உள்ளூர் செய்திகள்

ஆஸ்துமாவிற்கு நிவாரணம் தரும் கோதுமை

ஆஸ்துமா நோயாளிகளுக்கு ஆயுர்வேத மருத்துவத்தில் சிறந்த நிவாரணிகளாக கஷாய மருந்துகள் உள்ளன. வீட்டில் உள்ள சில உணவுப் பொருட்களாலும் மார்புச் சளியை கரைக்கலாம். அரிசி மாவுடன் கால் பங்கு சுக்கு துாள், சிறிது வேப்பெண்ணெய் கலந்து மார்பிலும், முதுகிலும் பற்று போட்டு, அதிகபட்சம் இரண்டு மணி நேரம் வைத்தால், கரையாத மார்புச் சளியும் கரைந்து வெளியேறும்.கோதுமை நொய்யை முதல் நாள் இரவு ஊற வைத்து, மறுநாள் காலையில் கரண்டியால் நன்கு மசித்து, துணியில் வடிகட்டி எடுத்த பாலை குடிக்கலாம்.முழு கோதுமையை வறுத்து துாளாக்கி, வெந்நீர் சேர்த்து, வடிகட்டிய நீருடன் பால் சேர்த்து சாப்பிட கபம் கட்டாது. வறுத்த கோதுமை மாவை தேன் சேர்த்து பிசைந்து சாப்பிடுவது மூட்டு வலி, முதுகு வலிக்கு நல்லது. கோதுமை மாவை களியாக்கி வேப்பெண்ணெய் சேர்த்து மார்பிலும் முதுகிலும் தடவி கட்டிவிட, கெட்டிப்பட்ட சளி இளகி மூச்சுத் திணறல் குறையும்.தேங்காய் எண்ணெயில் சூடத்தைப் போட்டு சூடாக்கி, மார்பின் முன், பக்கவாட்டு, பின் முதுகில் தடவி, சிறிது நேரம் கழித்து இதயப் பகுதியை தவிர்த்து, மற்ற பகுதிகளில் தவிடு அல்லது ஆற்று மணலை துணியில் முடிந்து சூடாக்கி, ஒத்தடம் கொடுப்பதால் கபம் உருகிவிடும். உருகிய கபத்தை வாந்தி சிகிச்சை மூலம் நீக்கி விடலாம். இதனால், இருமல், மூச்சிரைப்பு போன்ற உபாதைகள் நீங்கி விடும்.உடல், மனதளவில் பலவீனமாக இருப்பவர்கள் இதை செய்யக்கூடாது. அது போன்ற நபர்களுக்கு வியாக்ரயாதி, தசமூலகடுத்ரயாதி, ஏலாகனாதி, வாரணாதி, குடூச்யாதி, பலாஜீரகாதி, படோலகடுரோஹிண்யாதி போன்ற கஷாய மருந்துகளை, நோயாளியின் தன்மைக்கு ஏற்ப சிறிய அளவில் தேனுடன் கலந்து, காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிடலாம். இருமல் வலியுடன் கூடிய இருமல், மூச்சுத் திணறல் இருந்தால், மஹாமஞ்ஜிஷ்டாதி கஷாயத்தை மேற்குறிப்பிட்ட கஷாயத்துடன் சாப்பிட நல்ல பலன் தரும்.இம்மருந்துகளால் பசி, செரிமானம் நன்குள்ள நிலையில், அகஸ்திய ரசாயனம், தசமூல ரசாயனம், வசிஷ்ட ரசாயனம் போன்ற லேகிய மருந்துகளை இரவில் படுக்கும் முன் சாப்பிட்டு வர ஆஸ்துமா, விக்கல், இருமல், தலைவலி, தலைபாரம், ஜலதோஷம் போன்ற உபாதைகளில் இருந்து விரைவில் நிவாரணம் பெறலாம். லக்ஷ்மிவிலாஸரசம் மாத்திரை, வாயுகுளிகை, அக்னிகுமாரரஸம், ஆஸால்யாதி மாத்திரை, வாஸாரிஷ்டம், கனகாஸவம், வில்வாதி குளிகை போன்ற தரமான மருந்துகளும் இந்த உபாதையை நீக்க நல்ல பலன் தரும்.ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனையின்படி இந்த மருந்துகளை சாப்பிட வேண்டும்.டாக்டர் எஸ்.ரஞ்சனி, ஆயுர்வேத பொதுநல மருத்துவர், சென்னை 94456 95771


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்