உள்ளூர் செய்திகள்

டாக்டரைக் கேளுங்கள்

பகவதி, மதுரை: 60 வயதான எனக்கு நாக்கில் அடிக்கடி சிறு கீறல் போன்ற பிளவு ஏற்படுகிறது. அது சரியாகி ஒரு வாரம் கழித்து நாக்கில் இன்னொரு இடத்தில் சிறு கீறல் போன்று ஏற்படுகிறது. இதற்கு என்ன காரணம்?இதனை பிளவுபட்ட நாக்கு என்று மருத்துவ உலகில் கூறுவர். பிளவுபட்ட நாக்கு என்பது நாக்கின் மேல் மேற்பரப்பில் பள்ளங்கள் இருப்பது போன்ற அமைப்பை குறிக்கும். இது பெரும்பாலும் மையத்திலிருந்து ஒரு கதிர்வீச்சு போல் இருக்கும். இது புவியியல் நாக்கு, மெல்கர்சன்-ரோசென்டல் நோய்க்குறி (பிளவுபட்ட நாக்கு, முக வாதம் மற்றும் உதட்டு அழற்சி), டவுன் சிண்ட்ரோம், சொரியாசிஸ் மற்றும் வைட்டமின் பி குறைபாடுகளால் ஏற்படுகிறது. இது பொதுவாக தீங்கு விளைவிப்பதில்லை. இதற்கு நாக்கினை மென்மையாக சுத்தம் செய்து பராமரித்து போதுமான நீர்ச்சத்துடன் வைத்திருக்க வேண்டும். கிருமிநாசினியுடன் கூடிய வாய் கொப்பளிப்பான்களை பயன்படுத்த வேண்டும். ஊட்டச்சத்து குறைபாடுகளை சரிசெய்தல் மூலம் இதனை குணப்படுத்தலாம்.- டாக்டர் பி மீனா பிரியதர்ஷினி, காது மூக்கு தொண்டை சிறப்பு நிபுணர், மதுரைகிருஷ்ணவேணி, வடமதுரை: உறவினரின் 5 வயது மகனுக்கு டைப் 1 சர்க்கரை நோய் பாதித்துள்ளது. வாழ்நாள் முழுவதும் இன்சுலின் ஊசி போட வேண்டும் என்கின்றனர். இது அவசியமா?டைப் 1 சர்க்கரை நோயில் கணையம் சில காரணங்களால் இன்சுலின் சுரப்பதை முழுவதுமாக நிறுத்தி விடுகிறது. நம் நாட்டில் இருக்கும் சர்க்கரை நோயாளிகளில் 5 முதல் 10 சதவீதம் பேருக்கு இந்நோய் உள்ளது.இன்சுலின் சுரப்பு முற்றிலும் இல்லாததால் மாத்திரை, மூலிகை கசாயம், உணவுக்கட்டுப்பாடு போன்றவற்றால் குணமாக்க முடியாது. வாழ்நாள் முழுவதும் டாக்டர் கூறியபடி இன்சுலின் ஊசி அவசியம்.இன்சுலினை நிறுத்தினால் ரத்த சர்க்கரை அதிகரித்து, கீட்டோ அசிடோசிஸ் என்ற உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படலாம். உடல் எடை குறைதல், அதிக தாகம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், வாந்தி மயக்கம் ஆகியவை முக்கிய அறிகுறிகள். சரியான இன்சுலின் அளவு, உணவுத்திட்டம், உடற்பயிற்சி, ரத்த சர்க்கரை அளவு கண்காணிப்பு, பெற்றோர் விழிப்புணர்வு ஆகியவற்றால் குழந்தையின் கல்வி, விளையாட்டு, வளர்ச்சி அனைத்திலும் மற்ற குழந்தைகளை போல ஆரோக்கியமாக வாழ முடியும். காய்ச்சல் போன்ற உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அந்த நேரங்களில் டாக்டரை அணுகுவது அவசியம்.- டாக்டர் ஜே.சி.சேகர் பொது மருத்துவர், வடமதுரைஆர்.அரவிந்தன், ராமநாதபுரம்: எனக்கு 35 வயதாகிறது. உடல் பருமன், மன அழுத்தத்தால் பணியில் கவனம் செலுத்த முடியவில்லை. யோகா மற்றும் இயற்கை மருத்துவம் மூலம் இதற்கு தீர்வு காண முடியுமா?உடலுக்கு தேவையான அளவை விட அதிக கலோரிகள் கொண்ட உணவுகளை தொடர்ந்து உண்பது மற்றும் போதிய உடல் உழைப்பு இல்லாததால் உடல் பருமன் ஏற்படுகிறது. அதிக உடல் பருமனால் சிலருக்கு மன அழுத்தம் உருவாகும். அதனால் பணியில் கவனம் செலுத்த முடியாமல் போகலாம். யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தில் உள்ள சிகிச்சை முறைகள் உடலின் வளர் சிதை மாற்றத்தை மேம்படுத்துவதால் உடல் எடை குறையும்.தினமும் சரியான முறையில் யோகாசனம், உடற்பயிற்சி செய்து வந்தால் உடலில் சேமித்து வைக்கப்பட்டுள்ள கொழுப்பு படிப்படியாக எரிக்கப்படும். பழங்கள், காய்கறிகள், முளைகட்டிய தானியங்கள் உள்ளிட்ட சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். சர்க்கரை, எண்ணெய் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.போதிய துாக்கம், தண்ணீர் குடிப்பது உடலை சமநிலையில் வைத்திருக்க உதவும். இதனால் மன அழுத்தம் குறையும். உடல் எடையை திடீரென குறைக்க முயற்சிக்காமல் மாதத்திற்கு 2 முதல் 3 கிலோ என்ற அளவில் முயற்சிக்க வேண்டும்.-டாக்டர் வி.ஆறுமுகராஜ் யோகா, இயற்கை மருத்துவம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, ராமநாதபுரம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !