ஸ்டென்ட் பொருத்தியதால் ஓய்வுபெற வேண்டுமா?
இரண்டு ஆண்டுகளாக உயர் ரத்த அழுத்தம் உள்ளது. இதற்காக டாக்டர் நான்கு வகை மருந்துகளை தந்துள்ளார். எப்போதும், மிக களைப்பாக உள்ளது. என்ன செய்வது?ரத்த அழுத்தம், நார்மலாக, 120/80 என்ற அளவில் இருக்க வேண்டும். 140/90க்கு மேல் ரத்த அழுத்தம் அதிகரித்து விட்டால், அதை உயர் ரத்த அழுத்தம் என்கிறோம். உயர் ரத்த அழுத்தத்தால், எந்த அறிகுறியும் இல்லா விட்டாலும், ரத்த அழுத்தத்தை, 140/90க்குள், 120/80 என்ற அளவில் வைத்துக் கொள்ள வேண்டும்.ஏனெனில் ரத்த அழுத்தம் கூடுதலாக இருந்தால், மூளை, நரம்பு, கண், சிறுநீரகம், இதயம் போன்ற உள்ளுறுப்புகள் பாதிக்க நேரிடும். தற்போது உயர் ரத்த அழுத்தத்திற்கு, பக்க விளைவுகள் இல்லாத, நல்ல மருந்துகள் உள்ளன.டாக்டரிடம் பிரச்னையைக் கூறி, மருந்துகளை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும். சரியான உணவுப் பழக்கம், தினமும் நடைப்பயிற்சி, மனதை நிம்மதியாக வைத்துக் கொள்வது ஆகியவற்றை சரியாக கடைபிடித்தால், மருந்துகளின் எண்ணிக்கையை குறைக்க இயலும்.என் வயது 56. அரசு பஸ் டிரைவர். எனக்கு ஆறு மாதங்களுக்கு முன், மாரடைப்பு ஏற்பட்டு, ஸ்டென்ட் பொருத்தப்பட்டுள்ளது. நான் பணியில் தொடர்வதா அல்லது வி.ஆர்.எஸ்., கொடுத்து விடலாமா?டிரைவர் தொழிலில் இருப்பவர்களுக்கு, இதயத்தில் ஸ்டென்ட் சிகிச்சை செய்யப்பட்டு இருந்தால், மூன்று மாதங்கள் வாகனங்கள் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும். மூன்று மாதங்கள் கழித்து, ரத்தம், சிறுநீர், 'எக்கோ' பரிசோதனை, 'டிரெட்மில்' பரிசோதனை செய்யப்படும். இவை அனைத்தின் முடிவுகளும், நார்மலாக இருந்தால், தாராளமாக உங்கள் பணியை தொடரலாம். ஸ்டென்ட் சிகிச்சையை பொறுத்தவரை, சரியான உணவுப் பழக்கம், தினசரி நடைபயிற்சி அத்தியாவசியமானது. இத்துடன் மருந்துகளை வேளை தவறாமல் எடுப்பதும் அவசியம். ஏனெனில், முதல் ஓராண்டுக்கு மருந்தை ஒருவேளை தவறவிட்டாலும், பொருத்தப்பட்ட ஸ்டென்ட்டில் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. முடிந்தால், உங்கள் மேலதிகாரியிடம் கூறி, சிரமம் இல்லாத பணியை மேற்கொள்வது நல்லது.என் தந்தைக்கு, வயது, 78. சமீபத்தில் தலைச்சுற்றல் போன்று ஏற்பட்டது. 'டாப்ளர்' பரிசோதனையில், Right Carotid artery 90 சதவீதம் அடைப்பு என வந்துள்ளது. இதற்கு என்ன சிகிச்சை மேற்கொள்வது?இதயத்திற்கு ரத்த ஓட்டம் போன்று, மூளைக்கு ரத்தம் எடுத்துச் செல்லும் ரத்த நாளத்தை, carotid என்பர். இதற்கு தற்போது இதய சிகிச்சையில் இருப்பது போல, 'ஸ்டென்டிங்' சிகிச்சை உள்ளது. இதில், தொடையில் இருந்து ஒரு கதீட்டரை செலுத்தி, பலூனை வைத்து அடைப்பை நீக்கி, ஸ்டென்ட் பொருத்தப்படுகிறது. இதனால் பக்கவாதம் தடுக்கப்படுகிறது. இதை, carotid artery stenting என்பர்.டாக்டர் சி.விவேக்போஸ், மதுரை.