இறுக்கமான ஆடையால் ரத்தக்குழாய் பாதிப்பு!
மனிதர்கள் நிமிர்ந்து நடப்பதால் இருதயத்திலிருந்து வயிறு, கால், பாதம் போன்றவற்றிற்கு செல்லும் ரத்தம் மீண்டும் ஆக்சிஜன் கலப்புக்காக புவியீர்ப்பு விசையையும் மீறி, இதயத்திற்கு வருவதற்கு சில சிரமங்கள் ஏற்படுகின்றன. நமது உடலில் ஏராளமான ரத்தக்குழாய்கள், குறுக்கும் நெடுக்குமாக சென்று உடலின் அனைத்து பாகங்களையும் இருதயத்தோடு இணைக்கின்றன. ஆக்சிஜன் கலந்த ரத்தத்தை எடுத்துச் செல்லும் நாடிகளும், ஆக்சிஜன் செலவழிந்து போன ரத்தத்தை எடுத்துச் செல்லும் சிரைகளும், தங்கள் அமைப்பில் சில மாறுதல்களைக் கொண்டுள்ளன.சிரைகளில் காலில் இருந்து இதயத்திற்கு, ரத்தத்தை எடுத்துச் செல்ல ஏதுவாக வால்வுகள் உள்ளன. இவை காலில் இருந்து இதயத்துக்கு கிளம்பும் ரத்தத்தை, புவியீர்ப்பு விசை மற்றும் நமது எடையின் காரணமாக மீண்டும் கீழே இறங்க விடாமல் தடுக்கின்றன. இந்த வால்வுகளில் தொல்லை ஏற்பட்டாலோ, ரத்தக் குழாய்களில் தளர்ச்சி ஏற்பட்டாலோ ரத்தக்குழாய்கள் தடித்து, விரிந்து, சுருண்டு ரத்தத்தை உறைய வைத்து, குறிப்பிட்ட இடத்தில் தேங்கச் செய்துவிடும். இந்த தொல்லையை நவீன அறிவியல் வெரிக்கோஸ் வெயின், நாளப்புடைப்பு, நாள அடைப்பு, நரம்பு புடைப்பு என்றும் குறிப்பிடுகிறது. யாருக்கு பாதிப்பு?நீண்டநேரம் நின்று பணிபுரிபவர்களுக்கும், பிறவியிலேயே ரத்தக்குழாய்களில் வால்வு பலவீனம் உடையவர்களுக்கும், கர்ப்பிணிகளுக்கும் ரத்தத்தில் கொழுப்பு மற்றும் ரத்தக்கட்டி அடைப்பு ஏற்பட்டவருக்கும், அடிவயிற்றில் கடும் அழுத்தம் கொடுத்து நின்றபடி உடற்பயிற்சி செய்பவர்களுக்கும், வயிற்றை இறுக்கும் ஆடை அணிபவர்களுக்கும், நீண்டநேரம் காலை தொங்க விட்டுக்கொண்டே உட்கார்ந்து பணிபுரிபவர்களுக்கும், கால் ரத்தக்குழாயில் பாதிப்புகள் ஏற்படுகின்றன. என்ன ஆபத்து?இந்த ரத்தக்குழாய்களில் பாதிப்பு ஏற்படும்பொழுது கால் முழுவதும் கனமாக உணருதல், காலில் ரத்தக் குழாய்கள் புடைத்து காணப்படுதல், கணுக்கால்களில் வீக்கம், முழங்காலுக்கு கீழ் உள்ள பகுதிகள் கருஞ்சிவப்பாக மாறுதல், காலில் காயம் ஏற்பட்டால் ரத்தம் நிற்காமல் பீச்சி அடிக்கும். எப்படி தவிர்ப்பது?வெரிக்கோசால் பாதிக்கப்பட்டவர்கள், நீண்டநேரம் நிற்பதைத் தவிர்க்க வேண்டும். இரவில் படுக்கும்போதோ அல்லது அமர்ந்திருக்கும் போதோ, காலை சற்று தூக்கிக் கொண்டு படுக்க வேண்டும். அதிகமான நரம்பு புடைப்பு காணப்பட்டால் காலை இறுக்கி கட்டும் இழுவை கச்சை துணிகளை அணிய வேண்டும். பெண்களுக்கு பிரசவத்தின் பின்பும், மளிகைக்கடை வைத்திருப்பவர்கள், அதிக உடல் எடை உடையவர்கள், நீண்டநேரம் நிற்கும் காவல் பணியாளர்கள், இஸ்திரி செய்பவர்கள் வெரிக்கோஸ் தொல்லையால் பாதிக்கப்படுகின்றனர்.