உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / நிஜக்கதை / மனிதன்..மனிதன்...

மனிதன்..மனிதன்...

ஏலகிரிதிருப்பத்துார் மாவட்டத்தில் உள்ள சிறிய சுற்றுலா மலை வாசஸ்தலம்.அந்த இடத்தை சுற்றிப் பார்க்க ஒரு குடும்பம் காரில் சென்று கொண்டிருந்தது.நடுவில் ஒரு இடத்தில் காரை நிறுத்தி இயற்கை அழகை ரசித்தபடி மீண்டும் பயணத்தை தொடர்ந்தனர்.இந்த இடத்தில் இறங்கி ஏறும் போது குடும்பத்தலைவியின் போன் கிழே விழுந்துவிட்டது, யாரும் கவனிக்கவில்லை.தங்குமிடம் வந்தபிறகுதான் தெரிந்தது அந்த குடும்பத்தலைவியின் மொபைல் போன் 'மிஸ்ஸான' விஷயம்.நகை காணாமல் போனால் கூட பெண்கள் அவ்வளவு பதட்டப்படமாட்டார்கள் ஆனால் போன் காணாமல் போனால் அவ்வளவுதான், தாங்கள் உலகில் இருந்தே தனிமைப்படுத்தப் பட்டதைப் போல தவித்துப் போய்விடுவர்.வீட்டிற்குள், காரில், உடமைகளில் எங்கு தேடியும் போன் கிடைக்கவில்லை.காணாமல் போன போனிற்கு இன்னோரு போனில் இருந்து அழைப்பு விட்டதும் எதிர்முனையில் ஒரு ஆண் குரல்.'சார் இது என் போன், எப்படியோ மிஸ்ஸாயிடுத்து, கொடுத்துடுங்க சார் உங்களுக்கு கோடி புண்ணியம்' என்றார்.போன் இருப்பது தெரிந்த சந்தோஷம் வந்தாலும் அது கையில் கிடைக்குமா என்ற சந்தேகமும் இருந்தததால் குரலில் ஒரு பதட்டம்.'ஆமாம்மா இதை நான்தான் வழியில் கண்டெடுத்தேன் ஊரர் பொருள் எனக்கு எதுக்கும்மா, நான் கடைகளுக்கு பிஸ்கட் கேக் போட்டு சம்பாதிக்கும் சிறு வியாபாரி, இப்ப நான் மலையைவிட்டு இறங்கிட்டேன் நாளை திரும்பவும் மலைக்கு வருவேன் அப்ப நீங்க இருக்கிற இடத்திற்கே வந்து போனைக் கொடுக்கிறேன் கவலைப்படாதீங்க என்று சொல்லிவிட்டார்.ஆனாலும் தலைவியின் மனசு ஆறவில்லை, கூட இருந்தவர்கள் இருபதாயிரம் ரூபாய் போனாச்சே சிம்கார்டை துாக்கிபோட்டுட்டு போய்கிட்டே இருக்கப்போறாரு, அதுக்கு கொஞ்சம் அவகாசம் கேட்கிறாரு என்று அவநம்பிக்கையை விதைத்தனர்.அப்படியும் நடந்துவிடுமோ? என்று இரவெல்லாம் துாக்கம் தொலைத்தவர் விடிந்ததும் மீ்ண்டும் தனது போனிற்கு அழைத்தார்.அது உயிர்பெற்று ஒலித்ததும்தான் இவருக்கு உயிர்வந்தது.அதே நபர் பேசினார் பயப்படாதீங்க, பதட்டப்படாதீங்க, கலையில் பத்து மணிக்கு வந்துவிடுவேன் என்று சொல்லி விலாசம் வாங்கிக் கொண்டார்.பத்து மணி மிக நீளமாகியது இருந்தும் மொத்த குடும்பமும் பேசிய நபர் பேசியபடி வருவாரா? என்ற சந்தேகத்துடனேயே காத்திருந்தது, காரணம் தொலைந்த, திருடுபோன மொபைல் போன்கள் திரும்பக் கிடைத்ததாக வரலாறு இல்லையே என்ற சிந்தனை அனைவர் மனதிலும் ஒடிக்கொண்டிருந்தது.அவர் போனைக் கொடுத்ததும் வெறுமனே நன்றி மட்டும் சொல்லாமல் கையில் நுாறு ரூபாய் கொடு என்றார் ஒருவர், இந்தக் காலத்தில் நுாறு ரூபாய் எம்மாத்திரம் இருநுாறு ரூபாயாவது கொடுக்கணும் என்றார் மற்றொருவர், இல்லையில்லை நான் ஐநுாறு ரூபாய் கொடுக்கப் போறேன் ஏன் என்றால் எனக்குத்தான் தெரியும் என் போன் மற்றும் 'அதனுள்' இருக்கும் மதிப்பு என்றார் தலைவி.சரியாக பத்து மணிக்கு ஒரு பழைய இரு சக்கர வாகனத்தில் வந்த எளிமையான தோற்றம் கொண்ட ஒருவர், குடும்பத்தலைவியிடம் போனை ஒப்படைத்தார்,நன்றியோடு பெற்றுக் கொண்டவர் தனது அன்பின் அடையாளம் அவசியம் ஏற்றுக்கொள்ளுங்கள் என்று சொல்லி ஐநுாறு ரூபாயை மிக பாந்தமாக எடுத்துக் கொடுத்தார்.அட ஏங்கம்மா.. மனுஷனுக்கு மனுஷன் உதவுறதுக்கு விலை வைக்கீறிங்க என்று சொல்லி ஐநுாறு ரூபாயை எவ்வளவு வற்புறுத்தியும் பெற மறுத்தவர் வீட்டினுள் இருந்த பிறந்த நாள் கொண்டாட்ட விசேஷத்தைப் பார்த்துவிட்டு யாருக்கு பிறந்த நாள் என்றார்.என் பேரனுக்குத்தான் என்று பேரனை அறிமுகம் செய்ய, பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்று சொல்லி அவன் கையில் ஒரு கேக்கையும் கொடுத்துவிட்டு 'எல்லோரும் சந்தோஷமாக இருங்க' என்று சொல்லிவிட்டுச் சென்றார்.இந்தக் காலத்தில் இப்படியும் ஒரு மனுஷன்...-எல்.முருகராஜ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

நிக்கோல்தாம்சன்
ஆக 10, 2024 06:18

மஞ்சப்பையோடு வந்து தமிழ்நாட்டை கொள்ளையடித்த வெளிமாநிலத்தவர் கண்டுள்ளேன் , ஆனால் தமிழன் என்றும் தமிழன்தான்டா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை