இரண்டில் பிடிக்காத ருசி இருபதிலும் பிடிக்காது!
கடந்த சில ஆண்டுகளில், இளம் வயதினருக்கு இதயக் கோளாறுகள் ஏற்படுவது அதிகரித்து உள்ளதைப் பார்க்கிறோம். இதற்கு அடிப்படையே குழந்தை வளர்ப்பில் தான் ஆரம்பிக்கிறது. குழந்தைகள், 'கொழு கொழு'வென்று இருக்க வேண்டும்; விரும்பியதை தர வேண்டும் என்று துரித, பதப்படுத்திய, கொழுப்பு சத்து நிறைந்த உணவுகளை அதிகம் தருகிறோம். பழங்கள், காய்கறிகள் குழந்தைக்கு பிடிக்காது என்று தருவது இல்லை.எப்படி பிடிக்கும்? இரண்டு வயதிற்குள் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடப் பழக்கினால் தான், அதன் சுவை மூளையில் பதிந்து, வாழ்நாள் முழுதும் அதை சாப்பிடப் பிடிக்கும். நாம் தான் இனிப்பு தவிர வேறு, எந்த சுவையையும் குழந்தைக்கு பழக்குவதே இல்லையே...துரித, பதப்படுத்திய, கொழுப்பு சத்து நிறைந்த உணவுகளை அதிகம் தருவதால், 10 வயதிலேயே ரத்த நாளங்களில் கொழுப்பு படிய ஆரம்பித்து விடும். உடற்பயிற்சி கிடையாது; விளையாட்டு என்றால், மொபைல் போனில் மட்டுமே. ஓடியாடி விளையாடுவது இல்லவே இல்லை. 10 வயதில் படியத் துவங்கும் கொழுப்பு, அடுத்த, 15 ஆண்டுகளில் மாரடைப்பு, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை கோளாறு என்று வெளிப்படத் தான் செய்யும்.குழந்தைப் பருவத்தில் இருந்தே முறையான, ஆரோக்கியமான உணவுப் பழக்கம், உடற்பயிற்சி, ஏதாவது ஒரு விளையாட்டு பயிற்சி என்று வளர்த்தால், இளம் வயதில் மாரடைப்பு வருவதை தடுக்க முடியும்.பிறவி இதயக் கோளாறுகளை தடுக்க முடியாது; ஆனால், ஆரோக்கியமான இதயத்துடன் பிறந்த குழந்தையை தவறான உணவு, வாழ்க்கை முறைகளால், ஒரே இடத்தில் உட்கார வைப்பது, எல்லா நேரமும், 'படி படி' என்று சொல்வது, கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்து கெடுக்காமல் இருந்தால், மாரடைப்பு வருவதை தடுக்கலாம்.படிப்பை விடவும் ஆரோக்கியம் தான் முக்கியம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். 'டாக்டர், பைலட்' என்று என்னவாக ஆனாலும், அதை அனுபவிப்பதற்கு ஆரோக்கியம் வேண்டும்!டாக்டர் சி.எஸ்.முத்துக்குமரன், குழந்தைகள் நல இதய நோய் நிபுணர், சென்னை.