உள்ளூர் செய்திகள்

கால் வீக்கம்... கவனிக்க வேண்டிய அம்சங்கள்!

சமீபத்தில், டில்லியில் நடந்த சம்பவம் இது...

பள்ளி மாணவனான தன் மகனின் கால் வீக்கத்திற்கு, டாக்டரிடம் சிகிச்சை பெற்ற நிலையில், வீக்கத்தை குறைப்பதற்காக, எண்ணெய் தடவி, 'மசாஜ்' செய்திருக்கிறார், அவனின் அம்மா. மசாஜ் செய்யும் போதே, மூச்சு திணறி, உயிரிழந்து விட்டான் சிறுவன்.நம்மிடம் இருக்கும், பொதுவான பழக்கம் இது. கால்களில் வீக்கம் ஏற்பட்டால், உடனடியாக ஏதாவது ஒரு எண்ணெய் தடவி, மசாஜ் செய்வோம். சாதாரணமான வீக்கமாக இருந்தால், எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், பல நேரங்களில், முக்கிய உறுப்புகள் செயலிழப்பின் அறிகுறியாக, கால் வீக்கம் இருக்கலாம். இந்நிலையில், மசாஜ் செய்வது தவறு.

எந்த உறுப்பின் செயலிழப்பு அறிகுறி இது?

இதயத்தின் வலது பக்க வால்வுகள் உட்பட, பல்வேறு இதய கோளாறுகளால், கால்களில் வீக்கம் ஏற்படலாம். கல்லீரல் செயலிழப்பிற்கு காரணம், மது பழக்கம், வைரஸ் தொற்று போன்றவை. அதன் வெளிப்பாடாகவும், வயிறுடன் சேர்ந்து, கால்கள் வீங்கலாம். சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டால், சிறுநீர் முழுவதுமாக வெளியேறாமல், உடல் முழுவதும் நீர் தேங்கி, முகம் உட்பட பல பாகங்கள் வீக்கத்துடன் காணப்படலாம். ஆனால், வெளிப்படையான அறிகுறியாக, கால்களின் வீக்கம் இருக்கும்.

உறுப்பு செயலிழப்பு தவிர, வேறு காரணம் உள்ளதா?

ஊட்டச்சத்து குறைபாடு இருந்தாலும், கால்களில் வீக்கம் வரும். குறிப்பாக, புரதச்சத்து குறைபாடு, ரத்தசோகை இருந்தால், குழந்தைகள், பெரியவர்கள் அனைவருக்கும், கால் வீக்கம் வரும். கால்களில் அடிபட்ட காயம் அல்லது புண் இருந்தால், அதன் வழியே பாக்டீரியா தொற்று நுழைந்தாலும், வீக்கம் ஏற்படும்.நிணநீரில் தொற்று ஏற்பட்டாலும், கால்கள் வீங்கும். இதில், கால்களில் கட்டிகள் ஏற்பட்டு, சிவந்து காணப்படும். இவையெல்லாம், வலி இல்லாமல், வீக்கம் மட்டும் இருக்கும். உடம்பில் எந்த வகையான கேன்சராக இருந்தாலும், சில வகையான வேதிப் பொருட்களை உற்பத்தி செய்வதால், வீக்கம் ஏற்படலாம். சிலருக்கு, கால்களை தொங்கப் போட்டு உட்கார்ந்தால், வீக்கம் ஏற்படும். கால்களில் பெரிய அளவில் வீக்கத்தை உண்டு பண்ணும் யானைக்கால் நோய், பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டு விட்டது. எந்த நிலையிலும், கால்களில் வீக்கம் ஏற்பட்டால் அலட்சியப்படுத்தாமல், காரணத்தை தெரிந்து கொள்ள வேண்டும்.உறுப்பு செயலிழப்பால் ஏற்படும் வீக்கதை விட, எதிர்பாராமல் கால்களில் ஏற்படும் வீக்கத்திற்கு, 'டீப் வெயின் திராம்போசிஸ் - டிவிடி' என்று பெயர். அதிகம் பேரை பாதிக்கும் பிரச்னை இது. ஆனால், இது பற்றிய தெளிவு இல்லை.

டி.வி.டி., என்றால் என்ன?

கால்களின் தசைகளுக்கு அடியில் உள்ள ரத்தக் குழாயில், கெட்ட ரத்தம் தேங்கி, உறைந்து போவது இந்நிலை.அதாவது, சுத்தம் செய்யப்பட்ட ஆக்சிஜன் நிறைந்த ரத்தம், இதயத்தின் வலது பக்க ரத்த குழாய்கள் வழியே, உடலின் அனைத்து பாகங்களுக்கும் சென்று, 'கார்பன் - டை - ஆக்சைடு' அடங்கிய அசுத்த ரத்தம் மற்றும் பிற கழிவுகளை சேகரித்து, வலப்பக்க இதய அறைகளுக்கு சென்று, அங்கிருந்து நுரையீரல் வழியே, ஆக்சிஜன் அடங்கிய சுத்த ரத்தம் மீண்டும், இடப்பக்க இதய அறைகளின் மூலம், உடல் முழுவதும் செல்வது வழக்கமான சுழற்சி.இதில், கெட்ட ரத்தம், தசைகளின் கீழ் உள்ள ரத்த குழாய்களில் தேங்கி விட்டால், அந்த இடம் வீங்கி விடும். 'தசைகளின் அடியில் உள்ள இந்த ரத்த நாளங்களில், இது ஏற்படும். மற்ற பாகங்களில் வருவதை விடவும், காலில் வருவது பொதுவானது. கைகள், கழுத்து என்று, எந்த இடத்தில் வேண்டுமானாலும வரலாம்.

ஏன் இந்தப் பிரச்னை வருகிறது?

போதுமான அளவு உடற்பயிற்சி, உடல் இயக்கம் இல்லாதவர்களை அதிகம் பாதிக்கும். குறிப்பாக, உடல் பருமன் அதிகம் இருந்தால் வரும். உடல் கோளாறுகளால், பல மாதங்களாக படுத்த படுக்கையில் இருப்பவர்கள், அதிக நாட்கள் ஓய்விலேயே இருப்பதால், பாதிப்பு வரலாம். விபத்து ஏற்படும் போது, ரத்த நாளங்களில் அடிபடுவதாலும் வரலாம்.'லேப்ராஸ்கோபிக்' உட்பட, எல்லா விதமான அறுவை சிகிச்சைகளிலும், இப்பிரச்னை ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. கர்ப்பிணி பெண்களுக்கு வரலாம். வயதானவர்களுக்கு வரும் வாய்ப்புகள் அதிகம்.பல்வேறு காரணங்களால், பிறவியிலேயே ரத்தம் உறையும் தன்மை அதிகம் இருந்தால், இளம் வயதினருக்கும் வரலாம். 45 வயதிற்குள் இருப்பவர்கள், விபத்தில் பாதிக்கப்படுவது அதிகமாக இருப்பதால், எலும்பு முறிவு உட்பட பல்வேறு பாதிப்புகளால், இது வரலாம்.

டி.வி.டி., எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தும்?

ரத்த நாளங்களில், கெட்ட ரத்தம் உறைந்து, அப்படியே கெட்டியாக, ஒரு துகள் போல் இருக்கும். பல நேரங்களில், இருக்கும் இடத்தில் இருந்து விலகி, அசுத்த ரத்தத்துடன் கலந்து, இதயத்தின் வலது புற அறைகளுக்குச் சென்று, அங்கிருந்து, நுரையீரலில் உள்ள பிரதான ரத்தக் குழாயை அடைத்து, உடனடி உயிரிழப்பை ஏற்படுத்தும்.எதிர்பாராமல் நடக்கும் மரணங்களுக்கு, இதுவே காரணம். இதய செயலிழப்பை விடவும், அதிக அளவில் உயிரிழப்பை ஏற்படுத்துவது இது தான். சர்வதேச அளவில், மருத்துவமனைகளில் நடக்கும் உயிரிழப்புகளில், 30 சதவீதம், டி.வி.டி.,யால் ஏற்படும் நுரையீரல் ரத்தக் குழாய் அடைப்பால் தான் நிகழ்கிறது.

எப்படி தவிர்ப்பது?

உறுப்பு செயலிழப்பால் கால்களில் வீக்கம் ஏற்பட்டால், வேறு ஏதேனும் அறிகுறி தெரியும். ஆனால், டி.வி.டி.,யால் ஏற்படும் வீக்கம் எதிர்பாராமல், துாங்கி எழுந்தவுடன் பார்த்தால், கால்கள் திடீரென வீங்கி இருக்கும்.கால்களில் வீக்கம் என்றால், அலட்சியப்படுத்தவே கூடாது. அதிக நேரம் நடப்பது, தொற்றுகளால் வருவது எல்லாம் சாதாரண விஷயம். எதிர்பாராமல் ஏற்படும் வீக்கத்திற்கு என்ன காரணம் என்பது, உடனடியாக தெரிய வேண்டும்.நீண்ட நாட்கள் கர்ப்ப தடை மாத்திரைகள் சாப்பிடுவது, ஹார்மோன் சிகிச்சைக்காக சாப்பிடும் மாத்திரைகள், ரத்தத்தில் உறையும் தன்மையை ஏற்படுத்தும்.உறைந்த ரத்தத்தை கரைப்பதற்கு, தேவையான மாத்திரைகளை கொடுக்க வேண்டும். ஒருமுறை இப்பிரச்னை வந்தால், மீண்டும் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால், உறைந்த ரத்தத்தை முழுமையாக கரைக்கும் வரை, தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு, சிகிச்சை தேவைப்படும். குறைந்தது, மூன்று - ஆறு மாதங்களாவது தேவைப்படும்.டாக்டர் எம். பக்தவச்சலம்ரத்த நாளங்கள் அறுவை சிகிச்சை நிபுணர்சென்னை98401 33365


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்