உள்ளூர் செய்திகள்

மறக்க முடியாதது 2020... : மறக்கக் கூடாதது 202020!

''கொரோனா காலத்தில் வீடுகளுக்குள்ளேயே முடங்கி, மொபைல் போன், கம்ப்யூட்டர், டிவி.,யிலேயே மூழ்கி கிடக்கும், ஐ.டி.,ஊழியர்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், இல்லத்தரசிககள் என அனைவரும், '202020' பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்,'' என்கிறார் கண் மருத்துவர் ஸ்ரேயாஸ் ராமமூர்த்தி.கொரோனா வைரஸ் கண்களை பாதிக்குமா என்ன...?கொரோனா வைரஸ், மூக்கு, வாய் போன்று கண்களையும் பாதிக்கும் என்பதற்கு ஆதாரம் உள்ளது. கொரோனா பாதிக்கப்பட்ட ஒருவர் தொட்ட பொருளை, மற்றொருவர் தொட்டு விட்டு, கண்களில் கை வைக்கும்போது, தொற்று பரவ வாய்ப்புள்ளது. பாதிக்கப்பட்டால் கண்கள் நன்கு சிவந்து காணப்படும். இதனால், மாஸ்க் அணிவது போல, கண்களுக்கு கண்ணாடி அணிவது நல்லது. மொபைல்போன் கம்ப்யூட்டர், டிவி பார்ப்பது அதிகரித்து விட்ட இந்த காலகட்டத்தில், கண்கள் பாதிக்கப்படாமலிருக்க செய்ய வேண்டியதென்ன?உண்மைதான். இந்த காலகட்டத்தில் கண்களுக்கு நிறைய பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதிக நேரம் இவற்றை பயன்படுத்துவதால், கண்வலி, கண் உறுத்தல், கண்கள் சிவப்பு நிறமாக மாறுவது, பார்வை திறன் குறைபாடு போன்ற பாதிப்புகள் ஏற்படும். தொடர்ந்து இந்த ஸ்கிரீன்களை பார்க்கும்போது, கண் சிமிட்டும் நேரம் குறைவதால், கண்களில் உள்ள நீர் காய்ந்து விடுவதே காரணம்.இந்த பாதிப்புகளை தவிர்க்க, என்ன செய்யலாம்?ஸ்கிரீன்களில் அதிக 'புளூ வேவ் லென்க்த்' இருந்தால், புளூ பில்டர் கிளாஸ் அணிந்து கொள்ளலாம். 'டிவி'யை கண் உயரத்துக்கு மேலே வைத்து பார்க்கக்கூடாது. ஸ்கிரீனில் லைட் மற்றும் வெயில் வெளிச்சம் படும்போது, 'கிளேர்' அடிப்பதால், உற்று பார்க்க நேரிடுகிறது. இதனால் கண் வலி ஏற்படும். எனவே அதை தவிர்த்து விடுவது நல்லது.குறிப்பாக, மொபைல் போன், டிவி.,கம்ப்யூட்டர் ஸ்கிரீன்களை தொடர்ந்து, 20 நிமிடம் பார்த்து கொண்டிருக்கும் பட்சத்தில், அடுத்ததாக 20 அடி துாரத்தில் இருக்கும் ஒரு பொருளை பார்த்து, 20 நொடி கண்களை நன்கு சிமிட்ட வேண்டும். இதனால், பார்வை திறன் குறைபாடு ஏற்படுவதை தவிர்க்கலாம். மருத்துவ வட்டாரத்தில் இது, '202020' என அழைக்கப்படுகிறது.கண் பார்வை இழப்பை தவிர்க்க வழி உள்ளதா...?இந்தியாவில் ஏற்படக்கூடிய, 80 சதவீத கண் பார்வை குறைபாடுகளை, சிகிச்சை வாயிலாக சரி செய்ய முடியும். பார்வை இழந்து விட்டால், மீண்டும் அதை சரிசெய்வது சிரமம். கண்புரை, கண் நீரழுத்த நோய், சர்க்கரை வியாதியால் கண் நரம்புக்கு வரும் பாதிப்புகளை, சிகிச்சையால் சரி செய்ய முடியும். ஆனால், அதற்கு சரியான நேரத்தில் சிகிச்சை எடுக்க வேண்டியது முக்கியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்