கேள்வி - பதில்
என் வயது, 60. எனக்கு, பித்தப்பையில் கல் உள்ளது என்றும், இதற்கு தீர்வு இல்லை என்றும், பித்தப்பையை அறுவை சிகிச்சை செய்து அகற்றிவிட வேண்டும் என்றும், டாக்டர்கள் கூறுகின்றனர். சித்த மருந்துகள் சாப்பிட்டால், பித்தப்பை கற்கள் கரையுமா? நீரிழிவு, ரத்தக் கொதிப்பு, கொலஸ்ட்ராலுக்கு ஆங்கில மருந்துகள் சாப்பிடுகிறேன்.தே.பாண்டியன், திருமங்கலம், சென்னை 40..கொழுப்பு இறுகி, இதுபோன்ற பித்தப்பை கற்களாக மாறுகிறது. இது பொதுவான பிரச்னை என்றாலும், கல்லின் அளவு, அது எந்த மாதிரியான நிலையில் இருக்கிறது என்பதைப் பொறுத்தே அறுவை சிகிச்சை செய்யலாமா அல்லது மருந்துகள், உணவு பழக்கத்தின் மூலம் சரி செய்ய முடியுமா என்பதை முடிவு செய்ய முடியும். வலி எதுவும் இல்லாமல், எந்த அறிகுறியும் வெளியில் தெரியாமல், பல ஆண்டுகளாக அப்படியே இருந்து, எதிர்பாராத சமயத்தில்தான், வயிற்று வலி, குமட்டல், வாந்தி, ஜுரம் என்று இதன் பாதிப்பு வெளிப்படும். கல் அளவில் பெரிதாக இருந்தால், பித்த நீர் வெளியேறும் பாதையை அடைத்து போதுமான நீர் வெளியேறாமல் மஞ்சள் காமாலை வரும். இதுபோன்ற நிலையில் பித்தப்பையை அகற்றுவதைத் தவிர வேறு வழியில்லை.ஆனால் கல் மிகச் சிறியதாக ரவை, ரவையாக இருந்தால், தினசரி வாழ்க்கையில் சில ஒழுங்கு முறைகளை பின்பற்றினாலே சரி செய்து விடலாம். சரியான நேரத்திற்கு சாப்பிடுவது, குறிப்பாக காலை உணவை தவிர்க்காமல், கொழுப்பு நிறைந்த உணவை தவிர்க்க வேண்டும். சமச்சீரான உணவு சாப்பிட வேண்டும். மாதத்திற்கு ஒரு முறை கரிசலாங்கண்ணி, கீழாநெல்லி, மூக்கிரட்டை, அகத்தி இந்த கீரைகளில் தலா கொஞ்சம் எடுத்து சேர்த்து சமைத்து சாப்பிடுவதால், கல்லீரல் சுத்தமாகும். மிளகு, சீரகம், தனியா, சோம்பு, வெந்தயம் இவற்றில் தலா, 50 கிராம் எடுத்து வெறும் வாணலியில் வறுத்து பொடிசெய்து, காலை உணவிற்குப் பின் அரை ஸ்பூன் சாப்பிட்டு வரலாம். மாதம் ஒரு முறை கீழாநெல்லியை அரைத்து நெல்லிக்காய் அளவு வெறும் வயிற்றில் சாப்பிடலாம். சிகரெட், மது பழக்கம் இருந்தால், முற்றிலும் தவிர்க்க வேண்டும்.டாக்டர் க.வே.அபிராமி, சித்தா சிறப்பு மருத்துவர்என் வயது, 30. இன்னும் திருமணம் ஆகவில்லை. குடிப்பழக்கம், புகைப்பழக்கம் எதுவும் இல்லை. மாதத்திற்கு ஒரு முறை என் வாய், உதடுகளில் பெரிய புண் வந்து அவதிப்படுகிறேன். மணத்தக்காளி கீரை சாப்பிடுகிறேன். புண் மெல்ல ஆறிவிடும். பிறகு மறுபடியும் வாய்ப்புண் வந்துவிடும். இதற்கு என்ன காரணம். எனக்கு உள் மூலம் உள்ளது. அதற்கும் இதற்கும் சம்பந்தம் உண்டா? வாய்ப்புண் நிரந்தரமாக வராமல் தடுக்க, உணவு முறைகள் என்ன?என்.சக்திவேல், காங்கேயம்.வயிற்றில் புண் அல்லது வேறு பிரச்னைகள் இருக்கும் பட்சத்தில், வாயில், உதட்டில் புண் ஏற்படும். இது வயிற்றில் கோளாறு இருக்கிறது என்பதற்கான அறிகுறி. உங்களுக்கு மூலம் இருப்பதாக கூறுகிறீர்கள். எனவே, பயிற்சி பெற்ற ஆயுர்வேத டாக்டரை நேரில் அணுகி பஞ்சகர்மா தெரபி என்ற சிகிச்சையை எடுத்துக் கொண்டால் முற்றிலும் குணம் பெறலாம். உங்கள் உணவில் புளி, காரம், உப்பு இருக்கக் கூடாது. தவிர்க்கவே முடியாது என்றால் மிகக் குறைந்த அளவு மட்டுமே சேர்க்க வேண்டும். காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சுத்தமான பசு வெண்ணெய் தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிடுவது நல்லது. தயிரை முற்றிலும் தவிர்த்து, நிறைய மோர் குடிக்க வேண்டும். நல்ல ஓய்வில் இருப்பது அவசியம். இரவில் எட்டு மணி நேரம் ஆழ்ந்த துாக்கம் வேண்டும். துவரம் பருப்பைத் தவிர்த்து பாசிப் பருப்பு பயன்படுத்துங்கள். நான் கூறிய உணவுப் பழக்கத்தையும் ஓய்வையும் கடைபிடிப்பதோடு, டாக்டரை நேரில் சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது.டாக்டர் ரேச்சல் ரெபேக்கா பிலிப், ஆயுர்வேத மருத்துவர், சென்னை.