உள்ளூர் செய்திகள்

"ஸ்டெம் செல்லையும் தானம் தரலாம்

ஒரு காலத்தில் பரபரப்பாக பேசப்பட்ட ரத்த தானத்தை போன்று, தற்போது, மருத்துவ துறையில், வேர் அணு (ஸ்டெம் செல்) தானம், அதிகம் பேசப்படுகிறது. நவீன மருத்துவத்தின் மற்றொரு மைல்கல்லாக கருதப்படும், 'ஸ்டெம் செல்' தானம் குறித்து விவரிக்கிறார், ரத்தவியல் நிபுணர் ரேவதி ராஜ்.ரத்த புற்றுநோய், ரத்த சிவப்பணுக்கள் குறைபாட்டால் உருவாகும், 'தாலசீமியா' எனும் பிறவிநோய், ரத்த வெள்ளணுக்கள், சிவப்பணுக்கள், தட்டணுக்கள் ஆகியவற்றின் குறைபாட்டால் வரும், 'ஏபிளாஸ்டி அனீமியா' போன்ற நோய்களுக்கு ஆளாவோர் மற்றும் பிறவிலேயே நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு உள்ளோருக்கு, வழக்கமான சிகிச்சை முறைகளுக்கு மாற்றாக, தற்போது, 'ஸ்டெம் செல்' சிகிச்சை அளிக்கப்படுகிறது.இந்த சிகிச்சை முறையில், ரத்த அணுக்கள் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டோருக்கு, கொடையாளர்களிடம் இருந்து பெறப்படும் பொருத்தமான, 'ஸ்டெம் செல்'லை கொண்டு, 'ஸ்டெம் செல்' மாற்று சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதன் மூலம், புதிய ரத்த அணுக்கள் உற்பத்தி செய்யப்பட்டு, நோய்கள் குணப்படுத்தப்படுகின்றன.பொதுவாக, மனிதர்களின் எலும்பு மஜ்ஜை, தொப்புள் கொடி ஆகியவற்றில் இருந்து பெறப்படும் ஸ்டெம் செல்கள், இவற்றுக்கான பிரத்யேக வங்கியில் சேமிக்கப்பட்டு, தேவைப்படும்போது, நோயாளிகளுக்கு செலுத்தப்படுகின்றன. ரத்த வகைகளைப் போன்று, 'ஸ்டெம் செல்'களிலும் வகைகள் உள்ளதால், கொடையாளியின், எலும்பு மஜ்ஜை, தொப்புள் கொடி ஆகிய இடங்களில் இருந்து பெறப்படும், 'ஸ்டெம் செல்'கள், நோயாளிக்கு பொருந்தாத போது, புற எல்லை சார்ந்த ரத்த ஸ்டெம் செல் தானம் (Peripheral blood stem cell donation) மூலம் பெறப்படும் செல்கள், நோயாளிகளுக்கு செலுத்தப்படுகிறது.'சலைவா' எனும் பரிசோதனை மூலம், கொடையாளிகளின், 'ஸ்டெம் செல்' வகை அறியப்படுகிறது. இதில், கொடையாளிகளின் கன்னத்தின் உள் பகுதியில் இருந்து, சேகரிக்கப்படும் சில துளி உமிழ்நீரில் இருந்து, ஸ்டெம் செல்லின் வகை அறியப்படுகிறது.மேலை நாடுகளில் பிரபலமாகி வரும், 'ஸ்டெம் செல்' தானம் குறித்த விழிப்புணர்வு, நம் நாட்டில் குறைவாகவே உள்ளது. ரத்த அணுக்கள் தொடர்பான நோய்களால் பாதிக்கப்படுவோரின் மறுவாழ்வுக்கு பயன்படும், 'ஸ்டெம் செல்' தானத்தை, ரத்த தானத்தை போன்று அளிக்க, பொதுமக்கள் முன்வர வேண்டும். 18 - 50 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள், தங்கள், 'ஸ்டெம் செல்'லை தானமாக தரலாம். இதனால் அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.டாக்டர் ரேவதி ராஜ்,ரத்தவியல் நிபுணர்,அப்பல்லோ மருத்துவமனை, சென்னை.98410 70249


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்