உள்ளூர் செய்திகள்

மாதவிடாயும் மாத்திரைகளும்!

மாதவிடாய் வலி நிவாரணியாக நம் நாட்டில் டாக்டர்களால் பொதுவாக சிபாரிசு செய்யப்படும் மாத்திரை மெப்டல் பிளஸ். இதில், மெபெனமிக் அமிலம் என்பது, அந்த வலி நிவாரணியில் உள்ள வேதிப் பொருள். இந்த அமிலம் பல பக்க விளைவுகளை ஏற்படுத்துவதாகவும், அதனால் கவனத்துடன் பயன்படுத்த வேண்டும் என்றும் பொது மக்களை எச்சரித்திருப்பதாக செய்திகள் வெளி வந்துள்ளன. மாதவிடாய் வலி தவிர, ருமட்டாய்டு ஆர்த்ரைடிஸ், ஆர்த்தோ ஆர்த்ரைடிஸ், பல் வலி, காய்ச்சல், அழற்சி போன்ற பல்வேறு கோளாறுகளுக்கும் இந்த மாத்திரை தரப்படுகிறது.மருந்து, மாத்திரைகளால் அலர்ஜி ஏற்பட்டால், மாத்திரை எடுத்த சிறிது நேரத்தில், சிலருக்கு படபடப்பு வரும். சிலருக்கு மயக்கம் வரலாம்.ரத்த அழுத்தம் குறையலாம். ஆனால், மெப்டல் பிளஸ் எடுத்தால், 2 - 8 வாரங்கள் கழித்தே பாதிப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. மருந்துகளால் தான் காய்ச்சல், தோலில் அரிப்பு போன்ற பக்க விளைவுகள் இருக்கிறது என்பதை உணர்வதும் இல்லை; டாக்டரிடம் இது பற்றி சொல்வதும் கிடையாது.ஒரு நோயாளிக்கு குறிப்பிட்ட நாட்கள், வாரங்களுக்கு மருந்து எழுதி கொடுத்தால், அதன்பின், டாக்டரிடம் வந்து ஆலோசனை பெற்று அதே மாத்திரையை தொடர்வதா, நிறுத்துவதா, வேறு மாத்திரை அவசியமா என்று தெரிந்து பின்பற்ற வேண்டும்.பலர் அப்படி செய்வதில்லை. தொடர்ந்து பல மாதங்கள் அதே மாத்திரையை சாப்பிடுகின்றனர். பலர், உடல்நிலை சீரானதும் மாத்திரையை நிறுத்திவிட்டு, பிரச்னை மீண்டும் வந்தால் பழைய மாத்திரையை அவர்களாகவே தொடர்கின்றனர். அதிகப்படியான மருந்துகளை பயன்படுத்தும் போது, அலர்ஜி மட்டுமல்ல, வயிற்றில் புண், ரத்தக்கசிவு போன்றவற்றையும் ஏற்படுத்தலாம்.பாராசிட்டமால் என்பது பொதுவாக அனைவரும் பயன்டுத்தும் வலி நிவாரணி. இதனால் பக்க விளைவுகள் வராது. ஆனால், உள்ளுறுப்புகளில் சிதைவை ஏற்படுத்தலாம். வலி வரும் சமயங்களில் பாராசிட்டமால் சாப்பிடுவது தவறில்லை.ஆனால், அடிக்கடி வலி வந்தால், அதன் காரணத்தை தெரிந்து அதற்கான சிகிச்சை செய்யாமல், பாராசிட்டமால் எடுத்துக்கொள்வது தவறு. தொடர்ந்து இப்படி பல ஆண்டுகள் சாப்பிடுவதால், கல்லீரல் சிதைவில் துவங்கி, செயலிழப்பை ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகம்.மாதவிடாயை தள்ளிப் போடுவதற்கு பயன்படும் மாத்திரைகள் அனைத்தும் ஹார்மோன் மாத்திரைகள். முதல் தடவை மாதவிடாயை தள்ளிப் போடுவதற்கு டாக்டரின் ஆலோசனையுடன் வாங்கிய மாத்திரைகளை, அடுத்தடுத்த முறை அவர்களாகவே சாப்பிடுகின்றனர். இது சரியான அணுகுமுறை இல்லை.காரணம், டாக்டரிடம் ஆலோசனை பெற்ற போது இருந்த நிலையில் கர்ப்பப்பையின் தன்மை, உடல் நிலை அடுத்தடுத்த மாதங்களில் இருக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. அந்த சமயத்தில் சிறிய கட்டிகள் இருந்து, ஹார்மோன் மாத்திரைகளால் அவை பெரிதாகி இருக்கலாம். மாதவிடாய் வலி, மாதவிடாய் தள்ளிப் போக, ஒழுங்கற்ற மாதவிடாய் போன்ற பிரச்னைகளுக்கு தரப்படும் ஹார்மோன் மாத்திரைகளை, டாக்டரின் ஆலோசனை இல்லாமல் நீண்ட நாட்கள் பயன்படுத்தக் கூடாது.தவிர்க்க இயலாத சூழலில், தற்காலிகமாக மாதவிடாய் தேதியைதள்ளிப் போடுவதற்கு 4 - 10 நாட்கள் மாத்திரை சாப்பிடுவதால் பிரச்னை வராது. உடலில் புதிதாக ஏதாவது மாற்றம் நடந்துள்ளதா என்பது தெரியாமலேயே, பழைய மருந்து சீட்டை வைத்து மாத்திரை வாங்கி உபயோகிப்பது தவறு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்