டாக்டரை கேளுங்கள்
ஸ்வாதி, மதுரை: வீட்டில் ஒருவருக்கு ஜலதோஷம் வந்தால் மற்றவருக்கு பரவாமல் காப்பது எப்படி. காய்ச்சல் இருக்கும் போது தலைக்கு குளிக்கலாமா.ஜலதோஷம் சரியாக ஒருவாரம் ஆகும். அதுவரை வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்வதோடு முகக்கவசம் அணிந்து கொள்ளுங்கள். இருமல், தும்மல் மற்றும் மூக்கை சீந்தும் போது கைக்குட்டையால் வாய், மூக்கை மூடிக் கொள்ளுங்கள். முதியவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், கர்ப்பிணி, குழந்தை, இணைநோய் உள்ளவர்கள் வீட்டில் இருந்தால் அருகில் செல்லாதீர்கள். அறைக்கு 'ஏசி' போடாதீர்கள். வெந்நீர் அருந்துவதோடு நீராவி பிடிக்கலாம். கூட்டம் கூடும் இடங்களில் முகக்கவசத்துடன் தனிமனித இடைவெளியை பின்பற்றுங்கள்.கடுமையான காய்ச்சல் இருக்கும் போது உடலில் சக்தி குறைந்திருக்கும். இந்த நிலையில் தலைக்கு குளித்தால் இன்னும் சிறிது சக்தி குறைந்துவிடும். பொதுவாக உடலின் சக்தி குறையாமல் பார்த்துக் கொண்டால் தான் காய்ச்சல் விரைவில் குணமாகும். மேலும் அதிக சூடான அல்லது அதிகம் குளிர்ந்த தண்ணீரிலும் ஷவரிலும் குளிக்கும் போது திடீரென உடலின் வெப்பநிலை மாறும். இதனால் உடல்நிலை சீர்கெடலாம். தண்ணீரில் நனைத்த துணியால் உடலை சுத்தப்படுத்திக் கொள்ளலாம்.- டாக்டர் கு. கணேசன் பொதுநல மருத்துவ நிபுணர் ராஜபாளையம்சங்கர், திண்டுக்கல்: மது குடிக்கும் பழக்கத்திலிருந்து விடுபடுவது எப்படி...மது பழக்கத்திலிருந்து மீள நினைப்பவர்கள் தங்கள் மனதை ஒருநிலைப்படுத்தி 66 நாட்கள் சரியாக செயல்பட வேண்டும் என்ற மனநிலைக்கு வரவேண்டும். அதில் முதல் 22 நாட்கள் மதுவை பற்றி நினைக்காமல் தங்கள் சிந்தனையை வேறு பக்கம் திசை திருப்ப வேண்டும். அது மிகவும் கடினமான மனநிலையை ஏற்படுத்தும். 2 வது 22 நாட்கள் கடைபிடிக்கும் பழக்கத்தை விரும்ப நேரிடும். கடைசி 22 நாட்கள் முன்னதாக நாம் கடை பிடித்த நல்ல பழக்கங்கள் அப்படியே நம் வாழ்வில் தொடரும். இந்த நாட்களை கடை பிடிப்பவர்கள் ஒவ்வொரு நாளும் உங்களை நீங்களே பாராட்டி கொள்ள வேண்டும். அது உற்சாகத்தை ஏற்படுத்தும்.மது பழக்கத்தில் இருப்பவர்கள் தங்கள் கவனத்தை விளையாட்டில் திருப்பி பொழுது போக்கிற்காக புத்தகம் எழுதுவது, படிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதாலும் அதிலிருந்து வெளிவரலாம். ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும். எல்லாவற்றிற்கும் நம்முடைய மனம் தான் காரணம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.-டாக்டர் உமாதேவிதுறைத் தலைவர் மனநல மருத்துவம்அரசு மருத்துவக்கல்லுாரிதிண்டுக்கல்மணிகண்டன் பாலகிருஷ்ணாபுரம்: நான் மூன்று ஆண்டுகளுக்கு முன் கண் அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். சில மாதங்களாக கண் உறுத்தலாக உள்ளது. இதனை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்.கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொண்டதால் கண் உறுத்தல் ஏற்படாது. கண் அறுவை சிகிச்சை அதிநவீன முறையில் மேற்கொள்ளப்படுகின்றன. கண்களில் கண்ணீர் வறட்சி, ஊட்டசத்து பற்றாக்குறையால் ஏற்படுகிறது. நீண்ட நேரம் அலைபேசி பயன்படுத்துதல், 'ஏசி' அறையில் அதிக நேரம் செலவிடுவது, வெப்பநிலை உள்ளிட்ட காரணங்களாலும் கண்களில் உறுத்தல் ஏற்படலாம். இதனை தவிர்க்க உலர் பழங்கள், முந்திரி, பாதாம், மீன் உணவுகள் எடுத்துக்கொள்ள வேண்டும். டாக்டர் பரிந்துரையில் ஒமேகா 3 பேட்டி ஆசிட் கொண்ட மாத்திரைகள் எடுத்துக்கொள்ளலாம். துாங்குவதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன் அலைபேசி, கணினி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.- டாக்டர் மனோரஞ்சன்முதுநிலை கண் அறுவை சிகிச்சை நிபுணர், தேனிவி.நாகேந்திரன், ராமநாதபுரம்: தொண்டை வலியால் உணவருந்த முடியாமல் தவிக்கிறேன். இதற்கு தீர்வு என்ன.தொண்டை வலி என்பது சாதாரண வலியாகவும் இருக்கலாம். இதற்கு மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டும் தீர்வு கிடைக்காதவர்கள் டாக்டரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். காரணம் தற்போது தலை, கழுத்து புற்று நோய் பாதிப்பு அதிகளவில் ஏற்படுகிறது. புற்று நோய்க்கான காரணங்களில் புகை பிடித்தல், மது அருந்துதல், மற்றும் மனிதப்பாப்பிலோமா வைரஸ் தொற்றும் அடங்கும். முறையற்ற செக்ஸ் முறைகளால் இந்த வைரஸ் இளைஞர்களை அதிகம் பாதிக்கிறது. இதிலிருந்து பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். சிறு வயது, பருவ வயதில் இந்த தடுப்பூசியை போட வேண்டும். தடுப்பூசி போட்டவர்களுக்கு தலை, கழுத்து புற்று நோய் பாதிப்பு ஏற்படுவதில்லை. எனவே தடுப்பூசி போடுவதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.-டாக்டர் எம்.சுரேஷ்தலை, கழுத்து அறுவை சிகிச்சை நிபுணர்எய்ம்ஸ் மருத்துவக்கல்லுாரி மதுரை (இருப்பு: ராமநாதபுரம்)அ.ஈஸ்வரன், சிவகங்கை: எனக்கு சர்க்கரை அளவு 270. கால் வீக்கமாக உள்ளது. சர்க்கரை அதிகமானால் கிட்னியில் பிரச்னை ஏற்படுமா.பொதுவாக சர்க்கரை நோயாளிகளுக்கு கால் வீக்கம் வருவதுக்கு சில காரணங்கள் உண்டு. சிறுநீரகத்தில் சல்லடை போன்ற நெப்ரான் என்ற வடிகட்டும் திசுக்கள் சேதமடைவதால், புரதம் சிறுநீர் வழியே வெளியேறுவது, சிறுநீரக செயலிழப்பு, இதய பலகீனம் அடைவதால் ஏற்படும். வயிறு வீக்கம் ஏற்பட அஜீரணம், மலச்சிக்கல், சிறுநீரக செயலிழப்பு மூலம் நீர் சேர்வது, வயிறு, குடல் சுருங்கி விரியும் தன்மை குறைபாட்டல் ஏற்படும். இந்த அறிகுறி இருந்தால் அருகில் உள்ள டாக்டரை அணுகி உடல் பரிசோதனை செய்ய வேண்டும்.சிறுநீர் பரிசோதனை செய்து அதில் புரதம், கிருமிகள் உள்ளனவா என்று அறிந்து அதற்கேற்ப சிகிச்சை பெற வேண்டும். சர்க்கரை அளவை உடலில் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். தினந்தோறும் நடை பயிற்சி மேற்கொள்ள வேண்டும். உணவில் கட்டுப்பாடு அவசியம்.-டாக்டர் கிருஷ்ணராஜன்பொது மருத்துவம்மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, சிவகங்கைகி.முத்துக்குமார், சிவகாசி: எனக்கு 28 வயது ஆகிறது. லோடுமேன் வேலை செய்கிறேன். அடி வயிறு வீக்கமாக உள்ளது. அடிக்கடி வலி ஏற்படுகின்றது. என்ன காரணம் எவ்வாறு சரி செய்யலாம்.அடிவயிறு வீக்கமாக இருப்பதால் குடல் இறக்கமாக இருக்கலாம். அதிக எடையை துாக்குவதால் இது ஏற்படும். எனவே அதிக எடையை துாக்குவதாக இருந்தால் கண்டிப்பாக பெல்ட் அணிய வேண்டும். கண்டிப்பாக லேப்ராஸ்கோப்பி, அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.- டாக்டர் பாரத்அறுவை சிகிச்சை நிபுணர்இ.எஸ்.ஐ., மருத்துவமனைசிவகாசி