சாப்பாடு கிடைக்காவிட்டால் என்ன செய்வது?
அதிக மக்கள் தொகை உள்ள நம் நாடு, 'சர்க்கரை நோயாளிகளின் தலைநகரம்' என்று தொடர்ந்து சொல்லப்படுகிறது. நம்மை விட அதிக மக்கள் தொகை உள்ள சீனா, பதப்படுத்தப்பட்ட, துரித உணவுகள் அதிகம் உள்ள அமெரிக்கா உட்பட உலகில் எந்த நாடும், சர்க்கரை நோயாளிகளின் தலைநகரமாக ஏன் மாறவில்லை?இதற்கும் காரணம், 'ஆங்கிலேயர்களின் காலனி ஆதிக்கம் தான்' என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நாம் மட்டுமல்ல; பாகிஸ்தான், வங்கதேசத்தில் அதிக சர்க்கரை நோயாளிகள், இதயக் கோளாறுகள் வரக்கூடிய அபாயத்தில் இருப்பதற்கும், காலனி ஆதிக்கம் தான் காரணம்.உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பு கரையும் விதமும், உணவில் இருந்து ஊட்டச்சத்துக்களை உறிஞ்சிக் கொள்ளும் தன்மையும், நம் முன்னோரின் மரபணுவில் இருந்து வருபவை தான்.முதலில் நிர்வாகம், அதன்பின் ஆட்சி, அதிகாரம்என்ற பெயரில் பல நுாற்றாண்டுகளாக ஆங்கிலேயர்கள் நம்மை அடிமைப்படுத்தினர். உணவில் இருந்து அனைத்திலும் இதன் தாக்கம் இருந்தது. காலனி ஆதிக்கத்தின் போது, உணவு கிடைக்காமல், 18, 19ம் நுாற்றாண்டுகளில், பல லட்சம் மக்கள் உயிரிழந்த சோகம் வரலாறு.உணவு கிடைக்கும்போது, கொழுப்பாக மாற்றி, எதிர்கால தேவைக்கு சேமித்து வைக்கும் விதமாக நம் மரபணு மாறி விட்டது; இதனால், அத்தனை சுலபமாக கொழுப்பை எரிப்பதில்லை. இப்போது, காலனி ஆதிக்கம் இல்லை; உணவு தட்டுப்பாடு இல்லை; அளவுக்கு அதிகமாகவே சாப்பிடுகிறோம். அதற்கு தகுந்த உடலுழைப்பு இல்லை. ஆனால், உணவு கிடைக்காத போது, தேவைப்படும் என்று கொழுப்பை சேமித்து வைக்கும் நம் மரபணுவில் மாற்றம் வரவில்லை.விளைவு, தெற்காசியர்களுக்கு, ஐரோப்பியர்களை விடவும், சர்க்கரை கோளாறு வரும் வாய்ப்பு ஆறு மடங்கு அதிகம். மற்றவர்களை விட இரண்டு மடங்கு அதிக உடற்பயிற்சி நமக்கு தேவைப்படுகிறது. ஆதாரம்: பிரவுன் பல்கலைக் கழகம், ரோட் ஐ லேண்ட், அமெரிக்கா.