உள்ளூர் செய்திகள்

படிப்பும்... விளையாட்டும்..

பொதுத் தேர்வில் சாதிக்கும் மாணவ, மாணவியின் பெயர், 'டிவி'க்களிலும், நாளிதழ்களில் வரும் போது, இதுபோல், தன்னுடைய குழந்தையும் வர வேண்டும் என்பது இயல்பு தான். அதற்காக, எந்நேரமும் படி, படி என்று, குழந்தைகளை துன்புறுத்தக் கூடாது.எல்லா குழந்தைகளும் முதல் மதிப்பெண் பெற்று விட முடியாது. மதிப்பெண்ணை மட்டுமே அடிப்படையாக வைத்து எடை போடுவதை, தயவு செய்து தவிர்க்க வேண்டும். பல குழந்தைகளுக்கு, படிப்பு சாதாரணமாக வந்து விடும். சில குழந்தைகள், சற்று தடுமாறுவார்கள். எந்த இடத்தில் குறைபாடு இருக்கிறது என்று கண்டறிந்து, நிவர்த்தி செய்ய முயலலாம். பக்கத்து வீட்டில் இருக்கும் குழந்தை, சிறப்பு வகுப்புக்கு செல்கிறது என்றால், நீங்களும் அனுப்ப வேண்டும் என்று கட்டாயமில்லை.பெற்றோர் படித்திருந்தால், அவர்களுக்கு புரியும் வகையில் சொல்லிக் கொடுக்க வேண்டும். படிப்பு விஷயத்தில், ரொம்பவும் கடுமையாக நடந்து கொண்டால், குழந்தைகள் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும். இதற்கு மாற்றாக, விளையாட்டில் ஈடுபட செய்யலாம். அவர்கள், எந்த விளையாட்டில் சிறந்தவர்களாக இருக்கின்றனர் என்பதை கண்காணிப்பது, பெற்றோரின் கடமை.குறிப்பிட்ட விளையாட்டில் தேர்ந்தவர்களாக இருக்கிறார்கள் என்றால், அதற்குரிய பயிற்சி மையங்களுக்கு அனுப்பலாம். படிப்புக்கான முதல் படி, விளையாட்டு என்று, பலர் அறிந்துக் கொள்வதில்லை. விளையாட்டில் ஈடுபடுத்தும் போது, படிப்புக்குரிய சூழ்நிலை தானாக ஏற்படும். உன் விருப்பத்துக்கு மாறாக நாங்கள் நடந்து கொள்ளவில்லை; எங்கள் விருப்பத்துக்கு மாறாகவும் நீ நடந்து கொள்ளக் கூடாது என்று படிப்பின் அவசியத்தை உணர்த்தினால், சாதாரண மதிப்பெண் பெற்றவர்கள் கூட, நீங்கள் வியக்கும் வண்ணம் சாதித்து காட்டுவர் என்பது மட்டும் உறுதி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !