உறவு மேலாண்மை: மனம் போல் வாழ்வு
சம்பவம்-1: நல்ல வசதியான வீட்டுப் பையன் அவன். பெற்றோருக்கு ஒரே பையன் என்பதால், ரொம்பவே செல்லம். இப்போது பொறியியல் கல்லுாரியில் படிக்கிறான். அவன் எதை விருப்பப்பட்டுக் கேட்டாலும், அந்தப் பொருள் அடுத்தநொடி அவன் கையில் இருக்கும். கேட்டதெல்லாம் கிடைத்து விடுகிறது. எதற்கும் கவலைப்படவே அவசியம் இல்லை. நேற்று அறிமுகம் ஆன மொபைல்போன் கூட, இன்று என் கையில் இருக்கிறது. ஒரு கட்டத்தில், இந்த வாழ்க்கையே அவனுக்குள் வெறுமையைத் தந்தது. 'எல்லாம் என்னிடம் இருக்கிறது. அடுத்து என்ன?' என்ற நினைப்பு அவனுக்கு சலிப்பை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக, என்றாவது ஒரு நாள் நான் விரும்பியது கிடைக்காமல் போய்விட்டால் என்ன செய்வது? என்ற பயம் வந்தது. படித்து முடித்தவுடன் பிசினஸ்தான் செய்வேன். ஒருவேளை பிசினசில் நஷ்டம் வந்துவிட்டால் என்ன செய்வது? இப்படியே ஒன்றன்பின் ஒன்றாக யோசித்து, எல்லாமே என் கையை விட்டுப் போய், வாழ்க்கை போராட்டம் ஆகிவிட்டால் என்ன செய்வது? என்ற பயம் வந்து அவன் விரக்தியின் உச்சத்திற்கு போய் விட்டான். விளைவு? வீட்டில் கத்துவது, விரும்பி வாங்கிய பொருட்களை எல்லாம் போட்டு உடைப்பது என்று, அவனின் நடத்தையே முரட்டுத்தனமாக மாறிவிட்டது.சம்பவம் - 2: நடுத்தர விவசாயப் பின்னணி கொண்ட பெற்றோருக்கு, 10ம் வகுப்பு படிக்கிற ஒரே மகன். 'நாமதான் இப்படி வயலில் கிடந்து அல்லாடுறோம். நம்ம பிள்ளையாவது பெரிய படிப்பு படிச்சி அழுக்குப்படாமல் இருக்கணும்' என்று அவர்களின் சக்திக்கு மீறி மொபைல் போன், கம்ப்யூட்டர் என்று நவீன சாதனங்கள், புதுப்புது டிரஸ், ஷூ, செருப்பு என்று, அவன் கேட்காமலேயே கிடைத்தது. பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தால், 24 மணி நேரமும் கம்ப்யூட்டரிலேயே இருப்பான். ஆன்லைன் ஷாப்பிங்கில் ரொம்ப இஷ்டம். தினமும் ஏதாவது ஒரு பொருளை ஆர்டர் செய்வான். தனக்கு மட்டுமல்ல, அப்பாவுக்கும், அம்மாவிற்கும் சேர்த்தே. விவசாய வருமானம் தவிர, பையனை வளர்ப்பதற்கு நிறைய கடன் வாங்க வேண்டிய கட்டாயம் ஆகி, ஒரு கட்டத்தில் பெற்றோருக்கே பயம் வந்துவிட்டது. தொலை தொடர்பு சாதனங்களிலும், சமூக வலைதளங்களிலும் மூழ்கி, பள்ளிக்குப் போவதையே நிறுத்திவிட்டான். போதை வஸ்துக்கள் பயன்படுத்தும் பழக்கமும் சேர்ந்து கொண்டது. எப்படி இவனை சமாளிப்பது என்று, அவன் பெற்றோருக்கு தெரியவில்லை. சில நாட்கள் இடைவெளியில், இருவரையும் தனித்தனியே என்னிடம் கவுன்சிலிங்கிற்கு அழைத்து வந்தனர். இருவரிடமும் பேசியதில் தாங்கள் என்ன செய்கிறோம் என்பது, அவர்களுக்கு புரிந்து இருந்ததோடு, பல நேரங்களில் செய்யும் செயல்கள் பற்றிய குற்ற உணர்வும் அவர்களுக்கு இருந்தது. இந்த இருவரின் விஷயத்திலும் இந்த பையன்கள் குற்றவாளிகள் கிடையாது. பெற்றோரே தவறு செய்திருக்கின்றனர். பெற்றோர் எப்படி வளர்க்கின்றனரோ அப்படித்தான் குழந்தை வளரும். முதல் சம்பவத்தில், அந்த பையனின் பெற்றோர், 'நீ பிசினஸ் செய்து, எவ்வளவு நஷ்டம் வந்தாலும் பரவாயில்லை. 10 தலைமுறைக்கு நம்மிடம் சொத்து இருக்கிறது. நீ உட்கார்ந்து சாப்பிடலாம்' என்று பையனுக்கு நம்பிக்கை தந்திருக்கின்றனர். இரண்டாவதில், 'நாங்கள் எவ்வளவு சிரமப்பட்டாலும் உன்னை வசதியாக வைத்திருப்போம்' என்றிருக்கின்றனர். இந்த அணுகுமுறையே இருவரிடமும் தன்னம்பிக்கை இல்லாமல் செய்து விட்டது. தனிமையில் பேசும்போது, இருவரும் உடைந்துபோய் அழுதனர். முதலில், மனதில் இருப்பதை எல்லாம் வெளியில் கொண்டு வருவதற்காக, கவுன்சிலிங், அடுத்த கட்டமாக பயத்தைப் போக்குவதற்கான தெரபி, கடைசியாக, தன்னம்பிக்கைக்கு சைக்கோ தெரபி கொடுத்தேன். இருவரிடமும் நல்ல மாற்றம் இருக்கிறது.டாக்டர் அபிலாஷாமனோதத்துவ நிபுணர்,கிளினிக்: 99620 44569