மனசே மனசே குழப்பம் என்ன! - என் சுவாசக் காற்றே!
இதய மாற்று அறுவை சிகிச்சை போன்ற, சிக்கலான விஷயத்தை எதிர் கொள்பவர்களை, மருத்துவ ரீதியில் செய்ய வேண்டிய அனைத்தையும் செய்து, அதன்பின், எந்தெந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும், மருந்துகளை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும், அடுத்த பரிசோதனை எப்போது வர வேண்டும், என்று சொல்லி, அனுப்பி விடுவதே வழக்கம்.அடுத்த முறை வரும் போது, தேவைப்பட்டால், மருந்துகளில் தேவையான மாற்றங்களை செய்வர். ஆனால், நாங்கள், கடந்த, 20 ஆண்டுகளுக்கும் மேலாக, நோயாளியின் மறு வாழ்வில் கவனம் செலுத்துகிறோம். இதய மறுவாழ்வு மையம் இருக்கும் மருத்துவமனைகளில், உணவு, ரிலாக்சேஷன், உடற்பயிற்சி, மனநிலை, ஊக்கம் இந்த ஐந்து வார்த்தைகளின் ஆங்கில முதல் எழுத்துக்களை சேர்த்தால், 'ட்ரீம்' அதாவது, கனவு என்று வரும். சர்வதேச அளவில் வெற்றியைத் தரக்கூடிய, 'பார்முலா' இது. அறுவை சிகிச்சைக்கு முன், இதைப் பற்றி நோயாளியிடம் விளக்கி விடுவோம்.எங்கள் குழுவில், உணவு ஆலோசகர், உடற்பயிற்சியாளர், பிசியோதெரபிஸ்ட், மனநல ஆலோசகர் உட்பட, அனைத்து நிபுணர்களும் உள்ளனர்.உடல் சக்திக்கு முதல் ஆதாரம், சுவாசப் பயிற்சி. முறையாக சுவாசப் பயிற்சியை கற்று, தினமும் பயிற்சி செய்தால், உடலுக்குத் தேவையான சக்தி கிடைத்து விடும், சோர்வு ஏற்படாது. உடல் சக்திக்கான அடுத்த ஆதாரம், உணவில் இருந்து கிடைக்கும் ஊட்டச் சத்துகள்.சுவாசப் பயிற்சி என்றவுடன், சமூக வலைதள சேனல்களில், பல வகையான பயிற்சிகளைப் பார்த்து, எதைச் செய்வது என்று தெரியாமல் குழப்பமாகி, எதையும் செய்யாமல் விட்டு விடுவர். எங்கள் மையத்தில், இதய ஆரோக்கியத்திற்கு, சர்வதேச அளவில் உள்ள, அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் தந்துள்ள வழிமுறைகளையும், நுரையீரல் நலனுக்கு கனடாவில், செயல்படும் அமைப்பின், உலகத்திற்கே வழிகாட்டியான கையேட்டையும் பின்பற்றுகிறோம்.இதய மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்கள் தவிர, பை - பாஸ், வால்வு மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கும் பிரத்யேக பயிற்சிகள் உள்ளன.டாக்டர் ஏ.ஜே.ராஜேந்திரன், இயக்குனர், இதய மறு வாழ்வு மருத்துவ மையம், எம்.ஜி.எம். ஹெல்த் கேர், சென்னை.044 - 4524 2424