ஒரு சில நாட்களிலோ அல்லது வாரங்களிலோ, நினைவாற்றலை அதிகரிக்க செய்து விட முடியாது. மேலும், மாத்திரைகளால் மட்டுமே, மறதியை குணப்படுத்த முடியாது என்பதையும், மறந்து விடக்கூடாது. சில வழிமுறைகளை, இளம் வயதில் இருந்தே கடைப்பிடித்தால், 'டிமென்ஷியா' எனப்படும் மறதி நோய் நிச்சயம் வராது.இதற்கு நாம் செய்ய வேண்டியது, அன்றாடம் செய்யும் வேலைகளை, ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டியது. காலையில், சத்தான உணவு, நாள் தவறாமல் வேலைக்கு செல்வது, உடற்பயிற்சி, விளையாட்டு, நல்ல உறக்கம், குடும்பத்தினருடன் நேரம் செலவு செய்வது, 5 - 8 மணி நேர துாக்கம், இவையெல்லாம் மிகவும் முக்கியம்.நாள் தவறாமல் உடற்பயிற்சி செய்வதால், உடல் முழுவதும், சீராக ரத்த ஓட்டம் இருக்கும். மறதி நோய் வராது. அதிக கோபம், மனக்கசப்பு, பொறாமை உணர்வு, மனப்பதற்றம் ஆகியவற்றை, முடிந்தவரை குறைத்துக் கொள்வது நல்லது.ஐம்பது வயதிற்கு மேல், டாக்டரின் ஆலோசனைப்படி, முறையான மருத்துவ பரிசோதனை செய்து, தேவையிருப்பின், சரியான சிகிக்சை, தவறாமல் மாத்திரைகள் சாப்பிட வேண்டும்.
மாத்திரைகள்
உயர் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இல்லாமல், தொடர்ந்து அப்படியே இருந்தால், மறதி நோய் வரலாம். அதே போல, ரத்த சர்க்கரையின் அளவு அடிக்கடி குறைவதாலும், மறதி நோய் வரலாம். நீண்ட நாட்கள் சாப்பிடும் ஒரு சில மாத்திரைகளாலும், மறதி நோய் வரலாம். டாக்டரின் ஆலோசனைப்படி, மாத்திரைகளை குறைக்கவோ, மாற்றவோ செய்து கொள்ளலாம். மதுப்பழக்கம் மறதி நோயை ஏற்படுத்தலாம். அதை குறைக்கவோ, முடிந்தால் முழுமையாக தவிர்க்கவோ செய்யலாம். புகை பிடிப்பதால், மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் தடைபட்டு, அதனாலும் மறதி வரலாம்.வயதான காலத்தில், தனிமையை தவிர்ப்பது முக்கியம். மூளையை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள, தோட்ட வேலை செய்வது, பிடித்த நிகழ்ச்சிகளை வானொலி அல்லது 'டிவி'யில் கேட்பது, சொற்பொழிவுகளை கேட்பது, ஆன்மிகத்தில் ஈடுபடுவது, மனதிற்கு பிடித்த ஏதாவது ஒன்றில், தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வது நல்லது.சமீபத்தில் செய்த ஆராய்ச்சிகளில், மறதி நோய் உள்ளவர்களுக்கு, இசை நல்ல தீர்வை தருவதாக உறுதி ஆகியுள்ளது. எனவே, பிடித்த இசையை கேட்கலாம். வளர்ப்பு பிராணிகளுடன் விளையாடுவது, நேரத்தை செலவிடுவது, மனதை சுறுசுறுப்பாகவும், மகிழ்ச்சியாகவும் வைக்க உதவும்.தினமும் குறிப்பிட்ட நேரத்தில், 15 - 20 நிமிடங்கள் தியானம் செய்ய வேண்டும். மூளையில் உறங்கி கிடக்கும் திசுக்களை துாண்டிவிடும் சக்தி, தியானத்திற்கு உண்டு.
நினைவாற்றல்
பிராணாயாமம் முறையாக பயின்று, தினமும் குறைந்தது, 15 நிமிடங்கள் பயிற்சி செய்வதால், நினைவாற்றலை சீராக வைத்திருக்க உதவும்.பச்சை கீரை, ஸ்ட்ராபெர்ரி, ஆப்பிள், வெங்காயம், மீன், காபி, கிரீன் டீ, லவங்கம், பட்டை, முட்டையின் மஞ்சள் கரு, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, ராஜ்மா, உலர்ந்த திராட்சை, முளைக் கட்டிய கோதுமை, வல்லாரைக் கீரை போன்ற உணவு வகைகள், நினைவாற்றலை அதிகரிக்கும் தன்மை உடையவை என, சர்வதேச அளவில் செய்யப்பட்ட பல ஆராய்ச்சிகளில் உறுதி ஆகியுள்ளது. இவை எல்லாம் நாம் அன்றாடம் பார்க்கும் உணவுகள் தானே என, அலட்சியப்படுத்தக் கூடாது.இவற்றிலிருந்து ஏதாவது ஒன்ற அல்லது ஒன்றுக்கு மேலானவைகளை, தினசரி உணவில் இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும். முடிந்தவரை, இந்த உணவு வகைகள் அனைத்துமே, வாரத்தில் ஒரு நாளாவது சாப்பிட வேண்டும்.இளம் வயதிலிருந்தே, உடற்பயிற்சி, சத்தான உணவு, சுவாசப் பயிற்சி, தியானம் போன்ற நல்ல பழக்கங்களை கடைப்பிடித்தால், நினைவாற்றல் சிறிதும் குறையாது; வயதான பின், மறதி நோய் வரவே வராது.தற்போது வேகமாக பரவி வரும், 'கொரோனா' வைரஸ் பாதிப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ள, நோய் எதிர்ப்பு சக்தி அவசியம். குழந்தைகள், முதியவர்களுக்கு, இயல்பாகவே நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். மறதி நோயை தவிர்க்க கடைப்பிடிக்கும் இந்த பழக்கங்கள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவக் கூடியவை.இத்துடன், நெல்லிக்காய், எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற, 'வைட்டமின் சி' அதிகம் உள்ள சிட்ரஸ் பழங்கள், பாதாம் போன்ற, 'நட்ஸ்' வகைகள், பாகற்காய், தேன், காளான், இஞ்சி, பூண்டு, தயிர் போன்ற உணவுகள், இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியைத் தரக் கூடியவை. எப்போதும், வெதுவெதுப்பான தண்ணீர் குடிப்பது, தினமும் குறைந்தது, 15 நிமிடங்கள் சூரிய ஒளியில் இருப்பது அவசியம்.
டாக்டர் வி.எஸ். நடராஜன்முதியோர் நல மருத்துவர்சென்னை044 - 2641 2030