மரணத்தின் விளிம்பில் வாழும் மனிதர்கள்
இதய நோய், சிறுநீரக செயலிழப்பு, ரத்த சோகை... இந்த கூட்டணி, மூன்றாவது அணி போல, வெத்து வேட்டு கூட்டணி அல்ல. இந்த கூட்டணி, மகத்தானது. இதய செயலிழப்பு உள்ளவர்களுக்கு, 40 முதல், 70 சதவீதம், சிறுநீரக செயலிழப்பு வர வாய்ப்புள்ளது.இந்தியாவில் முன்பு, தொற்று நோய்களான, டி.பி., தொழுநோய், காலாரா போன்றவை, அதிகமாக இருந்த காலம் போய், இப்போது, தொற்று நோய்கள் குறைந்து, ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய்களால் ஏற்படும், இதய மற்றும் சிறுநீரக நோய்கள் என்று அதிகமாகி வருகின்றன. இவை, தொற்று நோய்களை விட, அதிவேகத்தில் பரவி வருவதை காண முடிகிறது. முன்பு, குடும்பத்தில் முதியோருக்கு தான் ரத்தக் கொதிப்பு, இதய நோய் இருந்தது. ஆனால், இன்று, மகனுக்கும், மகளுக்கும் கூட உள்ளது. இதய நோய்கள், பல உள்ளன. அவை அனைத்தும், இறுதியில் இதயத்தைச் செயலிழக்க செய்கின்றன. அது தான், 'ஹார்ட் பெய்லியர்' என்பர். இது, இதய நோயின் இறுதி கட்டமாகி விடுகிறது. இதய தசைகளின் செயல்பாடுகளை, அதாவது அதன் செயல்திறனை, இ.எப்., - எஜக்ஷன் ப்ராக்ஷன் என்பர். இதன் செயல் குறைந்து, 'ஹார்ட் பெய்லியர்' வருகிறது.சிறுநீரக நோய்களில் முக்கியமாக, இளம் வயதினருக்கு வருவது, 'குல்மரோ நெப்ரைட்டிஸ்' என்ற சிறுநீரக நோய். அதே, 40, 50 மற்றும் 60 வயதினருக்கு வரும் சிறுநீரக நோய், சர்க்கரை நோயால் வரும், 'டயபெட்டிஸ் நெப்ரோபதி' என்ற ஆபத்தான நோய். நீண்ட காலமாக, ரத்தக் கொதிப்பை கட்டுப்பாட்டில் வைக்கா விட்டால், சிறுநீரக ரத்தக் குழாய் சுருக்கத்தால், சிறுநீரக செயலிழப்பு ஏற்படுகிறது. சிறுநீரக செயலிழப்பு வர முக்கிய காரணம், சரிவர வைத்தியம் பார்க்காமல், சர்க்கரை குறையாமல் இருப்பதே. இதய செயலிழப்புக்கும், சிறுநீரக செயலிழப்பிற்கும், நெருங்கிய தொடர்பு உண்டு. இது, ஆங்கிலத்தில், 'கார்டியோ ரீனல் பெய்லியர்' எனப்படுகிறது. இந்த இரண்டு வியாதிகளும், கொடுமையானவை. அதோடு, பங்காளியாக வந்து சேருவது தான், 'அனீமியா' என்ற ரத்த சோகை நோய்.மூன்று நோய்கள் கூட்டணி இதய நோய், சிறுநீரக செயலிழப்பு, ரத்த சோகை... இந்த கூட்டணி, மூன்றாவது அணி போல, வெத்து வேட்டு கூட்டணி அல்ல. இந்த கூட்டணி, மகத்தானது. இதய செயலிழப்பு உள்ளவர்களுக்கு, 40 முதல், 70 சதவீதம், சிறுநீரக செயலிழப்பு வர வாய்ப்புள்ளது. இதய நோய் உள்ள, 10 பேரில், இரண்டு பேருக்கு சிறுநீரக செயலிழப்பு, ரத்த சோகையும் வருகிறது. மூன்று கூட்டணி உள்ளவர்கள், தனித்தனியாக, அதாவது ஒவ்வொரு வியாதியும் தனியாக, கடுமையாகும் போது, 50 முதல், 100 சதவீதம், மரணத்தை வரவழைக்கிறது. மூன்று வியாதியும் கடுமையாகும் போது, 300 சதவீதம் மரணத்தை வரவழைக்கிறது. அத்தகைய மனிதர்கள் தான், மரணத்தின் விளிம்பில் வாழ்ந்து, நாட்களை கழிப்பவர்கள். நீண்ட நாள் இதய செயலிழப்பானது, எப்படி, சிறுநீரக செயலிழப்பு, ரத்த சோகையை கொண்டு வருகிறது?இதய பம்ப் - இ.எப்., குறைவதால், சிறு நீரகத்திற்கு ரத்தம் குறைகிறது. இதனால், சிறுநீரகத்தின் வேலைத்திறன் குறைந்து, சிறுநீரக செயலிழப்பு ஆரம்பமாகிறது. சிறுநீரகத்திற்கு குறைவாக ரத்தம் செல்வதால், பிராண வாயு குறைகிறது. இதனால், எரித்ரோபாய்ட்டின் என்ற ரசாயன பொருள் உற்பத்தி உடலில் குறைந்து, ரத்த சிவப்பு அணுக்களும் குறைந்து, ரத்த சோகை வருகிறது. இத்தகைய முறையில், அதாவது நீண்ட நாள் இதய செயலிழப்பு உள்ளவர்களுக்கு, சிறுநீரக செயலிழப்பு, ரத்த சோகை என, தொடர் நிகழ்வு வருகிறது. சிறுநீரக செயலிழப்பானது, இதய செயலிழப்பு, ரத்த சோகையை எப்படி அதிகமாக்குகிறது?சிறுநீரக செயலிழப்பால், எரித்ரோ பாய்ட்டின் குறைந்து, ரத்த சோகையை அதிகப்படுத்துகிறது. மேலும், உடலில் நீர் சேர்வதோடு, யர் ரத்த அழுத்தமும் அதிகமாகிறது. இதோடு இல்லாமல், உடலில் பல ரசாயன மாற்றங்களை ஏற்படுத்தி, ரத்தக் குழாய்களை பாதிக்கிறது. கார்டியோ ரீனல் அனீமியா சின்ட்ரோம் என்ற முக்கூட்டணி, வராமல் தடுப்பது எப்படி?இதய செயலிழப்பிற்கு, ஜாக்கிரதையாக, கடுமையாக வைத்தியம் செய்து, ரத்த சோகை, சிறுநீரக பாதிப்பு வராமல் தடுப்பது, மெத்த படித்த வல்லுனர்களின் தலையாயக் கடமை.இதய நோய் நிபுணர், சிறுநீரக நிபுணர், ரத்த சோகைக்கு என, பொது மருத்துவர் என்ற கூட்டணி தேவை. எனக்கு எல்லாம் தெரியும் என, எல்லாவற்றுக்கும் ஒரு மருத்துவரே போதாது. இப்படி செய்தால், நோயாளிக்கு போதாத காலம்.இ.எஸ்.ஏ., என்றால் என்ன?கடந்த, 1980ம் ஆண்டுகளுக்கு முன், அனீமியா என்றால், ரத்தம் கொடுப்பது தான் வைத்திய முறை. ஆனால், அதற்கு பிறகு, இ.எஸ்.ஏ., என்ற எரித்ரோபாய்ட்டின், வியாபார ரீதியாக வந்த பிறகு, மரணங்கள் குறைந்துள்ளன. இந்த இ.எஸ்.ஏ.,வால் வாழ்க்கை தரம் உயர்ந்தது. வாழ்க்கை இனிமையாக வழக்கமாகி விட்டது. இ.எஸ்.ஏ., மருத்துவத்தின் குறிக்கோள், ரத்தத்திலுள்ள குறைந்த ஹீமோகுளோபினை, நார்மலான அளவு கொண்டு வருவது. இரும்பு சத்து குறைந்தால், இரும்பு சத்துள்ள மருந்துகளால் சரி செய்யலாம்.கார்டியோ ரீனல் அனீமியா சின்ட்ரோமில் மிகவும் கடுமையானது எது?இதில் கடுமையான, 'ரீனல் பெய்லியர்' என்ற சிறுநீரக செயலிழப்பு தான். சிக்கலான, மிகவும் ஆபத்தான, சிறுநீரக கோளாறு தான் காரணம். சிறுநீரக கோளாறை, தக்க நேரத்தில் கண்காணிக்கா விட்டால், டயாலிசிஸ், சிறுநீரக மாற்று சிகிச்சை என, சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். எனவே, இதை, கண் இமை போல, காக்க வேண்டும். என்னிடம் சிகிச்சை பெற வந்த, ரஞ்சிதம், 65, என்பவருக்கு, ரத்த கொதிப்பு, சர்க்கரை நோய் மற்றும் சிறுநீரக கோளாறு ஆரம்ப நிலை, இருந்தது. இதை அப்படியே, 10 ஆண்டுகள் பாதுகாத்து, 75 வயதில் சிறுநீரக கோளாறு அதிகமாகி, 78 வயது வரை, ரத்த கொதிப்பு, இதய செயலிழப்பு, கிட்னி செயலிழப்பு, அனீமியா என்று மூன்று ஆண்டுகள் வாழ்ந்ததற்கு காரணம், அவருடைய அணுகுமுறை, மருத்துவரிடம் நம்பிக்கை, கடுமையான கட்டுப்பாடுடன் உணவு மற்றும் மருந்து. மருத்துவரிடம் செல்வது, மருத்துவரை மாற்றுவதை விட, வியாதியைப் பற்றி நன்கு அறிந்து, ஆலோசனை, மருந்துகள், வாழ்க்கை முறை மாற்றங்கள் இவைகளை பின்பற்றி, வியாதியை நண்பனாக கருதினால், அதன் கடுமையைக் குறைத்து, தரமான வாழ்க்கை வாழலாம்; மரணத்தின் விளிம்பிலிருந்தும் மீளலாம். டாக்டர் அர்த்தநாரிடாக்டர் எஸ்.ஏ., ஹார்ட் கிளினிக்,170/221, ராயப்பேட்டை ஹைரோடு, சென்னை - 14.Email: drsarthanaree@sify.com