உள்ளூர் செய்திகள்

கேள்வி - பதில்

காலையில், வெறும் வயிற்றில் இளம் சூடான நீரில், தேனும், எலுமிச்சையும் சேர்த்து சாப்பிட்டால், தொப்பை குறையும் என்று சொல்லப்படுகிறது. எனக்கு, 10 ஆண்டுகளாக டயாபடீஸ் உள்ளது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் தேன் சாப்பிடலாமா?ம.நாராயணன்,விளாத்திகுளம்நவீன மருத்துவத்தை பொறுத்தவரை, சர்க்கரை நோய்க்கு தேன் எந்த விதத்திலும் நல்லதல்ல. தேன், வெல்லம் போன்றவற்றில், இயற்கையிலேயே இனிப்புத் தன்மை அதிகம் உள்ளது. நீங்கள் தினமும் வீட்டில் பயன்படுத்தும் வெள்ளை சர்க்கரையைக் காட்டிலும், இயற்கையாகக் கிடைக்கும் தேனில் இனிப்புத் தன்மை அதிகம். தவிர, கார்போஹைட்ரேட் சத்தும், கலோரியும்கூட தேனில் அதிகம் உள்ளது. கார்போஹைட்ரேட் சத்து என்பது, அரிசி, உருளைக் கிழங்கில் இருப்பது போன்றது. ஒரு டேபிள் ஸ்பூன் தேனில், 17 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது. எனவே, தேன் சாப்பிட்டவுடன் ரத்த சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். கார்போஹைட்ரேட் உணவை அதிகளவு எடுத்துக் கொள்ளும் போதும், இதே போலவே, ரத்த சர்க்கரையின் அளவு உடனடியாக அதிகரிக்கும். வெந்நீரில், எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் தொப்பை குறையும் என்பதெல்லாம் உண்மை இல்லை. 'டிவி' விளம்பரங்களில் காட்டுவது போல, தொப்பை குறைய தனியாக உடற்பயிற்சி, கைகளுக்கு, கால்களுக்குத் தனியாக உடற்பயிற்சி செய்வதும் தவறானது.அது போல, வெறும் உணவுப் பழக்கத்தினால் மட்டும், உடல் எடையையோ, தொப்பையையோ குறைத்துவிட முடியாது. அப்படிச் செய்வது ஆரோக்கியமானது இல்லை என்பதை, முதலில் புரிந்து கொள்ள வேண்டும். நல்ல ஊட்டச்சத்து உள்ள, சமச்சீரான உணவை சாப்பிட்டு, உடல் முழுவதும் சீரான அசைவைத் தரக்கூடிய உடற்பயிற்சியை, தினமும் முறையாக செய்தால் மட்டுமே, உடலில் உள்ள தேவையற்ற கலோரி குறையும். உயரத்திற்கு ஏற்ற உடல் எடையுடன் இருக்கலாம்; தொப்பையும் குறையும்.தினமும், 30 முதல், 45 நிமிட நடைபயிற்சிக்கு இணை எதுவுமில்லை. குறிப்பாக, டைப் - 2 டயாபடீஸ் இருப்பவர்கள் இதை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். டைப் - 1 டயாபடீஸ் இருப்பவர்களுக்கு, இன்சுலின் சுரக்காது என்றால், டைப் - 2 டயாபடீஸ் இருந்தால், சுரக்கும் இன்சுலின் சரியாக வேலை செய்யாது. நடைபயிற்சி செய்யும் போது, இன்சுலின் சீராக வேலை செய்யும். 'அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன்' போன்ற சர்வதேச அமைப்புகள், வாரத்திற்கு, 3 நாட்கள் நடைபயிற்சி, 2 நாட்கள் தசைகளை வலுப்படுத்தும் பயிற்சி செய்தாலே போதும் என்று கூறுகிறது. அப்படிச் செய்யும் போது, அடிப்படை உடல் செயல்பாடு அதிகரிக்கும். உடலின் உள் உறுப்புகள் ஆரோக்கியமாக இருக்கும்.டாக்டர் ஆர்.சுந்தர்ராமன், பொதுநல மருத்துவர், சென்னை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்