வெப்ப நோய்களுக்கு எளிய மருத்துவம்
அதிக வெப்பத்தினாலும், மிகையான குளர்ச்சியினாலுமே பெரும்பாலான நோய்கள் உண்டாகின்றன. வெப்பம் தொடர்பான நோய்க்கு, குளிர்ச்சியான மருந்தும் (உடல் சூட்டைத் தவிர்க்க மோர் குடிப்பது), குளிர்ச்சி தொடர்பான நோய்களுக்கு, சூடான மருந்தும் கொடுப்பது (சளி பிடித்தால் ஆவி பிடிப்பது) இயற்கை மருத்துவத்தின் பொது முறையாகும். கோடை காலங்களில் கழுத்துப் பகுதியில் வீக்கம் காணப்பட்டால், அதனை அம்மைக்கட்டு என்று கூறுவர். வீக்கமுள்ள பகுதியில் வேப்பிலையோடு மஞ்சள் சேர்த்து அரைத்துப் பூசினால், அம்மைக் கட்டு பூரணமாக குணமாகிவிடும். அம்மை நோய் கண்டவர்களுக்கு, உடலில் வேப்பிலை தடவப்படும். அம்மைக் கொப்புளங்கள் வற்றிய நிலையில், வேப்பிலையுடன் மஞ்சள் அரைத்துப் பூச, நோய் பூரணகுணமாகும். கோடைகாலத்தில் தோன்றும், மற்றொரு நோய் அக்கி. அக்கி உள்ளவர்களுக்குச் சிறிய, பெரிய கொப்புளங்கள் உடல் முழுவதும் காணப்படும். இதற்கு செந்நிற மண் சாந்து பயன்படுத்தி, அக்கி உள்ள இடங்களில் ஒரு வாரம் தடவினால், அக்கி மறைந்துவிடும். ஏனெனில் காவி மண் நீரை உறிஞ்சி, வெப்பத்தைத் தணிக்கும் தன்மை கொண்டது. இதனால் உடலில் உள்ள, அசுத்த நீர் செம்மண்ணால் நீக்கப்பட்டு, நோய் குணமாகிறது. கண் பகுதியில் ஏற்படும் கண்கட்டி, உடல் வெப்பத்தினால் உண்டாகிறது. இதற்கு கறிவேப்பிலையை பாலுடன் கலந்து, அரைத்துக் கட்டியின் மீது தடவினாலோ, உமிழ்நீரைக் கட்டியின் மீது தடவினாலோ, கைவிரலை உள்ளங்கையில் தேய்த்து மிதமான சூட்டில், கட்டியின் மீது தொடர்ந்து வைத்தாலோ, கட்டி நீங்கிவிடும். உடலின் சூட்டைத் தணிக்க உடல் முழுவதும், எண்ணெய் வகைகளைப் பூசிக் கொள்வதும், எண்ணெய்க் குளியல் செய்வதும், களிமண்ணை உடலில் பூசிக் கொள்வதும், நீர்நிலைகளில் நீராடுவதும் வழக்கம்.