உள்ளூர் செய்திகள்

டாக்டரைக் கேளுங்கள்

பவித்ரா, மதுரை: எனக்கு அல்சர் அறிகுறிகள் உள்ளன. 'எண்டோஸ்கோப்பி' செய்ததில் நார்மல் என்று வந்தது. நான் என்ன சிகிச்சை எடுத்துக்கொள்வது?இந்த பிரச்னை இப்போது அதிகம் பேரிடம் காணப்படுகிறது. இவர்கள் அல்சர் அறிகுறிகளைச் சொல்வார்கள். 'எண்டோஸ்கோப்பி'யில் அல்சர் இல்லை என்று முடிவுகள் வருவதால் குழப்பம் வரும். இதை 'அல்சர் இல்லாத டிஸ்பெப்சியா' என்று சொல்வோம். இரைப்பையில் புண்ணோ, அழற்சியோ இல்லாவிட்டாலும் செரிமானம் ஆகாத உணர்வு இருக்கும். இதனால் இவர்களுக்கு மனச்சோர்வு ஏற்படும். மனச்சோர்வு இரைப்பைச் சோர்வாக மாறும். மனச்சோர்வும் இரைப்பைச் சோர்வும் ஒரு சுழற்சியாக மாறி, செரிமானப் பிரச்னைகளை அதிகப்படுத்தும். இதற்கு நேரடி தீர்வு இல்லை. இவர்கள் உடலில் எந்தப் பிரச்னையும் இல்லை என்பதை உணர்த்தி, மனச்சோர்வைக் குறைக்க கவுன்சலிங் தருவதுதான் ஒரே வழி.- டாக்டர் கு.கணேசன், பொது மருத்துவ நிபுணர், ராஜபாளையம்கந்தசாமி, வேடசந்துார்: எலும்பு சம்பந்தமான பாதிப்பிற்கு டெகா ஸ்கேன் எடுக்க வேண்டும் என்கின்றனர். டெகா ஸ்கேன் என்றால் என்ன?எலும்பு தேய்மானம் இருக்கும் நோயாளிகளை உறுதி செய்ய, எலும்பு தேய்மானம் அதிகம் இருந்தால் எலும்பு முறிவை தடுக்க, எலும்பின் அபாய நிலையை நவீன முறையில் மிக துல்லியமாக அறிவது தான் டெகா ஸ்கேன். எலும்பு தேய்மானம் உள்ளவர்களுக்கு முதுகு வலி, எலும்பு முறிவு, பற்கள் ஈறுகளில் பிரச்னைகள் உள்ளிட்டவை ஏற்படும். உணவில் வைட்டமின், கால்சியம் நிறைந்த உணவுகளை எடுத்து கொள்ளுதல், தினசரி உடற்பயிற்சி அவசியம். புகை பிடித்தல், மது அருந்துதலை தவிர்த்தல் நல்லது. எலும்பின் ஸ்திரத்தன்மையை அறிய டெகா ஸ்கேன் பரிசோதனை அவசியம்.- டாக்டர் எஸ்.லோகநாதன், தலைமை மருத்துவர், அரசு மருத்துவமனை, வேடசந்துார்எல்.கணேசன், பண்ணைப்புரம்: என் மனைவிக்கு மூட்டுவலி தீராத பிரச்னையாக உள்ளது. அதை குணப்படுத்த சிகிச்சை முறை, ஆலோசனை கூறுங்கள்?மூட்டு வலி, இடுப்பு வலி, கழுத்து எலும்பு தேய்மானத்தால் ஏற்படும் வலி, மணிக்கட்டு வலிகள் என பல உள்ளன. குறைவான உடல் பயிற்சி, வைட்டமின் டி குறைபாடு, நீண்ட நேரம் உட்கார்ந்து பணியாற்றுவது, கழுத்தை மடக்கி அலைபேசி பார்த்தல், சரியான இருக்கை தேர்வு செய்யாமல் இருத்தல் போன்ற காரணங்களால் வலி ஏற்படும்.மூலிகைகளை அரைத்து தடவி வலி உள்ள இடங்களில் கட்டுவது, மருந்து பொருளை முட்டை வெள்ளை கருவுடன் கலந்து பற்று போடுவது, இலைகள் , வேர்கள் , மூலிகை பொடிகளை துணியில் கட்டி ஒத்தடம் இடுவது என சிகிச்சை முறைகள் உள்ளன. இது தவிர உடல் முழுவதும் எண்ணெய் தடவி செய்யும் தொக்கண சிகிச்சை, சித்த வர்ம சிகிச்சைகளும் உள்ளன.- டாக்டர் சுவாமிநாதன், சித்தா டாக்டர் அரசு மருத்துவமனை, உத்தமபாளையம்கே.கருணாகரன், ராமநாதபுரம்: எனக்கு சமீபத்தில் சொரியாசிஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கும் நோய் பரவுமா. நோயை குணமாக்குவது எப்படி.?சொரியாசிஸ் என்பது தொற்று நோய் அல்ல. பரவும் என்ற அச்சம் வேண்டாம். இந்த பாதிப்பு அலர்ஜியின் காரணமாக வரும். சிலருக்கு மரபு ரீதியாக வர வாய்ப்பு உள்ளது. இந்நோய் பாதிக்கப்பட்ட பகுதியில் தோலின் வளர்ச்சி அதிகமாக இருக்கும். அதனால் அப்பகுதி தடிப்பாகவும், செதில் செதிலாகவும் காணப்படும்.தோலின் எந்த பகுதியில் வேண்டுமானாலும் பாதிப்பு ஏற்படும். புகைப்பிடிக்கும் பழக்கத்தை விடுவதன் மூலமும், நோய் பாதிப்பு குறித்த மன அழுத்தத்தை தவிர்ப்பதன் மூலம் நோயை கட்டுக்குள் கொண்டு வரமுடியும்.- டாக்டர் ராமசுப்பிரமணியம், துணை பேராசிரியர், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, ராமநாதபுரம்ரா.முத்துகிருஷ்ணன் சிவகங்கை: உடலில் வெண்மையான தேமல் உள்ளது. எப்படி சரி செய்வது?சித்த மருத்துவ நோய் கணிப்பின்படி இது உடலில் உள்ள காற்று (வாதம்) தனது அளவில் அதிகரித்தும், நீர் (கபம்) தன்மை திரிந்தும் இருக்கின்ற போது தோலில் தோன்றும் நோய் நிலை. நவீன மருத்துவ கண்ணோட்டத்தின் படி இதனை பூஞ்சை காளான் தொற்றால் ஏற்படுகின்ற டீனியா வெர்சிகாலர் என்று கூறுவார்கள்.இதை குணப்படுத்த வாரம் ஒரு முறை எண்ணெய் குளியல் குளிக்க வேண்டும். தினமும் காலை மாலை என இரு முறை குளிக்க வேண்டும். இரவு கண் விழிப்பதை தவிர்க்க வேண்டும். திப்பிலி பொடி ஒன்று அல்லது இரண்டு சிட்டிகை அளவு காலை இரவு உணவுக்குப் பின் தேனில் குழைத்து 30 நாள் சாப்பிடலாம்.வயிற்றுப்புண் உள்ளவர்கள் திப்பிலி குறைவாகவும் தேன் மிகுதியாகவும் பயன்படுத்தவும். மேற்பூச்சாக சீமை அகத்தி இலை சாற்றில் சிறிதளவு எலுமிச்சை பழச்சாறு ஒரு சிட்டிகை சோற்றுப்பு கலந்து தேமல் உள்ள இடங்களில் பூசி இரண்டு மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும். பூச்சு உடலில் எரிச்சலை ஏற்படுத்தினால் எலுமிச்சை மற்றும் உப்பை தவிர்த்து பயன்படுத்தவும் . ஆடைகளை தினமும் துவைத்து பயன் படுத்த வேண்டும்.- டாக்டர் ச.சரவணன், உதவி சித்த மருத்துவ அலுவலர், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பிரான்மலை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !