உள்ளூர் செய்திகள்

நுரையீரலுக்கு ஆபத்தை தரும் செல்ல பறவைகள்!

நுரையீரல் திசு நார்களில் தழும்புகளை ஏற்படுத்தும் 'இன்டர்டீஷியல் லங்க் டீசிஸ்' எனப்படும் 'பைப்ரோசிஸ்' பற்றிய விழிப்புணர்வு போதுமான அளவில் இல்லை. இந்நோய் பற்றி கடந்த 10 ஆண்டுகளாக பேசி வருகிறேன். நுரையீரல் முழுவதிலும் உள்ள அல்வியோலை என்ற சிறிய காற்றுப் பைகள், சுவாசத்தை உள்ளிழுக்கும் போது பிராண வாயுவை ரத்த நாளங்களுக்கு செலுத்தும். மூச்சை வெளியில் விடும் போது ரத்த நாளங்களில் உள்ள கார்பன்டை ஆக்சைடு அல்வியோலையின் உள்ளே செல்லும். இது தான் சுவாச மண்டலத்தின் அடிப்படை வேலை.சுருங்கி, விரியும் தன்மையுள்ள அல்வியோலையைச் சுற்றிலும் ரத்த நாளங்கள் உள்ளன. இந்த இரண்டிற்கும் ஆதாரமாக வலை போன்ற 'பைபர்ஸ்' என்கிற அமைப்பு உள்ளது. பைபர்கள் எண்ணிக்கையில் அதிகமாகும் போது, பஞ்சு போன்ற நுரையீரல் இறுகி விடும். இதை 'நுரையீரல் பைப்ரோசிஸ்' அல்லது இன்டர்டீஷியல் லங்க் டீசிஸ் என்று சொல்வோம்.கொரோனா தொற்றால் வந்த பைப்ரோசிஸ் எத்தனை தீவிரமாக இருந்தாலும், 100 பேரில் 99 பேருக்கு முற்றிலும் குணமாகி விட்டது. மீதி இருக்கும் 1 சதவீதம் பேருக்கு, வேறு காரணங்களால் பைப்ரோசிஸ் பாதிப்பு இருந்திருக்கிறது. அதனால் தான் கொரோனா தொற்று குணமான பின்னும் அப்படியே இருக்கிறது. இன்று வரையிலும் இவர்கள் சிகிச்சை பெறுகின்றனர்.பைபர்கள் அதிகமாக காரணம்அறுபது வயதிற்கு மேல், காரணம் இல்லாமல் நுரையீரல் பைப்ரோசிஸ் வருவதை பார்க்கிறோம். இதை, 'இடியோபதிக் பல்மனரி பைப்ரோசிஸ்' என்கிறோம்.இது தவிர, குறிப்பிட்ட சில காரணங்களாலும் பைப்ரோசிஸ் வரலாம். இளம் வயதில், குறிப்பாக பெண்களை அதிகம் பாதிக்கும் ருமட்டாய்டு ஆர்த்ரைடீஸ், எஸ்.எல்.இ., ஜோக்ரன் சிண்ட்ரோம், ஸ்கிரோடெர்ம் (scleroderm) போன்ற மூட்டுகளை பாதிக்கும் முடக்குவாதம். இதில், உடம்பில் உள்ள தசை நார்கள் இறுகுவது போன்று, நுரையீரலில் உள்ள தசைநார்களும் இறுக்கமாகி விடுகின்றன. மூட்டு பாதிப்புகள் வந்தபின் பைப்ரோசிஸ் வரலாம். பைப்ரோசிஸ் பாதிப்பிற்கான காரணத்தை தேடும் போது, சிலருக்கு ரூமட்டாய்டு கோளாறுகள் இருப்பது தெரியும்.அடுத்தது, வீட்டிற்குள் பறவைகள் வளர்ப்பது நுரையீரலுக்கு மிகவும் ஆபத்தான விஷயம். பறவைகளின் உடலில் வழியும் திரவம் நோய் பாதிப்பை உண்டாக்கும், 'ஆன்டிஜென்' நுரையீரலை பாதிக்கும் போது பைப்ரோசிஸ் ஏற்படும். இதை 'ஹைப்பர் சென்சிவிட்டி நிமோனிடிஸ்' என்று சொல்வோம். இதனால் பாதிப்பு வருவது தெரிந்ததால், பறவைகளை வளர்க்காமல் இருந்தாலே பிரச்னை சுலபமாக தீர்ந்து விடும்.அடுத்த காரணி, தொழிற்சாலைகளில் பணி செய்பவர்களுக்கு குளிரூட்டப்பட்ட இடத்தில் உள்ள துாசி, துகள்கள், பயன்படுத்தும் தாதுக்கள் நுரையீரலில் படியும் போதும் இதே பிரச்னை வரலாம்.தொழிற்சாலை ஊழியர்களுக்கு குறிப்பிட்ட ஆண்டிற்கு ஒரு முறை நுரையீரலின் செயல்பாடு இயல்பாக உள்ளதா என்பதை அறிய பரிசோதனை, சி.டி., ஸ்கேன் செய்ய வேண்டும் என்ற விதி உள்ளது.அடுத்ததாக சில வகை மருந்துகளாலும் வரலாம். இதயத் துடிப்பை சீராக வைக்க தரப்படும் 'அமியோடரோன்' மாத்திரை, 'மெத்தோடிரக்சேட்' என்கிற கேன்சர் மருந்து, சிறுநீரகத் தொற்றுக்கு பரவலாக பயன்படும் 'நைட்ரோபியூரென்டாயின்!' இவற்றை நீண்ட நாட்கள் சாப்பிடும் போது, பைப்ரோசிஸ் வரும் வாய்ப்பு உள்ளது. கருக்குழாய் கேன்சருக்கு தரப்படும் 'பிலியோமைசின்' சாப்பிடும் போது வரும் பைப்ரோசிஸ் பாதிப்பு நுரையீரல் கேன்சருக்கு சமம் என்பதால், அவ்வப்போது பரிசோதிக்க வேண்டும்.அறிகுறிகள்வாரக்கணக்கில் தொடர்ந்து வறட்டு இருமல் இருக்கும். சிலருக்கு மாத, ஆண்டு கணக்கில் கூட இருக்கும். நாளாக ஆக மூச்சு வாங்குவது அதிகரிக்கும். ஸ்டெத் வைத்து கேட்கும் போது, கீறல்கள் விழுந்த சத்தம் வரும்.மேற்கொண்டு உறுதி செய்ய சி.டி., ஸ்கேன் எடுத்தால், என்ன காரணத்தால் பைப்ரோசிஸ் பாதிப்பு என்பதை சுலபமாக அறியலாம். பைப்ரோசிஸ் பாதிப்பு மேலும் அதிகரிக்காமல் இருக்க, 'பிர்பெனிடோன்ர (Pirdenidone),'நின்டடேனிப (Nintedanib) என்ற மூலக்கூறுகள் உள்ள ஆன்டி பைப்ராடிக் மருந்துகள் உள்ளன. இந்த இரண்டையும் சரியான அளவில் கொடுத்தால், வியக்கத்தக்க முடிவுகள் தெரிகின்றன.டாக்டர் கே.திருப்பதி, சுவாச கோளாறுகள் சிறப்பு மருத்துவ ஆலோசகர், சிம்ஸ் மருத்துவமனை, சென்னை. 044 - 2000 2001enquiry@simshospitals.com


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்