும் S.G.P.T., ஆகியவை கூடுவதற்கான தன்மை உள்ளது. அவ்வாறு கூடும்போது உங்கள் டாக்டரிடம் கலந்து ஆலோசித்து, நீங்கள் எடுத்து வரும் ஸ்டேட்டின் மாத்திரையை சிலவாரங்கள் நிறுத்தி, S.G.O.T.,மற்றும் S.G.P.T., குறைந்தபிறகு, குறைந்த டோஸில் வேறு வகை ஸ்டேட்டின் மாத்திரைகளை எடுப்பது நல்லது.

எனது வயது 45. ஆறு மாதம் முன்பு மாரடைப்பு ஏற்பட்டது. எக்கோ பரிசோதனையில் Mitral Stenosis Valve Area 1.7 GßÖ® Mild L.V. Dysfunction என வந்துள்ளது. நான் என்ன செய்ய வேண்டும்?ஜெ. பேச்சியம்மாள், திண்டுக்கல்

உங்களுக்கு 2 வெவ்வேறு இருதய வியாதிகள் உள்ளன. ஒன்று இருதய ரத்தநாளத்தில் அடைப்பு ஏற்பட்டு, அதனால் மாரடைப்பும், மற்றொன்று சிறுவயதில் ருமாட்டிக் பீவர் பாதிப்பில் Mitral Stenosis ம் வந்துள்ளது.Mitral Stenosis ஐ பொறுத்தவரை தற்போது சிகிச்சை எதுவும் தேவையில்லை. உணவில் உப்புக் கட்டுப்பாடுடன், கடின உழைப்பை தவிர்த்தால் போதுமானது. மாரடைப்பை பொறுத்தவரை அவசியம் ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்து, ரத்தக்குழாயில் அடைப்பு உள்ளதா என்பதை பொறுத்து, அதற்கேற்ப சிகிச்சை முறை அமையும்.

எனது வயது 32. எனது பெற்றோர் இருவருக்கும் பைபாஸ் சர்ஜரி செய்யப் பட்டுள்ளது. எனக்கும் இருதய நோய் வர வாய்ப்புள்ளதா?* எஸ். நடராஜன், பரமக்குடி

பெற்றோருக்கு இருதய நோய் இருப்பதால் உங்களுக்கும் அது வரும் தன்மை அதிகமாகவே உள்ளது. எனவே, நீங்கள் இப்போது இருந்தே வாழ்க்கை முறையை தீவிரமாக மாற்றி அமைக்க வேண்டும். உணவில் உப்பு, எண்ணெய், சர்க்கரையை குறைத்து, காய்கறி, பழங்களை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். பொரித்த தின்பண்டத்தை அறவே நீக்க வேண்டும். மனதை நிம்மதியாக வைத்துக் கொள்வது அவசியம். தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இத்துடன் உங்கள் ரத்தஅழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அளவை பரிசோதித்து சீராக உள்ளதா என்று அறிந்து கொள்வது முக்கியம். ரத்தத்தில் எல்.டி.எல்.,ன் அளவு 100 மி.கி.,க்கு கீழ் இருப்பது மிகமுக்கியம்.

டாக்டர் சி.விவேக்போஸ்,மதுரை.இருதய நோய் தொடர்பான கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி இருதயம் காப்போம், தினமலர், டி.வி.ஆர்., ஹவுஸ், தினமலர் அவென்யூ, மதுரை-16. இ-மெயில்: mdureporting@dinamalar.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !