ஒரு மணி நேர தாமதம் உயிருக்கு பாதகம்
சர்க்கரைநோய், உயர் ரத்த அழுத்தம், கொழுப்பு ஆகியவற்றை சரிவர கட்டுப்படுத்தப் படவில்லையென்றால் அது இதயத்திற்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் அடைப்புகளை உண்டாக்கி மாரடைப்புவரை கொண்டு சென்றுவிடும். இதில் இன்னொரு பெரிய ஆபத்தும் இருக்கிறது. மாரடைப்பு வருவதற்கு முன் வழக்கமாகத் தோன்றும் அறிகுறிகள் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்குத் சில சமயம் தோன்றாது.வேணு ஒரு அரசு அதிகாரி. வயது 56. பத்து வருடங்களாக சர்க்கரை நோய் இருக்கிறது. ஏதோ போகிற போக்கில் மருந்து மாத்திரை சாப்பிடுவாரேயொழிய மருத்துவரிடம் சரியாகக் கலந்தாலோசிக்க மாட்டார். முறையான சிகிச்சையும் எடுத்துக்கொள்ளவில்லை. நேரமின்மை, வேலை அதிகம், 'நான் நன்றாகத்தானே இருக்கிறேன், உணவு கட்டுப்பாட்டிலேயே இந்த நோயை ஓட்டிவிடலாம்' என்ற தவறான கருத்து போன்ற பல காரணங்களைச் சொல்லலாம்.ஒருநாள் இரவு ஒரு மணிக்கு வேணுவிற்கு இடது தோளில் வலி வந்தது. பயங்கரமாக வியர்த்துவிட்டிருந்தது. மனைவியை எழுப்பி தோள்பட்டையைத் தேய்த்து விடச்சொன்னார். ஆனால் அவர் மனைவியோ “இப்போதே மருத்துவமனைக்கு செல்லலாம்” என்றார். எல்லாம் அறிந்த வேணுவோ “இது வெறும் கைக்குடைச்சல்தான், விக்ஸ் தடவினால் சரியாகி விடும், காலையில் பார்த்துக்கொள்ளலாம்” என்று சொல்லிவிட்டார். ஒரு மணி நேரம் கழித்து மனைவி எதேச்சையாகக் கண் விழித்துப் பார்த்தபோது உடல் சில்லிட்டு போய் அவர் நினைவு இல்லாமல் கிடந்தார். மருத்துவமனைக்கு கொண்டு போய், இசிஜி சோதனையில் மாரடைப்பு ஏற்பட்டது தெரியவந்தது. நாடி தளர்ந்துபோய் இதயம் சட்டென்று நின்றுவிட்டது. நாற்பது நிமிடங்கள் மருத்துவர்கள் பாடுபட்டார்கள். வேணுவை காப்பாற்ற முடியவில்லை.கடைசியாக டாக்டர் சொன்ன வார்த்தைகள் அவரின் மனைவிக்கு அதிர்ச்சியைக் கொடுத்தன'ஒரு மணி நேரம் முன்பு வந்திருந்தால் உங்கள் கணவரை நிச்சயமாகக் காப்பாற்றி இருக்கலாம்.'இந்த நிகழ்விலிருந்து நாம் கற்கவேண்டிய பாடங்கள்.30-40 சதவிகிதம் வரை சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு மாரடைப்பு வந்தாலும் நெஞ்சுவலி வராது (சைலன்ட் ஹார்ட் அட்டாக்) இடது தோள்பட்டைக் குடைச்சல், இடது கை வலி, வியர்வை இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி இசிஜி பரிசோதனை செய்ய வேண்டும்.குப்பென்று வியர்த்துக்கொட்டுதல், தலை சுற்றுதல், கழுத்துவலி, மேல்வயிறு வலி ஆகியவை இருந்தாலும் காலம் கடத்தாமல் மருத்துவமனைக்குச் செல்லவேண்டும். ஒரு இசிஜி சுருள் படத்திற்கு ஆகும் செலவு நுாறு ரூபாய், உயிரின் விலை...?இதயத்தின் கீழ் சுவர் பகுதியில் மாரடைப்பு வந்தால் வயிற்று புண், வலி ஆகியவற்றுக்கு இருக்கும் அதே அறிகுறிகள் இருக்கும். அல்சர் வலி என்று நினைத்து ஜெலுசில் டானிக் குடித்து, பலர் துாக்கத்தில் உயிர் விடும் கதைகள் ஏராளம் எந்த வகையான நெஞ்சுவலி வந்தாலும் உடனடியாக மருத்துவரை அணுகுதல் அவசியம்.வாசகர்களே , மேலே சொன்ன கதை கற்பனை அல்ல , உங்களை பயமுறுத்த எழுதும் நோக்கமும் அல்ல. சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு மாரடைப்புக்கான விழிப்புணர்வை உயர்த்தும் நோக்கம் மட்டுமே என் நோக்கம். இன்று உள்ள நவீன மருத்துவத்தில் மாரடைப்பு வந்தால், ஆன்ஜியோபிளாஸ்ட்டி போன்ற மருத்துவ முறைகள் உயிர் காக்கும் நண்பர்கள்.ஆயினும் காலம் பொன் போன்றது. ஆங்கிலத்தில் 'டோர் டு நீடில் டைம் ' என்பார்கள். அதாவது அறிகுறி வந்த நிமிடத்திலிருந்து, உங்கள் வீட்டு கதவிலிருந்து மருத்துவமனையின் கதவிற்கு வரும் நேரம் மிகவும் குறைவாக இருந்தால் உயிரை காப்பாற்றுவது சுலபம். சர்க்கரை நோயை வருமுன் காப்போம், வந்தால் வீழ்த்துவோம்.டாக்டர் கிருஷ்ணன் சுவாமிநாதன்கோவை94432 91655