வில்வத்தின் முக்கியத்துவம்
உடல் பலவீனமாகி, நோய் எதிர்ப்பு சக்தியை இழந்திருக்கும் நிலையில் தான் பழங்களின் அருமை, தெரிகிறது. நோய் தீர்க்கும் பழங்களில், வில்வம் பழம் மிக முக்கியமான ஒன்று.வில்வத்தில், அபாரமான மருத்துவ குணங்கள் நிரம்பியுள்ளன. சிவபெருமானுக்கு பிடித்த மங்களகரமான வில்வத்தின் இலை, காய், பழம், வேர் போன்றவை அருமருந்தாகப் பயன்படுகின்றன. வில்வ காயைப் பறித்துப் பார்த்தால் உருண்டையாகவும், ஒடு கடினமாகவும் இருக்கும். அதிக துவர்ப்பான சுவை கொண்டது. பழம், குடற்கோளாறுகளை நீக்கிவிடும். கனிந்த பழம், சாப்பிட சுவை நிறைந்ததும், உடல்சூட்டைதணித்து, மலக்கட்டை நீக்கி சுறுசுறுப்பையும் தருகிறது.உடலுக்கு பலம் தருகிறது; மூல ரோகத்தை நிவர்த்தி செய்கிறது. எளிதில் ஜீரணமாகும். வில்வ இலைக்கஷாயம் வைத்து பருக, கை, கால் பிடிப்பு, உடல்வலி ஆகியவை குணமாகும். இலையை, நீரில் நன்கு கொதிக்க விட்டு வலி, வீக்கம் உள்ள உடல் பகுதிகளில் ஊற்றினால், அவைகள் குறைந்து விடும். வில்வவேரை, கஷாயம் வைத்து பருக, நாடி நரம்புகளில் ஏற்படும் அதிர்வுகளை நீக்கி சாந்தமடைய செய்யும். வில்லகாய் பசியை தூண்டி விடும். மலத்தைக் கட்டும் குடல் கிருமிகளை நீக்கும். பழத்தை, பாலுடன் கலந்து, மிளகுத் தூள் சேர்த்து, இரவு உணவுக்கு பின் சாப்பிட்டால், உடலுக்கு பலம் கிடைக்கும்; மூல நோயும் நீங்கும்.வில்வ இலை சாறு, கல்லீரலின் செயல்களை தூண்டி விட்டு, பித்தத்தை தெளிவுறச் செய்யும். இருதயத்துக்கு உகந்ததும், ரத்தப்போக்கை கட்டுப்படுத்துவதிலும், சிறந்தது. கபத்தின் அடைப்பால் மூச்சுத் திணறல் ஏற்படும் நேரங்களில், வில்வ இலை சாறு உட்கொள்ள, கபம் கரைந்து விடும். ஜலதோஷம், இருமல், ஆஸ்துமா குணமாகும். வெள்ளைப்படுதல் போன்ற உபாதைகளில் இருந்து, வில்வம், குணமாக்கும்.