உறவு மேலாண்மை: ஒரு தலைக்காதல் நல்லதல்ல!
ப்ரியா, கல்லுாரியில் படிக்கும் கடைசி ஆண்டு மாணவி அதிலும், மருத்துவம் படிக்கும் மாணவி. மேற்படிப்பாக, ஏதாவது ஒரு துறைச் சார்ந்த படிப்பை தேர்வு செய்ய வேண்டும். அதில் நிபுணத்துவம் பெற வேண்டும் என ஆசை. ப்ரியாவுக்கு ஒரு தொலைக்காட்சி தொகுப்பாளர் மீது அத்தனை ஈர்ப்பு. என்ன தான் மருத்துவ மாணவியாக இருந்தாலும் பெண் தானே. அந்த நபர் வரும் வேளைகளில், மறக்காமல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்க தவறமாட்டார். ஏனோ, ஒரு வித ஈர்ப்பு, நாளடைவில் காதலாக மாற, படிப்பின் மேல் ஆர்வம் குறைந்தது; தொகுப்பாளரை சந்திக்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்தது. இதனால், படு பயங்கரமான மன அழுத்தத்தை அனுபவித்தார். பெண்ணுக்கு படிப்புச் சுமை அதிகமாகிவிட்டது போல், அதனால் தான், தனிமையை விரும்புகிறாள் என, பெற்றோரும் கவலையடைந்து பேசிப் பார்த்தனர். தன் நிலை பற்றி, ப்ரியா யாரிடமும் பகிர்ந்து கொள்ளாததால், தோழிகளிடம் விசாரித்தும் பயனில்லை. நாளடைவில், ப்ரியா துாக்கம் வராமல் துாக்க மாத்திரை போடும் பழக்கத்திற்கு ஆட்பட்டு, அதற்கு டிமையாகிவிட்டார். பொறுக்க முடியாமல், அவளின் பெற்றோர், என்னிடம் அழைத்து வந்தனர். நானும் விசாரித்தேன். மிகவும் அழுத்தமானவர். முதலில், எதையுமே கூற மறுத்துவிட்டார். பின்னர் தான், ஒருதலைக் காதலில் சிக்கி தனக்குத் தானே துன்புறுவதை கூறினார். இதில் இன்னொரு குழப்பம் என்னவென்றால், தொகுப்பாளர் திருமணமானவர். ஒரு வயதுக் குழந்தை உள்ளது. ப்ரியாவை அழைத்து, 'உன் காதலை வெளிப்படுத்தினால் கூட, அவரால், ஏற்றுக் கொள்ள முடியாது. காரணம், அவர் திருமணமானவர், ஏன் நம்மால், வேறு ஒரு பெண்ணின் வாழ்க்கை கெட வேண்டும்' என்றதோடு, 'அந்தப் பெண்ணின் நிலையில் உன்னை வைத்துப் பார்' என்றேன். சில நாட்கள் மனஅழுத்தத்திலிருந்து அவர் விடுபடுவதற்கான, ஆலோசனைகள் வழங்கினேன். தொடர்ச்சியாக வந்து சிகிச்சை பெற்றார். இச்சம்பவம் நடந்தது, நான்கு ஆண்டுகளுக்கு முன். தற்போது, ப்ரியா படிப்பை முடித்து மருத்துவராகிவிட்டார். சமீபத்தில், திருமணம் நடந்தது. என்னையும் அழைத்து இருந்தார். நானும் வாழ்த்திவிட்டு வந்தேன்.கலைச்செல்வி மனநல ஆலோசகர், சென்னை.