உள்ளூர் செய்திகள்

ஆறு நிமிட நடைப்பயிற்சி சோதனை

எனது வயது 40. கடந்த 15 ஆண்டுகளாக நாளொன்றுக்கு 15 சிகரெட் வரை புகைத்தேன். அதிக இருமல், சளி உள்ளதால், எனது நுரையீரலில் பாதிப்பு உள்ளதாகவும், சிகரெட்டை உடனடியாக நிறுத்தும் படியும் டாக்டர் கூறுகிறார். நுரையீரல் பழைய நிலைக்கு வந்து விடுமா?நமது நுரையீரல் திறனை 'எப்.இ.வி1' என்ற பரிசோதனை மூலம் கண்டறியலாம். 'எப்.இ.வி1' என்பது, நாம் மூச்சை நன்கு உள்ளே இழுத்து வேகமாகவும், நீளமாகவும் வெளிவிடும் நம்மூச்சுக் காற்றின் அளவாகும். நம் நுரையீரலின் எப்.இ.வி1 அளவு 25 வயதுக்கு மேல் ஒவ்வொரு ஆண்டும் இயற்கையாகவே குறைகிறது. சிகரெட் பிடிப்போருக்கு இந்த அளவு அதிகமாகவே குறைகிறது. உதாரணத்திற்கு உங்கள் வயது 40 என்றால், உங்கள் நுரையீரலின் வயது 60 ஆக இருக்கும். சிகரெட் பிடிப்பதால் ஏற்படும் நுரையீரல் பாதிப்பை சி.ஓ.பி.டி., (குரோனிக் அப்ஸ்ட்ரக்டிவ் பல்மோனரி டிசீஸ்) என்று கூறுவர். சிகரெட் பிடிப்பதை உடன் நிறுத்தினால், நுரையீரல் பாதிப்படையாமல் தடுக்கலாம். உங்கள் நுரையீரல் எப்.இ.வி1 அளவும் சற்று அதிகரிக்கும். ஐம்பது வயதாகும் எனக்கு, ஓராண்டாக 'ஐ.எல்.டி.,' (இன்டர்ஸ்ஷியல் லங் டிசீஸ்) நுரையீரல் நோய் உள்ளது. இதற்கு 'பெர்பினிக்ஸ்' எனப்படும் மருந்தை டாக்டர் சிபாரிசு செய்தார். இம்மருந்து உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் என்றும் கூறினார். அப்படி இருக்க, இம்மருந்தை ஏன் எடுக்க வேண்டும்?ஐ.எல்.டி., எனப்படும் நோய் உள்ளவர்களுக்கு நுரையீரலில், பில்ரோஸிஸ் எனப்படும் பாதிப்பு ஏற்படுவதால், நுரையீரலில் ஒரு தழும்பு போல காணப்படும். நுரையீரலுக்கும், மற்றொரு அறியப்படாத சக்திக்கும் ஒரு போராட்டமே நடக்கிறது. இதனால் நுரையீரல் பாதிப்படையும். நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்தால், நம் நுரையீரல் பாதிப்பு குறைந்து விடும். அதற்காக 'பெர்பினிக்ஸ்' போன்ற மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. இம்மருந்தை மருத்துவரின் ஆலோசனைப்படியே பயன்படுத்த வேண்டும்.எனது வயிற்றில் சிறுகட்டி இருந்தது. என்னை பரிசோதனை செய்த மருத்துவர், அறுவை சிகிச்சையின் மூலம் அகற்ற வேண்டும் என்றார். அவ்வப்போது இருமல் இருந்ததால், மார்பு எக்ஸ்ரே, ரத்தப்பரிசோதனை, 6 நிமிட நடைப்பயிற்சி போன்றவற்றை செய்யும்படி கூறினார். 6 நிமிட நடைப்பயிற்சி என்பது என்ன?6 நிமிட நடைப் பயிற்சி (சிக்ஸ் மினிட் வாக் டெஸ்ட்) என்பது உங்கள் நுரையீரல் திறனை பரிசோதிக்கும் சோதனை. பரிசோதனைக்கு முன், உங்கள் ஆக்சிஜனின் எஸ்.பி.ஓ 2 மற்றும் இருதய துடிப்பை கண்டறிய வேண்டும். பின் 6 நிமிடங்கள் இடைவிடாமல் நடக்க வேண்டும். நீங்கள் நடப்பது, வேகமாகவும் இருக்கக் கூடாது, மெதுவாகவும் இருக்கக் கூடாது. நடந்தபின், உங்கள் எஸ்.பி.ஓ2, இருதய துடிப்பை கண்டறிய வேண்டும். இதன் அளவு நடப்பதற்கு முன் இருந்ததைவிட அதிகமாகவே இருக்கும். எஸ்.பி.ஓ2 அளவு, நடப்பதற்கு முன்பு இருந்ததைவிட மிகவும் குறைவாக இருந்தால் நுரையீரல் நோய்க்கான வாய்ப்பு உள்ளது. டாக்டர் எம்.பழனியப்பன்,மதுரை. 94425 24147


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்