முப்பதில் திட்டம்; அறுபதில் ஆரோக்கியம்...!
முதுமையில் சத்தான உணவு மிகவும் முக்கியம். சிட்ரஸ் அதிகம் உள்ள எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற பழங்கள், பாதாம், பாகற்காய், தயிர், இஞ்சி, பூண்டு, காளான் போன்ற வற்றை சாப்பிட வேண்டும். புரதச் சத்து அதிகம் உள்ள பால், முட்டை, பருப்பு, சோயா, நார்ச்சத்து அதிகம் உள்ள சிறு தானியங்கள் சாப்பிட்டால், பெருங்குடலில் புற்று நோயைத் தவிர்க்க முடியும். மலச்சிக்கல் வராது.சிறுதானியங்களில் கால்சியம் சத்து அதிகம் என்பதால், எலும்புகளுக்கு வலு கிடைக்கும். அரிசி, கிழங்கு போன்ற மாவுச் சத்து அதிகம் உள்ள உணவுகளை தவிர்ப்பது நல்லது. ஒரு நாளைக்கு ஒரு நபர், 5 கிராம் உப்பு தான் சேர்க்க வேண்டும். ஆனால், நாம் 12 முதல் 14 கிராம் சேர்க்கிறோம். 60 வயதிற்கு மேல், குறைந்த அளவு உப்பு சேர்ப்பது நல்லது.அறுபது வயதிற்கு மேல் உடற்பயிற்சி மிகவும் முக்கியம். இதனால், ரத்த அழுத்தம் குறையும், சர்க்கரை கட்டுக்குள் இருக்கும். உடல் பருமன் இருக்காது. பெருங்குடல், மார்பகம் போன்ற சில வகை கேன்சர்கள் வருவது தவிர்க்கப்படும். எலும்புகள் வலுவாகும். துாக்கமின்மை, மலச்சிக்கல் இருக்காது. இத்தனை நன்மைகளை எந்த மருந்தாலும் தர முடியாது.வயதானவர்களுக்கு இருக்கும் இன்னொரு பிரச்னை, 'வைட்டமின் டி' குறைபாடு. தினமும் 30 முதல் 50 நிமிடங்கள் சூரிய ஒளியில் இருந்தால், இந்தப் பிரச்னையே வராது. முதுமையில் உடல் நலம் எந்த அளவு முக்கியமோ, அந்த அளவு மன நலமும் முக்கியம். மனநலமும் பொருளாதாரமும் சீராக இருக்க, 30 வயதிலேயே திட்டமிடுவது பாதுகாப்பானது.டாக்டர் வி.எஸ்.நடராஜன்,முதியோர் நல சிறப்பு மருத்துவர், சென்னைdr_v_s_natarajan@gmail.com