கேள்வி பதில்கள்
ஆஸ்துமாவை கட்டுக்குள் வைப்பது சாத்தியமா? - கமீதா, தேனீ மாவட்டம்.கண்டிப்பாக சாத்தியமே. ஆஸ்துமா நோயாளிகள் பயன்படுத்தக் கூடிய இடங்கள் அருகே தூசு, குப்பை தொட்டி, அழுகிப் போன உணவுகள் போன்றவை இருக்கக் கூடாது. வீட்டில், தூசு, ஒட்டடை சேராமல் பார்த்து கொள்ள வேண்டும்.பயன்படுத்திய ஆடைகளை சலவை செய்யாமல், மீண்டும் பயன்படுத்த கூடாது. படுக்கைகள், தலையணைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். சுத்தமில்லாத பொருட்களில், கண்ணுக்கு தெரியாத பூச்சிகள் உருவாகும். அவை ஆஸ்துமா நோயாளிகளுக்கு ஆகாது.குளிரூட்டப்பட்ட அறைகளை தவிர்ப்பது நல்லது. மின்விசிறிக்கு நேரே படுக்கக் கூடாது. மேலும் ச்வாசனை திரவியங்கள், ஊதுபத்திகள், கொசுவிரட்டிகளின் புகை போன்றவற்றின் அருகே கூட, ஆஸ்துமா நோயாளிகள் செல்லக்கூடாது. இவை யாவும், ஆஸ்துமா நோயாளிகளுக்கு எதிரி. செல்லப்பிராணிகள் வளர்ப்பதையும் தவிர்க்க வேண்டும்.- வினோதினி, பொது மருத்துவர், சென்னை.எனக்கு கணைய பாதிப்புள்ளது என, மருத்துவர் கூறுகிறார். கணையம் என்பது என்ன? கணையம் பாதிக்கப்பட்டால், நீரிழிவு நோய் வருமா? - வினோத் பாண்டியன், பாண்டிச்சேரி.உடலில் ஒரேநேரத்தில், செரிமான நீரை சுரக்கின்ற நாளமுள்ள சுரப்பியாகவும், ஹார்மோன்களை சுரக்கின்ற நாளமில்லா சுரப்பியாகவும் செயல்படும் ஒரே உறுப்பு கணையம்.பொதுவாக, உணவு உள்ளே செல்லும்போது, உடலுக்கு தேவையான இன்சுலினை, கணையம் சுரந்து கொண்டே இருக்கும். அந்த நேரத்தில், கணையம் பாதிக்கப்பட்டு, அதில் இன்சுலின் சிறிதுகூட சுரக்காவிட்டாலோ, இன்சுலின் குறைவாக சுரந்தாலோ, சுரந்த இன்சுலின் சரியாக வேலை செய்யவில்லை என்றாலோ சர்க்கரை நோய் வரும். கணையத்தை காக்க, மது, புகை பழக்கத்தை கைவிட வேண்டும். - சேதுராமன், பொது மருத்துவர், சென்னை.எனக்கு வயது, ௨௧. அஜீரண கோளாறு உள்ளது. அதற்கான காரணம் என்ன? - திவ்யா, திருவான்மியூர், சென்னை.பொதுவாக எளிதில் செரிக்காத உணவுகளாகிய, இறைச்சி, மீன், கீரை வகைகளால், அஜீரணம் ஏற்பட வாய்ப்புண்டு. அதேநேரம், மாவுப் பொருட்களால் செய்யப்பட்ட உணவு பொருட்களை, அளவுக்கு அதிகமாக உண்பதாலும், அஜீரணம் வரும். ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் முதல் பெரியவர்கள், முதியவர்கள் என, யாருக்கு வேண்டுமானாலும் அஜீரணம் வரலாம். இது பொதுவான பிரச்னையே. வயது காரணமாக வரும் பிரச்னை அல்ல. மேலும் குடல் புண், பித்தப்பை கற்கள், உணவு குழாய் தசைகளில் ஏற்படும் பிரச்னைகள், கணைய பாதிப்பு, பெருங்குடல் புற்று நோய் போன்ற காரணங்களால், அஜீரண கோளாறுகள் ஏற்படுகின்றன. - பிரான்சிஸ், நுண்துளை அறுவை சிகிச்சை நிபுணர், சென்னை.