ஒரே அரிசியில் தான் பலவகை கஞ்சி!
காய்ச்சல் போன்ற பொதுவான உடல் உபாதைகளுக்கு எளிதில் செரிமானம் ஆகக் கூடிய கஞ்சி செய்து சாப்படுவது வழக்கம். கஞ்சி தயாரிக்கும் போது ஒரு பங்கு அரிசியுடன், 14 மடங்கு தண்ணீர் சேர்த்துக் காய்ச்ச வேண்டும். அரிசி நன்கு வெந்து, அதே சமயத்தில், பருக்கை உடையாமல் இருக்கும். இதைக் குடிப்பதால் தாகம் நீங்கும். சோர்வு, பலவீனம், வாத நோய்கள் இவற்றிற்கு நல்லது. செரிமானமும் எளிதில் நடக்கும்.இதை 'பேயம்' என்று ஆயுர்வேதத்தில் சொல்வோம். இதையே பருக்கை தெரியாமல், குழைத்து, நீர்க்க காய்ச்சினால் அதற்கு, 'மண்டம்' என்று பெயர். இந்த கஞ்சியும் தாகத்தைப் போக்கும்; வியர்வையை உண்டாக்கும்; சோர்வு நீங்கும். பசியைத் துாண்டும். வயிற்றுப் போக்கு ஏற்படும் சமயங்களில் இந்தக் கஞ்சி குடித்தால் நல்லது. நன்கு வேக வைத்து வடித்த சாதத்தை சாப்பிட்டால், சர்க்கரை கோளாறினால் ஏற்படும் புண்ணை ஆற்றும் திறன் இதற்கு உண்டு.கண் நோய்களுக்கு நல்லது. எண்ணெய்பலகாரம் அதிகமாக சாப்பிட்டு, வயிறு மந்தமாக இருக்கும்போது, இந்த சாதத்தை சாப்பிட்டால் நிவாரணம் கிடைக்கும்.ஒரு பங்கு அரிசிக்கு நான்கு பங்கு தண்ணீர் சேர்த்து, நீரை வடிக்காமல் வேக வைப்பதற்கு, 'விலேபி' என்று பெயர். இப்படி சாப்பிடுவது தேக ஆரோக்கியத்திற்கு நல்லது. சாப்பிட்ட வுடன் மலம் கழிக்க வேண்டிய, 'இரிட்டபிள் பவல் சிண்ட்ரோம்' -பிரச்னை உள்ளவர்கள், இது போன்று சாதம் சாப்பிடுவது பலன் தரும்.டாக்டர் எம்.ஹரிகிருஷ்ணன்,ஆயுர்வேத மருத்துவர், 89399 33150 healerhari@gmail.com