பள்ளிக்குழந்தைகளின் பற்களை பாதுகாக்கும் வழிகள்
* பள்ளி குழந்தைகளுக்கு என, பற்களை பாதுகாக்கும் வழிமுறைகள் உள்ளனவா?வீட்டில் இருக்கும் குழந்தைகளின் பற்கள் மற்றும் வாயின் ஆரோக்கியத்தை கவனிப்பது எளிது. பள்ளி செல்லும் குழந்தைகள் ஒரு நாளில் 5 முதல் 8 மணி நேரம் பள்ளியில் உள்ளனர். இவர்களது பற்களை சுத்தமாக வைக்கும் வழிமுறைகளை கண்காணிப்பது சற்று கடினமாகி விடுகிறது. இவர்களின் பால் பற்கள் மிக சிறியவை. சுலபமாக பாதிப்புக்கு உள்ளாகக் கூடியவை.பள்ளி குழந்தைகளுக்கு சொத்தை பற்கள் வருவதற்கு முக்கிய காரணம் அவர்கள் உண்ணும் உணவு வகைகளால் தான். பள்ளிக்கு கொடுத்து அனுப்பும் உணவில் காய்கறிகள் நிறைய இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். நொறுக்குத் தீனிகள் பற்களில் ஒட்டிக் கொள்ளும் தன்மை கொண்டவை. இவற்றை உடனடியாக சுத்தம் செய்யாமல் விட்டால், இவற்றால் சொத்தை வரும். பலவித பழங்களை இடைவேளையின் போது கொடுத்து அனுப்பலாம். இவர்கள் மதிய உணவு மற்றும் சிற்றுண்டி இடைவேளை முடிந்தபின், வாயை நன்கு தண்ணீரால் கழுவ பழக்க வேண்டும். இந்த வழிமுறைகளில் ஆசிரியர்களின் பங்கும் நிறைய உள்ளது. குழந்தைகள் சாப்பிட்ட பின், நன்றாக வாயை சுத்தம் செய்யும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். பல் சொத்தை தவிர மற்றொரு பொதுவான பிரச்னை, பள்ளியில் விளையாடும்போது, பற்களில் அடிபடுவது, அடிபட்டு ரத்தம் வந்தால் குளிர்ந்த நீரால் வாயை கழுவி சிறிது ஐஸ்கட்டியை வைக்க வேண்டும். உடனடியாக பல் டாக்டரிடம் அழைத்துச்செல்ல வேண்டும். முறையாக பால் பற்களை பராமரிப்பது பின்னாளில் நிரந்த பற்களின் ஆரோக்கியத்திற்கு அவசியம்.* என் பதினைந்து வயது மகளுக்கு, நிரந்தர பற்கள் அனைத்தும் முளைத்து விட்டன. ஆனால் இன்னும் சிங்கப்பல் மட்டும் விழவில்லை. பால் பற்களாகவே உள்ளன. இதற்கு ஏதாவது சிகிச்சை செய்ய வேண்டுமா?இது வளரும் வயதில் உள்ள குழந்தைகள் சிலருக்கு வரும் பிரச்னை. ஒருசில பற்கள், அதிலும் முக்கியமாக சிங்க பற்கள் விழாமல் இருக்கும். இதற்கு காரணம், சிங்க பற்கள், அதன்அருகில் உள்ள மற்றபற்கள் அனைத்தும் முளைத்தபின், முளைக்கும். அந்த நேரம் சிங்க பற்களுக்கு தாடை எலும்பில் இடம் இல்லாமல் போகும். ஒரு சிலருக்கு பிறப்பில் இருந்தே சில நிரந்தர பற்கள் இல்லாமல் இருக்கும். இதனாலும் அந்த இடத்தில் உள்ள பால்பற்கள் விழாமல் இருக்கும். இதற்கு சரியான நேரத்தில் சிகிச்சை செய்யா விட்டால் மற்ற பற்களும் கோணலாக முளைத்து, பல்வரிசை சீராக இருக்காது. சிங்கப்பல் இருக்கும் இடத்தை, ஒரு எக்ஸ்ரே படம் எடுத்து, நிரந்தர பற்களின் நிலையை முதலில் அறிய வேண்டும்.அருகில் உள்ள பற்கள் மற்றும் எலும்பை பரிசோதனை செய்ய வேண்டும். நிரந்தர பற்கள் முளைப்பதற்கு தயாராக இருந்தால், பால் பற்களை அகற்றி விடலாம். பின்னர் கம்பிபோட்டு, நிரந்தர பற்களை அதன் இடத்திற்கு கொண்டு வந்து விடலாம். ஒருவேளை நிரந்தர பற்கள் இல்லாமல் இருந்தால், பால் பற்கள் உறுதியாக உள்ளனவா? எனப் பார்க்க வேண்டும். வேர் முழுமையாக வளராமல், உறுதியாக இல்லாமல் இருக்கும்பட்சத்தில், அந்தப் பல்லை எடுத்து விட்டு, 'இம்ப்லான்ட்' வைத்து இயற்கை பல்போலவே நிலையான பற்களை பொருத்தலாம்.டாக்டர் ஜெ.கண்ணபெருமான்,மதுரை.94441 54551