கேள்வி - பதில்
என் மகனுக்கு, 35 வயதாகிறது. அவனுக்கு திடீரென்று மூச்சுத் திணறல் ஏற்பட்டது. 'எக்கோ' டெஸ்ட் செய்தார்கள். நுரையீரலை சுற்றி நீர் கோர்த்திருப்பதாக சொல்லி அதை அகற்றினார்கள். அதன்பின், 'பயாப்சி' செய்ததில், இதயத்திற்கும் நுரையீரலுக்கும் நடுவில் புற்றுநோய் கட்டி இருப்பதாகவும் பூரணமாக குணமடையாது எனவும் டாக்டர் சொல்கிறார். எந்த மாதிரியான சிகிச்சையை என் மகனுக்கு தர வேண்டும் என்பதையும் தெரிவியுங்கள்?மாலா, திருச்செந்துார்நம் உடம்பில் வரும் கட்டிகள் பலவிதமானவை. ஒவ்வொன்றும் வெவ்வேறு தன்மை கொண்டவை. அதனால் கட்டியின் தன்மைக்கேற்ப சிகிச்சை தேவைப்படும். 'பயாப்சி' பரிசோதனை, 'ரிப்போர்ட்'டில் உங்கள் மகனுக்கு வந்திருக்கும் கட்டி எந்த வகையைச் சேர்ந்தது என்பது குறித்த விபரங்கள் இருக்கும். கட்டி எந்த நிலையில் (stage) உள்ளது என்பதைத் தெரிந்து கொள்வதற்கும் ஒரு பரிசோதனை செய்ய வேண்டும். இது பிரச்னையின் தீவிரத்தை அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.கட்டி தோன்றியதில் இருந்து படிப்படியாக பல்வேறு நிலைகளை அடைவதற்கான வாய்ப்புகள் அதிகம். நுரையீரலுக்கும் இதயத்திற்கும் நடுவில் வரும் பொதுவான கட்டிக்கு லிம்போமா (Lymphoma) என்று பெயர். இது குணமாகக் கூடிய கட்டி தான். 'பயாப்சி' பரிசோதனையில், இது நுரையீரல் புற்றுநோயா என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். 'பயாப்சி' மற்றும் கட்டி எந்த நிலையில் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளும் பரிசோதனை, இரண்டின் அடிப்படையிலேயே உங்கள் மகனுக்கு என்ன மாதிரியான சிகிச்சை அவசியம் என்பதை, அதாவது ரேடியேஷனா, கீமோதெரபியா அல்லது அறுவை சிகிச்சையா என்பதை தீர்மானிக்க வேண்டும்.டாக்டர் ஆர்.பாலாஜி, புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர்,அப்பல்லோ சிறப்பு மருத்துவமனை, வானகரம்வயது, 26. என் வலது காலில் பெருவிரலுக்கு அடுத்த விரல், பிறவியிலேயே பெருவிரலை காட்டிலும் பெரியதாக இருந்தது. தற்போது வரை வளர்ந்தும் தடிமனாகவும் உள்ளது. ஏற்கனவே சிறிய வயதில், அறுவை சிகிச்சை செய்தும் இந்த விரலின் வளர்ச்சியைத் தடுக்க முடியவில்லை.ஆர்.பிரவீன் குமார், வத்தலக்குண்டுCongenital Macroactyly எனப்படும் அரிதாக ஏற்படும் பிரச்னை இது. இந்த பிரச்னைக்கான காரணம் தெரியவில்லை. ஆனால் இது, பரம்பரையாக ஏற்படும் குறைபாடாக இருக்கலாம். குறிப்பிட்ட பகுதியில் ரத்த ஓட்டம் அதிகமாக இருப்பதாலும் இதுபோன்ற பிரச்னை வரலாம். இதை, மருத்துவத்தில் localised gigantism என்று கூறுவோம். இதுபோன்ற பிரச்னை, கால் விரல்களில் மட்டுமல்லாது கை விரல்களிலும் கூட வரலாம். உங்களுக்கு ஒரு விரல் மட்டுமே பிரச்னையாக உள்ளது; சிலருக்கு, பல விரல்களிலும் இதுபோன்ற வளர்ச்சி இருக்கும். இந்த வளர்ச்சி சிறிய அளவில் இருந்தால், ஷு அணிவதைத் தவிர வேறு பெரிதாக பிரச்னை இருக்க வாய்ப்பில்லை. ஆனால் பெரிதாக இருந்தால் நடப்பதில் சிரமம் ஏற்படும்; அருகில் இருக்கும் விரல்கள், பாதங்களிலும் வலியும் ஏற்படலாம். இந்த பிரச்னைக்கு ஒரே தீர்வு அறுவை சிகிச்சை தான். இதில், அதிகப்படியாக உள்ள எலும்பையும் திசுக்களையும் எடுத்து விடுவோம். ஆனாலும் ஒரே அறுவை சிகிச்சையில் எதையும் சரி செய்து விட முடியாது. இரண்டாவது அறுவை சிகிச்சை தேவைப்படலாம். முழுமையான அறுவை சிகிச்சைக்கு பின், மூன்று மாதங்களில் நிரந்தரமான தீர்வு கிடைக்கும்.டாக்டர் டேவிட்.வி.ராஜன்எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவர், கோவை