பல் சீரமைப்பில் நவீன சகிச்சை
* எனக்கு சைனஸ் தொல்லை உண்டு. இதனால் பல் வலி வருமா? மற்ற பல் வலிக்கும் சைனசினால் ஏற்படும் பல் வலிக்கும் என்ன வித்தியாசம்?சைனஸ் என்பது கன்னத்தின் இருபுறமும் இருக்கும் காற்று நிரம்பிய பகுதி. இதனுள் அடைப்பு ஏற்படும்போது ஒருவித அழுத்தம் உருவாகும். இதனால் சைனசில் வீக்கம் மற்றும் வலி ஏற்படும். இந்த வலி கண்ணுக்கு கீழ் இருந்து கன்னம் மற்றும் மேல் பற்கள் வரை பரவும். மற்ற பல் வலிக்கும் சைனசினால் வரும் பல் வலிக்கும் உள்ள முக்கியமான வித்தியாசம் எந்த பல்லிலும் சொத்தையோ ஈறு நோயோ இல்லாமல் வலி மட்டும் இருக்கும். கன்னத்தை அழுத்தும்போது வலி அதிகமாகும்.படுக்கும் பொழுதும் எழுந்து நடக்கும்போதும் தலையை அசைக்கும்போதும் வலி அதிகமாகும். இந்த வகை பல் வலி குறைவதற்கு சைனசில் உள்ள வீக்கம் குறைய வேண்டும். முதலில் பல் மருத்துவரிடம் பரிசோதனை செய்து வலி சைனசில் இருந்து வருவதை உறுதி செய்ய வேண்டும். பின்பு அதற்குரிய சிகிச்சை செய்யவும்.* எனக்கு முன் பற்கள் கோணலாக உள்ளன. பல் வரிசையும் சீராக இல்லை. இதற்கு கம்பி போட்டு சரி செய்ய வேண்டும் என பல் மருத்துவர் கூறியுள்ளார். பற்களில் கம்பி போடும்போது பார்பதற்கு வாயில் உலோகம் தெரிவது போன்ற தோற்றம் இருப்பது எனக்கு பிடிக்கவில்லை. இதற்கு வேறு ஏதாவது வழி இருக்கின்றதா?நவீன சிகிச்சை முறையில் இதற்கு தீர்வுகள் உண்டு. கம்பி போடுவதற்காக பற்களில் பொருத்தப்படும் பிராக்கெட் என்பவை உலோகத்தால் ஆனது. இப்போது அவை செராமிக்கிலும் கிடைக்கின்றன. இவற்றை பற்களில் பொருத்தும்போது பற்களுக்கும் இவற்றிற்கும் வித்தியாசமே இல்லாமல் இருக்கும். இதனால் உலோகம் தெரிவது போன்ற தோற்றம் இருக்காது. இதற்கு மற்றொரு தீர்வு, இந்த உலோகத்தினால் ஆன பிராக்கெட்களை பற்களின் உட்புறம் பொருத்தலாம். இதற்கு லிங்குவல் ஆர்த்தோடான்டிக்ஸ் என்று பெயர். இந்த முறையிலும் வெளிப்பார்வைக்கு உலோகம் தெரியாமல் இருக்கும். சிகிச்சை காலத்திலும் சுத்தம் செய்யும் முறையிலும் வித்தியாசம் எதுவும் கிடையாது.-டாக்டர் ஜெ. கண்ணபெருமான் பல் சிகிச்சை நிபுணர், மதுரை, 94441 54551