கேள்வி - பதில்
மழைக் காலத்தில் நோய்களைத் தடுக்க, என்னென்ன தடுப்பு முறைகளை பின்பற்றலாம்? வெ.வசந்தா, சென்னை.கைகளை சோப்பு போட்டு நன்றாகக் கழுவ வேண்டும். தண்ணீரை, 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து, ஆற வைத்து குடிப்பது நல்லது. குடிநீர் பாத்திரங்களையும், சமைத்த உணவுகளையும் ஈ மொய்க்காமல் மூடிப் பாதுகாக்க வேண்டும். வெளியிடங்களிலும், சாலையோர உணவகங்களிலும் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். தேங்கிக் கிடக்கும் நீரில் குழந்தைகளை விளையாட விட வேண்டாம். தினமும் இருமுறை வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும். அதிகச் சூடும் ஆபத்து. நன்கு தேய்த்துக் குளிக்கும்போது, நம் உடல் சருமத்தில் இருக்கும் இறந்த செல்கள் நீங்கும். சைனஸ், ஆஸ்துமா முதலான தொந்தரவுகள் உள்ளோர், மருத்துவர் அறிவுரைப்படி, தாராளமாகத் தலைக்குக் குளிக்கலாம். திரிபுரசுந்தரி, பொது மருத்துவர், சென்னை.என் தந்தைக்கு, 22 வயது. அவருக்கு பார்க்கின்சன் நோய் வந்துள்ளது. அது ஏன் வருகிறது?ப.ஜேம்ஸ், எண்ணுார்.இந்த நோய் பொதுவாக, ௬௦ வயதுக்கு மேற்பட்டோரையே பாதிக்கும் என்றாலும், இள வயதினருக்கும் ஏற்படலாம். பார்க்கின்சன் நோய், பெண்களை விட, ஆண்களுக்கே அதிகளவில் ஏற்படுகிறது. இந்த நோய் வாழ்க்கையின் இரண்டாவது காலகட்டத்தில்தான் ஏற்படுகிறது. மூளையிலுள்ள, 'கார்பஸ் ஸ்ட்ரியேட்டம்' எனும் நரம்பணு கருவில், 'டோபமைன்' என்ற நரம்பணு கடத்தி சரிவர வெளிப்படாததும், அதற்கு எதிர்வினை சரிவர நடைபெறாததும் தான் காரணம். இந்த நோயால் பாதிக்கப்பட்டோர், இயல்பான உடல் அசைவுகளை இழந்து, தசைகள் இறுக்கமடைந்து, முகபாவனைகள், நடக்கும் முறை, உடல் தோற்றம் ஆகியவற்றில் பெருத்த மாற்றம் அடைவர். அதோடு உடல் தசை இறுக்கம், பலவீனத்தையும், உடல் நடுக்கத்தையும் ஏற்படுத்துகிறது. இதனால், இந்த நோயை நடுக்குவாத நோய் என்பர்.மா. வெங்கட், பொது மருத்துவர், சென்னை.என் குழந்தைக்கு, 3 வயதாகிறது. அடிக்கடி மூக்குச் சளியால் தொந்தரவு அடைகிறாள். என்ன செய்வது?வெ.லதா, மரக்காணம்.இந்த பிரச்னையை உடனடியாக சரிசெய்ய வேண்டும். குழந்தை வாயின் மூலம் சுவாசிக்கும் போது, கிருமிகள் வடிகட்டப்படுவதில்லை. இதனால், குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தி பாதிக்கப்பட்டு தொற்றுநோய் பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர். தொடர்ச்சியாக வாயினாலேயே சுவாசிக்கும்போது, தொண்டை அழற்சி பிரச்னை ஏற்படுகிறது. எனவே, மூக்கடைப்பை ஆரம்ப நிலையிலேயே சரிசெய்ய வேண்டும்.ச.குமுதா, குழந்தைகள் நல மருத்துவர், சென்னை.