உள்ளூர் செய்திகள்

இயல்பான வாழ்க்கைக்கு தூக்கம் அவசியம்!

நோயின்றி இயல்பான வாழ்க்கைக்கு தூக்கம் அவசியம் என, கடலுார் கோவன்ஸ் அதிநவீன நுரையீரல் சிகிச்சை மைய டாக்டர் கலைக்கோவன் கூறினார்.இதுகுறித்து அவர் கூறியதாவது:உலகில் வாழும் உயிரினங்கள் அனைத்திற்கும் பசி மற்றும் தூக்கம் அவசியம். இதில், முக்கியமானது தூக்கம். சரியான உணவு இல்லாமல் கூட பல நாள் இயல்பான வாழ்க்கை வாழலாம். ஆனால், இரண்டு நாட்கள் தூங்கவில்லை என்றால் நிம்மதியாக இருக்க முடியாது. நம்மில் பலருக்கும் தூக்கம் சார்ந்த பிரச்னைகள் ஏற்படுவது உண்டு. ஆனால், தூக்கமின்மை என்பது பல ஆபத்தான மருத்துவ பிரச்னைக்கு வழி வகுக்கும்.இதில், முக்கியமான பிரச்னை குறட்டை. இது, உடல் சோர்வால் வருவது என நினைப்பதுண்டு. இதை சாதாரணமாக எடுத்துக்கொள்கிறோம். ஆனால், நாம் விடும் குறட்டை நம் உடலையே பாதிக்கக் கூடும். ஆயுளை குறைக்கும்.நாம் சுவாசிக்கும் காற்று நமது மூக்கின் வழியாக உள்ளே சென்று தொண்டை பகுதியை கடந்து நுரையீரலுக்கு செல்லும். அந்த பாதையில் அடைப்பு ஏற்படும் போது, மூச்சுத் திணறல் ஏற்படும். தொண்டை பகுதியில் உள்ள சதைகள் தளர்ந்து இருந்தாலும், மூச்சுப் பாதையில் அதிகமான அடைப்பு ஏற்படும். நாம் விழித்திருக்கும் நேரத்தில் ஏற்படாது. ஆனால், தூங்கும்போது, அந்த தசைகள் மூச்சு உள்ளே செல்வது தடைபடும். தடைபட்ட மூச்சுப் பாதை வழியாக மூச்சு விடும்போது வரும் சத்தம் தான் குறட்டை.தூக்கத்தின் ஒரு பகுதியில் மட்டும் (ஆழ்நிலை தூக்கம்) இதுபோன்ற தொண்டை சதை தளர்வது உண்டு. இது அளவுக்கு மீறி தடைபட்டால் காற்று நுரையீரலுக்கு உள்ளே போவது முழுதுமாக தடைப்பட்டு தூக்கத்தில் மூச்சுத் திணறல் ஏற்படும். எனவே, குறட்டை தொடர்பாக மருத்துவர்களை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !