உள்ளூர் செய்திகள்

பத்து கேள்விகள் பளிச் பதில்கள்

1 'பாரா தைராய்டு' சுரப்பி எங்கு உள்ளது?கழுத்துப் பகுதியில், 'தைராய்டு' சுரப்பி உள்ளது. அதன், பின்புறம் நான்கு 'பாரா தைராய்டு' சுரப்பிகள் உள்ளன. 2 'பாரா தைராய்டு' சுரப்பியின் வேலை என்ன?'பாரா தைராய்டு' சுரப்பி, 'பாரா தைராய்டு பி.டி.எச்.,' என்ற 'ஹார்மோனை' சுரக்கச் செய்து, நாம் உட்கொள்ளும் உணவில் உள்ள கால்சியம் சத்து, உடலில் சேர்க்க உதவுகிறது. சூரிய ஒளியில் இருந்து கிடைக்கும், வைட்டமின் 'டி'யை, உடலுக்கான செயல் திறன் கொண்ட வைட்டமின் 'டி'யாக மாற்ற துணை புரிகிறது.ரத்தத்தில், கால்சியம் அளவு குறையும் போது, எலும்பு பகுதிகளில் இருந்து கால்சியத்தை எடுத்து, ரத்தத்திற்கு கொடுத்து சமப்படுத்துகிறது.3 கால்சியம் சத்து, உடலுக்கு அவசியமா... ஏன்?எலும்புகள் சீராகவும், உறுதியாக இருக்கவும், கால்சியம் மற்றும் வைட்டமின் 'டி' சத்துக்கள் உடம்புக்கு அவசியம். ரத்தத்தில், கால்சியம் அளவு, 8.5 10 மி.கி., இருக்க வேண்டும். இந்த அளவு குறைந்தால், உடல் உறுப்புகளில் ஒருவிதமான எரிச்சல் ஏற்படும்; கை, கால்கள் திடீரென உணர்வற்றுப் போகும்.4 உடலில் கால்சியம் சத்து குறைவதால், என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்?உணவின் மூலம் கிடைக்கும் கால்சியம் அளவு குறைந்தால், ரத்தத்திலும் குறைய ஆரம்பிக்கும். அப்போது, 'பாரா தைராய்டு ஹார்மோன்' அதிகம் சுரந்து, எலும்பில் இருக்கும் கால்சியத்தை எடுத்து, ரத்தத்தில் கலக்கச் செய்யும். இதனால், ரத்தத்தில் கால்சியம் அளவு சீராகும்; அதேநேரம், எலும்பில் கால்சியம் அளவு குறையும்.இதனால், எலும்புகள் மிருதுவாகி, உடலில் கடும் வலி ஏற்பட்டு, 'ஆஸ்டியோ மலேசியா' என்ற நோய் ஏற்படலாம். குழந்தைகளுக்கு கால்சியம் மற்றும் வைட்டமின் 'டி' சத்து குறையும்போது, 'ரிக்கெட்ஸ்' எனும் நோய் வரும்.5 'பாரா தைராய்டு' குறைவாக சுரப்பதையே, 'ஹைப்போ பாரா தைராய்டிசம்' என்கின்றனரா?பாரா தைராய்டு, சராசரி அளவைவிட குறைவாக சுரந்தால், உடலில் கால்சியம், பாஸ்பரஸ் அளவில், சமச்சீரற்ற நிலைமை ஏற்படும். இந்த சமயத்தில், கால்சியம் சத்தை, எலும்புகள் உள் வாங்காது. அதேநேரம், ரத்தத்திலும் கால்சியம் அளவு குறையும்போது, இதையே, 'ஹைப்போ பாரா தைராய்டிசம்' என்கிறோம்.6 ஹைப்போ பாரா தைராய்டு, மரபியல் காரணங்களால் வருமா?மரபியல் ரீதியாகவும் வரலாம் அல்லது கழுத்தில் ஏதேனும் அறுவை சிகிச்சை செய்திருந்தாலும் வர வாய்ப்புள்ளது.7 ஹைப்போ பாரா தைராய்டிசத்தை எவ்வாறு கண்டறிவது?ரத்த பரிசோதனையில் பி.டி.எச்., ஹார்மோன் அளவு குறைவாக இருந்தாலும், கால்சியம் அளவு குறைவாக இருந்தாலும், ஹைப்போ பாரா தைராய்டிசம் இருக்கிறது என அறிந்து கொள்ளலாம்.8 'ஹைப்பர் பாரா தைராய்டிசம்' ஏற்பட காரணம் என்ன?'பாரா தைராய்டு ஹார்மோன்' அதிகமாக சுரப்பதே, 'ஹைப்பர் பாரா தைராய்டு' பிரச்னை வர காரணம். பாரா தைராய்டு அதிகமாகச் சுரந்து, எலும்பிலுள்ள கால்சியத்தை வெளியேற்றும் பட்சத்தில், ரத்தத்தில் கால்சியம் அளவு அதிகமாகவும், எலும்பில் கால்சியம் அளவு குறைவாகவும் இருக்கும். மேலும், சிறுநீரில் கால்சியம் அளவு அதிகமாக வெளியேறும்.9 ஹைப்பர் பாரா தைராய்டிசத்தின் பாதிப்புகள் என்னென்ன?'ஆஸ்டியோ போரோசிஸ்' எனும் எலும்பு அடர்த்திக் குறைவு நோய் வரும். சிறுநீரகத்தில் கால்சியம், உப்பு தேங்கி, சிறுநீரகக் கற்கள் உருவாகும். வயிற்றில் அமிலத்தன்மை அதிகரித்து, 'பெப்டிக் அல்சர்' ஏற்படலாம். இதோடு, கணையம் சுரப்பிலும் பாதிப்பு ஏற்படும்.10 பாரா தைராய்டு சுரப்பியில் கட்டிகள் இருந்தால், என்ன சிகிச்சை மேற்கொள்வது?'செஸ்டமிபி ஸ்கேன்' மூலம், பாரா தைராய்டு சுரப்பியில், கட்டிகள் இருக்கிறதா என்பதை அறிந்து, கட்டிகள் இருந்தால், நவீன தொழில்நுட்பம் மூலம், சிறு துளைகள் இட்டு, கட்டிகளை அகற்றி விடலாம்.எஸ்.ஜாகீர் உசைன்,தைராய்டு அறுவை சிகிச்சை நிபுணர்.இணை பேராசிரியர், ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை. சென்னை.98410 76177


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !