உள்ளூர் செய்திகள்

எலும்புகளை வலுவாக்கும் இருளர்களின் எலும்பூட்டி!

எலும்பு சம்பந்தப்பட்ட நோயில் முக்கியமானது ஆஸ்டியோபோரோசிஸ். ஆஸ்டியோ என்றால் எலும்பு, போரோசிஸ் என்பது ஓட்டைகள். எலும்புகளுக்குள் இருக்கும் ஓட்டைகள் பெரிதாவதால் ஏற்படும் நோய் இது. எலும்பை குறுக்குவாட்டில் வெட்டிப் பார்த்தால், ஒன்றுடன் ஒன்று இணைந்த, கண்ணுக்குத் தெரியாத சிறு துகள்களுடன் தேனீ கூடு போன்று இருக்கும். இதனுள் கொலாஜன் என்ற ஜவ்வு நிறைந்த எலும்பு மஜ்ஜையும், ஆஸ்டியோன்ஸ் என்ற கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள், செலினியம் என்ற நுண்ணுாட்டச் சத்தும் சேர்ந்து எலும்பு உருவாகிறது. வயதாகும் போது ஏற்படும் சத்து குறைபாடு, நீண்ட காலம் சாப்பிடும் ஸ்டிராய்டு மருந்துகள், சூரிய வெளிச்சம் படாமல் இருப்பது, ஈஸ்ட்ரோஜென், டெஸ்டிரோஸ்டிரான் ஹார்மோன் குறைபாடு உட்பட பல காரணிகளால் எலும்புகளின் அடர்த்தி குறைந்து ஆஸ்டியோ போரோசிஸ் வரும்.ஆயுர்வேதம்குடலில் இருக்கும் உதான, அபான வாயுக்களில் ஏற்படும் பிரச்னை, வயிற்றில் உள்ள அக்னியில் கோளாறுகளை ஏற்படுத்தி, நாளடைவில் செரிமானக் கோளாறாகி, ஆகாரத்தில் உள்ள ரசம், ரத்தம், மாம்சம், மேதஸ் என்கிற நான்கு தாதுக்களில் பிரச்னை ஏற்பட்டு, ஐந்தாவது தாதுவான அஸ்தி என்ற எலும்பு உருவாவதிலேயே பிரச்னை வருகிறது. இறுதியில் வியான, சமான வாயுக்களின் பிரச்னையாகிறது. இதனால், செந்நீர், ஊண் என்கிற தசை, கொழுப்பு, மூளை என்கிற எலும்பு மஜ்ஜை, என்பு என்கிற எலும்பு ஆகிய ஐந்தும் சரியாக உருவாகாமல், எலும்பு உளுத்துப் போகிறது. என்பு உளுத்தல் ஏற்படும் போது, லேசாக அடிபட்டாலும் எலும்பு உடைந்து போகும். முழுமையாக உளுத்துப் போவதற்கு 10 ஆண்டுகளுக்கு முன், ஆஸ்டியோ பீனியா என்கிற பலவீனமாக அதே நேரம் உடையாத நிலையில் எலும்புகள் இருக்கும்போதே கண்டுபிடித்தால், அடுத்த நிலையான ஆஸ்டியோபோரோசிசை தடுக்க முடியும்.கால்சியம் சத்து நிறைந்த உணவுகள் சாப்பிட வேண்டும். காபி, சிகரெட், மது தவிர்ப்பது முக்கியம். யோகா, நடை பயிற்சி, பிராணயாமம் செய்யலாம். தினமும் 10 நிமிடங்களாவது வெயிலில் நிற்க வேண்டும். எலும்புகளுக்கு இயற்கையான வார்னிஷ் எண்ணெய் பசை. எனவே, 60 வயதுக்கு பின், உணவில் எண்ணெய் சேர்ப்பதை தவிர்க்கக் கூடாது. வாரம் ஒரு முறை எண்ணெய் தேய்த்துக் குளிப்பதும் முக்கியம். தினமும் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெயை முட்டிகளில் தடவி குளித்தாலே, சவ்வு தன்மையை பாதுகாக்க முடியும்.சிகிச்சைதேன் கூடு போன்ற எலும்பின் உள்ளே, பிருத்வி என்கிற மண் தன்மையும், காற்றுத் தன்மையும் உள்ளது. இதை சீராக வைக்க கசப்பான நெய் மருந்து அவசியம். டாக்டரின் ஆலோசனையில் பஞ்ச கர்ம சிகிச்சை, மாதம் ஒரு முறை அல்லது தேவைக்கு ஏற்ப மாத்திரா வஸ்தி எனப்படும் 40 - 60 மில்லி அளவில் எண்ணெயை எனிமா முறையில் கொடுப்பதால், பிரச்னையை தவிர்க்கலாம். அஸ்வகந்தா சூரணம், நத்தை பஸ்மம், சீந்தில் சூரணம், ஷீரபலா மாத்திரை, சங்கு பர்ப்பம், பலகரை பர்ப்பம், சிருங்கி பர்ப்பம், முத்து சிப்பி பர்ப்பம், இவையெல்லாம் நல்ல பலன் தரும்.பிரண்டை, வெந்தய துவையலும் நல்லது. உணவில் எந்த அளவுக்கு வெந்தயம் சேர்க்கிறோமோ அந்த அளவுக்கு கொலாஜன் திசுக்களை பாதுகாத்து, எலும்பு உளுப்பதை தடுக்கும். ஆய்வுஇருளர் சமூகத்தினர் எலும்பூட்டி என்கிற மூலிகையை பாரம்பரியமாக பயன்படுத்தி வருகின்றனர். எஸ்.ஆர்.எம்., பல்கலை ஆராய்ச்சி மையத்தில் மேற்கொண்ட ஆய்வில், எலிகளின் எலும்பில் முறிவு ஏற்படுத்தி, இந்த இலைகளை வெளி பூச்சாகவும், உள் மருந்தாகவும் தந்ததில், முறிவு ஏற்பட்ட இடத்தில் கால்சியம் படிமம் ஆவதை கண்டுபிடித்து உள்ளனர். எலும்பு முறிவு ஏற்படும் போது, ஆயுர்வேத சிகிச்சையில் இதை பயன்படுத்தி வருகிறோம். இதை பொடியாக்கி, பாலில் கலந்து குடிப்பதால், நல்ல பலன் அளிக்கும். ஆண்டிற்கு ஒரு முறை 30 - 45 நாட்கள் இதை செய்தாலே போதும்.டாக்டர் மீரா சுதீர், டாக்டர் சுதீர் ஐயப்பன், ஸ்ரீஹரீயம் ஆயுர்வேதம், சென்னை. 99623 50351, 86101 77899


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !