மக்கோட்ஸ்சை அழிக்கும் திரிபலா கஷாயம்!
அறுபது வயது பெரியவர், மூன்று மாதங்களுக்கு முன் எங்கள் கிளினிக் வந்தார். கடந்த 10 ஆண்டுகளாக சர்க்கரை கோளாறுக்கான மருந்துகளை சாப்பிட்டு வந்துள்ளார். அவரது வலது காலில், கணுக்காலின் மேல் பகுதியில், சிறிய ரணம் இருப்பதாக கூறினார். காலில் உணர்ச்சி இல்லாமல், வீக்கம், அரிப்புடன் துர்நாற்றம் வீசுவதாகவும் கூறினார்.அவரது காலில் உள்ள ரணத்தை திரிபலா கஷாயத்தால் சுத்தம் செய்யும் போது புழுக்கள் இருப்பது தெரிந்தது, இப்புழுக்களை 'மக்கோட்ஸ்' என்று சொல்லுவோம். ஒவ்வொன்றாக வெளியில் எடுத்தோம். மொத்தம் 140 புழுக்கள் இருந்தன.பின் ஆயுர்வேதா பொடியை உபயோகித்து காயத்தை மூடி கட்டுக் கட்டி அனுப்பினோம்.மறுநாள் கட்டைப் பிரிக்கும் போது, சில புழுக்கள் இருந்தன. பழைய படி புழுக்ளை நீக்கி, கட்டுப் போட்டோம். மூன்று நாட்கள் தொடர்ச்சியாக இதைச் செய்ததில், அவருக்கு அரிப்பு நின்று விட்டது. புழுக்கள் முற்றிலும் நீக்கப்பட்டன.தொடர் சிகிச்சையில் துர்நாற்றமும் நின்று விட்டது. மருந்து, மாத்திரைகளோடு ஒரு மாதம் எடுத்த ஆயுர்வேத சிகிச்சையில் ரணம் முற்றிலும் ஆறியது. நீரிழிவு கால் புண்கள் என்பது பெரும் சிக்கல் ஏற்படுத்தக்கூடிய உபாதை. சர்க்கரை கோளாறு இருந்தால், சிதைந்த திசுக்கள் இருந்த இடத்தில் புதிய திசுக்கள் உருவாவதில் இடையூறு ஏற்படுகிறது. இதனால், சில புண்கள், இயற்கையாக குணமடைவதில் தாமதம் ஆகிறது.அதேபோன்று 36 வயது இளைஞர் சர்க்கரைக் கோளாறுடன் சிகிச்சைக்கு வந்தார். அவரது கால் பெருவிரலில் சிறிய ரணம் இருந்தது. தொடர்ந்து 30 நாட்கள், ஆயுர்வேத கஷாயம், மூலிகைப் பொடியை உபயோகித்து ரணத்தை சுத்தம் செய்ததில் குணமானது.ஆயுர்வேத மருத்துவ முறையில் ரத்த சர்க்கரையின் அளவும் கட்டுக்குள் வந்தது.தமிழ்நாடு அரசு, நீரிழிவு நோயால் ஏற்படும் பாத பாதிப்புகளை துவக்க நிலையிலேயே கண்டறிந்து, கால் இழப்புகளை தடுப்பதற்கு, ஒருங்கிணைந்த 'பாதம் பாதுகாப்போம்' திட்டத்தை செயல்படுத்துகிறது. இதில், ஆயுஷ் மருத்துவர்கள் மூலம் ஆயுர்வேத மருந்துகளும் தரப்பட்டால் சக்கரை கோளாறால் ஏற்படும் புண்கள் விரைவாக குணமடையும்.டாக்டர் சுதீர் ஐயப்பன்,ஆயுர்வேத மருத்துவர், ஸ்ரீ ஹரியம் ஆயுர்வேதம்,சென்னை86101 77899