கேள்வி பதில்
சொ.கண்ணதாசன், திருச்சி: எனக்கு மன அழுத்தம் உள்ளது. இதனால் ஏற்படும் கோபத்தை கட்டுப்படுத்துவது எப்படி?கோபம் அதிகரிக்கும் முன்பே, அதற்கு காரணமான சூழலை விட்டு நகர்ந்து விடுங்கள். கோபத்துக்கு காரணமானவரை சந்திப்பதை தவிர்ப்பதால், கோபத்தையும், மன அழுத்தத்தையும் குறைக்கலாம்.அதோடு, திறந்தவெளியில் சென்று, சிறிது நேரம் நடக்கலாம். கண்களை மூடி, உங்கள் கவனத்தை திசை திருப்பும் செயலில் ஈடுபடலாம். இதனால், உங்கள் மனதை வேறுபாதையில் செலுத்தி, கோபத்தை குறைக்க முடியும்.தனிமை தான், கோபத்தை கட்டுப்படுத்தும் சிறந்த மருந்து. ஆனால், தனிமையில் இருந்தும், பழைய சூழலை பற்றி நினைப்பது தவறு. உங்களுக்கு பிடித்த விஷயங்கள் அல்லது நபர்கள் பற்றி எண்ணிப் பார்க்கலாம்.த.சத்யா, மனநல ஆலோசகர், சென்னை.கி.பிரசாந்த், சென்னை: எனக்கு, 24 வயதாகிறது. பிரபல சட்டக் கல்லூரியில் பயின்றபோது, ஒரு பெண்ணை காதலித்தேன். அவள் என்னை ஏமாற்றிவிட்டாள். அந்தப் பிரிவை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தற்கொலை செய்து கொள்ள தோன்றுகிறது; இதிலிருந்து விடுபட என்ன செய்வது?முழுமையாக ஒருவரின் வாழ்க்கையை, எவராலும் திட்டமிட முடியாது. எதிர்பாராத திருப்பங்களால், மாற்றங்கள் ஏற்படுவது தான் வாழ்க்கை. இதிலிருந்து யாராலும் தப்பிக்க முடியாது என்பது தான் உண்மை. இவரில்லாமல், என்னால் வாழ முடியாது என்பது முட்டாள்தனம். ஒரு பிரிவு கற்றுக் கொடுக்கும் பாடம் மிகப்பெரியது. பிரிவு எப்படி நிலையானதோ, அவ்வாறு தான் அதை கடந்து செல்வதும். உங்கள் வாழ்க்கையில் திடீரென ஏற்பட்ட மாற்றங்களால், கருத்து வேறுபாட்டால் பிரிந்தவர்கள் இருக்கலாம். சில காலம் கழித்து, அவரை முற்றிலுமாக மறக்கும் சூழலும் ஏற்படும். அது, வாழ்க்கையின் முடிவல்ல; ஓர் உறவின் முடிவு.இது, உங்கள் லட்சியத்தையோ, கனவுகளையோ கலைத்துவிட முடியாது. சிறு தடையாக வேண்டுமானால் அமையலாம்; ஆனால், வாழ்க்கையின் முடிவாக அமைய வாய்ப்பே இல்லை.ம.திருவேங்கடம், மனநல மருத்துவர், திருநெல்வேலி.க.ராஜலட்சுமி, வத்தலகுண்டு: நான், ஐந்து மாத கர்ப்பிணி; எனக்கு சில நேரங்களில், ரத்தக்கசிவு ஏற்படுகிறது, இதற்கு காரணம் என்ன?சில பெண்களுக்கு, கருப்பை வாய் மிகவும் மென்மையானதாக இருக்கும். அப்போது லேசாக ரத்தக்கசிவு ஏற்படும். அதுவும் கர்ப்பமாக இருக்கும்போது உறவில் ஈடுபட்டால், இத்தகைய ரத்தக்கசிவு ஏற்படும். கருமுட்டை வளர்ந்து, கருப்பையில் பதியும்போது, கருப்பையில் நிறைந்துள்ள ரத்தம் கசிய ஆரம்பிக்கும். அதன் காரணமாகத்தான், சிலருக்கு கர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில், லேசாக ரத்தக்கசிவு ஏற்படுகிறது. நஞ்சுக்கொடி, கருப்பை சுவரில் இருந்து முழுமையாகவோ அல்லது பாதியாகவோ தகர்ந்து காணப்பட்டால், அப்போதும் ரத்தக்கசிவு ஏற்படும். பொதுவாக, நஞ்சுக்கொடி தகர்வு, பிரசவத்திற்கு சிறிது நாட்களுக்கு முன் அல்லது பிரசவம் நடக்கும்போது ஏற்படும். கருமுட்டை கருப்பையில் வளராமல், கருக்குழாயில் வளர ஆரம்பித்தாலும் ரத்தக்கசிவு ஏற்படும்.அ.சாந்தி, மகப்பேறு மருத்துவர், சென்னை.