நம் நாட்டில் இரைப்பை கேன்சரால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மிக அதிகம்.
காரணிகள்
புகை பிடிப்பது, மது அருந்துவது, இந்த இரண்டும் இரைப்பை கேன்சர் வருவதற்கான அபாயகரமான காரணிகள். இவை தவிர, இந்தப் பழக்கம் இல்லாதவர்களுக்கு, பழக்கம் இருப்பவர்களை ஒப்பிடும் போது வாய்ப்பு மிகவும் குறைவு.பதப்படுத்தப்பட்ட, சுத்திகரிக்கப்பட்ட உணவுகள், அதிக அளவில் ஊறுகாய் வகைகள், ஆடு, மாடு, பன்றி போன்ற சிவப்பு இறைச்சியை அதிக அளவில் சாப்பிடுவது, இரைப்பை கேன்சரை உண்டாக்கும் வாய்ப்பு அதிகம். தவிர, சமீப ஆண்டுகளில், பதப்படுத்தப்பட்ட இறைச்சியை அதிக அளவில் பயன்படுத்துகிறோம். இதில், 'நைட்ரேட், நைட்ரைட்' என்ற இரு வேதிப் பொருட்கள் உள்ளன.இவற்றில் நைட்ரைட் என்ற பொருள் சுத்திகரிக்கப்பட்டு, பதப்படுத்தப்பட்ட இறைச்சி, ஊறுகாய் வகைகள், பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் உணவுகளில் அதிகம் உள்ளது. தொடர்ந்து இது போன்ற உணவுப் பொருட்களை சாப்பிடுபவர்களுக்கு, இரைப்பையில் கட்டி வரும் வாய்ப்புகள் அதிகம்.பரம்பரையாக மரபியல் ரீதியில் இரைப்பை கேன்சர் வரும் வாய்ப்பு உள்ளதா என்றால், 95 சதவீதம் கிடையாது. உணவுப் பழக்கமும், நடத்தைப் பழக்கமும் பிரதான காரணங்கள்.
அறிகுறிகள்
'ஹெலிகோபாக்டர் பைலோரி' என்ற பாக்டீரியா தொற்று, நம் நாட்டில் மிகப் பொதுவாக பாதிக்கப்படும் தொற்று. இந்தத் தொற்றை நீண்ட நாட்கள் கவனிக்காமல் விட்டால், வயிற்றில் வாயு பிரச்னையை ஏற்படுத்தும். 10 - 15 ஆண்டுகள் கழித்து, கேன்சராக மாறும் வாய்ப்புகளும் உள்ளன. இந்தியாவில் 60 சதவீதம் பேருக்கு இந்த ஹெச் பைலோரி தொற்று உள்ளது. அனைவருக்கும் கட்டியாக இது மாறுமா என்றால் இல்லை.ஆரம்ப நிலை அறிகுறிகள் என்றால், கொஞ்சமாக உணவு சாப்பிட்டாலுமே வயிறு நிறைந்த உணர்வு, வாந்தி வரும் உணர்வு, சாதாரணமாக காய்ச்சல், தலைவலி என்றாலே இந்த அறிகுறிகள் எல்லாம் இருக்கும். எனவே, பொதுவாக யாரும் இந்த அறிகுறிகளை பொருட்படுத்துவதில்லை.
எப்படி கண்டுபிடிப்பது?
பசியின்மை, காரணமே இல்லாமல் உடல் எடை குறைவது, உடல் எடையில் 10 சதவீதத்திற்கும் அதிகமாக, நம் முயற்சி எதுவும் இல்லாமல் குறைவது, மஞ்சள் காமாலை, மலம் கறுப்பாக, ரத்தம், சளி கலந்து போவது, மலச்சிக்கல், திரும்பத் திரும்ப வாந்தி வருவது இவையெல்லாம் இரைப்பை கேன்சர் இருப்பதற்கான எச்சரிக்கை அறிகுறிகள்.ஜப்பான் நாட்டில், 50 வயதைத் தாண்டினாலே கண்டிப்பாக எல்லாரும், 'எண்டோஸ்கோபி' பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். காரணம், உலகத்திலேயே அதிகம் பாதிக்கப்படுவது ஜப்பானியர்கள் தான். அவர்களின் உணவு பழக்கமும், மரபியல் காரணமும் இதற்கு காரணமாக கூறப்படுகிறது. இதனால், அவர்கள் ஆரம்ப நிலையிலேயே கட்டியை கண்டுபிடித்து விடுவர். அப்படி செய்யும் போது, அறுவை சிகிச்சை தேவையில்லை. எண்டோஸ்கோபி பரிசோதனையிலேயே சிகிச்சை செய்து விடலாம்.நம் ஊரில் இது போல ஆரம்ப நிலையில் வருபவர்கள், 100ல் ஒருவர் கூட கிடையாது; இரண்டாவது, மூன்றாவது, நான்காவது நிலையில் தான் வருவர்.குழந்தைப் பருவத்தில் இருந்தே முறையான, ஆரோக்கியமான உணவுப் பழக்கம், உடற்பயிற்சி, நடத்தையில் ஒழுங்கு முறையை கடைப்பிடித்தால், எந்த வயதிலும் ஆரோக்கியமாக வாழலாம்.டாக்டர் எம்.எஸ்.கவுதம், ஜீரண மண்டல மருத்துவ ஆலோசகர், பீ வெல் மருத்துவமனை, புதுச்சேரி