உயிர் காக்கும் ஸ்டெம் செல் தெரபி!
இதுவரை வந்த வைரஸ்களில், எச்.ஐ.வி., எனப்படும் நோய் எதிர்ப்பு சக்தியை முற்றிலும் அழிக்கும் வைரஸ் தான் மனித இனத்திற்கே சவாலானது. இந்தத் தொற்று ஏற்பட்டால் இறப்பு நிச்சயம் என்ற நிலை இருக்கிறது. 1980ல் இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. நம் நாட்டில், சென்னையில் மறைந்த டாக்டர் சுனிதி சாலமன், இளைஞர் ஒருவருக்கு எச்.ஐ.வி., தொற்று பாதிப்பு இருப்பதை முதன் முறையாக அடையாளம் கண்டார். இதுவரையிலும் ஆறு கோடி பேர் இந்தத் தொற்றுக்கு பலியாகி உள்ள நிலையில், முறையான சிகிச்சை எதுவும் இல்லை.எச்.ஐ.வி., தொற்று ஏற்பட்டால், படிப்படியாக நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, பல்வித நோய்கள் தொற்றும் அபாயம் உள்ளது. தொற்று முற்றிய நிலையில் எய்ட்ஸ் எனப்படும். அமெரிக்காவைச் சேர்ந்த எச்.ஐ.வி., பாதித்த, 64 வயது கலப்பின பெண்ணுக்கு, 'லுாகேமியா' எனப்படும் ரத்தப் புற்றுநோய் இருந்தது. தானமாகப் பெறப்பட்ட ஸ்டெம் செல் செலுத்தி, கேன்சருக்கு சிகிச்சை அளித்த நிலையில், கடந்த நான்கு ஆண்டுகளாக அவர் உடலில் எச்.ஐ.வி., கிருமியின் பாதிப்பு தெரியவில்லை. கேன்சர் சிகிச்சைக்கு தரப்பட்ட ஸ்டெம் செல் சிகிச்சையால், எச்.ஐ.வி., கிருமி பாதிப்பில் இருந்து வெளியில் வந்த முதல் பெண் இவர்.- ஷெரோன் லுாவின், தலைவர், சர்வதேச எய்ட்ஸ் சொசைட்டி