உள்ளூர் செய்திகள்

வைரஸ் தொற்று குணமான பின் ஏற்படும் பக்க விளைவுகள்!

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறது. பாதிப்பில் இருந்து 98 சதவீதம் பேர் குணமடைந்து உள்ளனர். குணம் பெற்ற 12 வாரங்கள் கழித்தும், அலுப்பு, சோர்வு, சுவாசிப்பதில் சிரமம், நிமோனியா தொற்று, மார்பு பகுதியில் வலி தொடர்ந்து இருக்கிறது.வைரஸ் தொற்று குணமான மூன்று மாதங்களுக்கு பிறகும், இருமல், சுவையின்மை இருப்பதாக சொல்கின்றனர். அவசர சிகிச்சை பிரிவில் தங்கி சிகிச்சை பெற்றவர்கள், அந்த சூழலில் இருந்து வெளியில் வந்த பின், போர்க் காலத்தில் மாட்டிக் கொண்டு வெளியில் வந்ததை போன்று, மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர். தசை வலி, உடல் வலி ஆகியவை பொதுவான பிரச்னைகள்.இதை தவிர்க்க என்ன வழி முறைகளை பின்பற்ற வேண்டும்?உடலினுள் சென்ற வைரஸ் முழுதும் அழிக்கப்பட்டு விட்டது. நோய் எதிர்ப்பு சக்தி பழைய நிலைக்கு திரும்பி, தன்னை எப்படி சமன்படுத்திக் கொள்வது என்று அதற்கு தெரியும். மனதளவிலும் முழுமையாக வைரஸ் பிடியில் இருந்து வெளியில் வந்து விட்டோம் என்று நம்ப வேண்டும்.அடுத்து நல்ல ஊட்டச் சத்து மிகுந்த உணவு சாப்பிட வேண்டியது அவசியம். வைரஸ் தொற்று ஏற்பட்ட பின், என்ன காரணத்தால் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற வேண்டிய நிர்ப்பந்தம் வந்தது என்பதை பொறுத்து, தொடர்ந்து சிகிச்சை பெற வேண்டுமா என்பதை முடிவு செய்ய வேண்டும்.தீவிர வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டு, சர்க்கரை கோளாறும் இருந்தால், குணமான பின், சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க வேண்டும். இது போன்று என்ன பிரச்னை இருந்தாலும் முறையாக மருந்துகள் சாப்பிட்டு, பிரச்னை ஏற்படாமல் பார்த்துக் கொள்வது முக்கியம்.தொற்றில் இருந்து குணம் பெற்ற பின், வேறு ஏதேனும் பிரச்னைகள் இருக்கிறதா என்பதை மருத்துவ பரிசோதனை செய்து தெரிந்து கொள்ள வேண்டும். காய்ச்சல் வந்தால், நான்கு வாரங்கள் வரை அது குறித்து பயப்பட அவசியம் இல்லை. அதற்கு மேலும் நீடித்தால், நிமோனியா, சிறுநீரக தொற்று போன்று தீவிர பிரச்னைகள் உள்ளதா என்று பார்க்க வேண்டும்.அறுபது சதவீதம் பேருக்கு உடல் சோர்வு பொதுவான பிரச்னையாக உள்ளது. சோர்வு இருக்கும் அனைவரையும் விட்டமின் சி, டி, தைராய்டு பரிசோதனை செய்ய சொல்ல முடியாது. இதற்கான காரணம், நபருக்கு நபர் மாறுபடும். ஊட்டச் சத்து மிக்க உணவு, காலை 10:00 மணிக்கு, 20 நிமிடங்கள் சூரிய ஒளியில் இருப்பது, சோர்வைப் போக்க உதவும். இரவில் எட்டு மணி நேரம் ஆழ்ந்த துாக்கம், சோர்வாக இருந்தாலும் எல்லா நேரமும் படுப்பதை தவிர்ப்பது, மதியம் ஒரு மணி நேரத்திற்கு மேல் துாங்காமல் இருப்பதும் முக்கியம்.டாக்டர் சுரேஷ் ராமசுப்பன்,சுவாச கோளாறுகள் மற்றும் அவசர சிகிச்சை பிரிவு மருத்துவர்,அப்பல்லோ மருத்துவமனை,கோல்கட்டா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !