வேலையில என்னை ரொம்பவே முழ்கடிச்சுக்கிட்டேன், குடும்பத்த, குறிப்பா சம்சாரமான உன்னை நான் கவனிக்கவேயில்லை, இந்த 'படத்தை' முடிச்சுட்டு ,உன்னை கூட்டிட்டு நான் சிங்கப்பூர்,மலேசியான்னு பயணிக்கலாம்னு இருக்கேன் என்று என் மணைவி கமலாவிடம் சொல்லியிருந்தேன்,அதற்கேற்றப நான் ரஜினியின் பாண்டியன் படத்தையும் வேகமாக எடுத்துக் கொண்டு இருந்தேன், இந்த நிலையில் ஒரு நாள் என் வீட்டில் இருந்து ஒரு போன் நீங்க வீடு வரை உடனே வரணும் என்றது குரல்..என்னவோ ஏதோவென்று வீட்டிற்கு போனால் நடுக்கூடத்தில் என் அன்பு மணைவி கமலா புதுப்புடவை போர்த்தியபடி பிணமாக படுக்கவைக்கப்பட்டு இருந்தாள்..
என் கூடவே இருப்பாள் என்று நினைத்த மணைவி, என்னுடன் உலகம் முழுவதும் சுற்றி வருவாள் என்று நினைத்த மணைவி,என்னை கரம்பிடித்த நாள் முதல் நன்கு கவனித்துக் கொண்ட மணவைி,எனக்கு அளவில்லாத அன்பையும்,சந்தோஷத்தையும் அள்ளித்தந்த மணைவி நடுக்கூடத்தில் பேசசு மூச்சில்லாமல் படுத்துக் கிடந்தாள்.அவள் எனக்கு செய்த நன்மைகளுக்கு எல்லாம் பதிலாக திருப்பித் தர நினைத்து, அவளுடன் பயணம் செய்ய தேதி எல்லாம் நிர்ணயம் செய்த நிலையில், அவள் மட்டும் தனியாக சொல்லாமல் கொள்ளாமல் திரும்பிவராத உலகிற்கு பயணித்துவிட்டாள்..அவளை இழந்த துக்கமும்,அதன் தாக்கமும்,ஏக்கமும் எனக்கு பல ஆண்டுகள் நீடித்தது, ஏன் இப்போதும் கூட ..என்று சொல்லி தானும் கண்கலங்கி அவையில் உள்ளவர்களையும் கண்கலங்கச்செய்தார் டைரக்டர் எஸ்.பி.முத்துராமன்.மூத்த குடிமக்கள் மன்றம் சார்பிலான விழா இன்று சென்னை நந்தனத்தில் நடைபெற்றது,இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு டைரக்டர் எஸ்.பி.முத்துராமன் பேசிய பேச்சு பலருக்கு பாடமாக இருந்தது.காரைக்குடியில் சுயமரியாதை குடும்பத்தில் பிறந்தேன் வளர்ந்தேன் நான் சிறு வயது முதலே பார்த்து ரசித்த நாடகங்களும்,சினிமாவும் என்னை சினிமாவை நோக்கி பயணிக்கவைத்தது.
கவிஞர் கண்ணதாசனிடம் கொஞ்ச காலம் இருந்துவிட்டு ஏவிஎம் மெய்யப்ப செட்டியாரிடம் எடிட்டராக போய்ச் சேர்ந்தேன்.அங்கு இருந்து உதவி இயக்குனராக பலரிடம் படித்துவிட்டு பின் 'கனிமுத்து பாப்பா' மூலமாக டைரக்டரானேன்.சினிமா என்பது 23 முக்கிய துறைகளைக் கொண்டது, இந்த துறைகள் அனைத்தையும் நடத்திச் சென்றால்தான் ஒரு படம் எடுக்கவோ, முடிக்கவோ முடியும்.என்னிடம் ஒரு படத்தை டைரக்ட் செய்ய கொடுத்தால் குறிப்பிட்ட தேதிக்கு முன்பாகவே முடித்துக் கொடுத்துவிடுவேன்.இதன் காரணமாக தயாரிப்பாளர்களின் இயக்குனராக வலம் வந்த நான் இருபத்தைந்து ரஜினி மற்றும் பத்து கமல் படங்கள் உள்பட ஏாராளமான படங்களை இயக்கினேன்.நான் வீட்டில் இருந்த நாட்களை விட சூட்டிங்கில் இருந்த நாட்களே அதிகம்.பெண்டாட்டி என்ன செய்கிறாள் பிள்ளை என்ன படிக்கிறாள் என்பதெல்லாம் எனக்கு தெரியாது எனக்கு தெரிந்தது எல்லாம் சினிமா தொழில்தான்.அவ்வளவு துாரம் சினிமாவை நேசித்த நான் குடும்பத்தை கவனிக்காமல் விட்டுவிட்டேன், பணம் காசைத்தாண்டி அன்பை செலுத்த வேண்டும் என்று நான் எண்ணிய போது என் மணைவி என்னை விட்டுப் போய்விட்டாள்.அதன் பிறகு பித்துப்பிடித்தவன் போலிருந்த நான் பல இடங்களுக்கு பயணப்பட்டேன் ஆழியாறில் உள்ள அறிவுத்திருக்கோயில் போய் அங்கு மனவளக்கலையை படித்துபிறகுதான் ஒரளவு இயல்பு நிலைக்கு வந்தேன்.ஆகவே அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று அன்பை தள்ளிப்போடாதீர்கள் உறவுகள் நட்புகளை பேணுங்கள் எந்த நேரமும் புன்னகையும் சந்தோஷமாக இருங்கள்.புதுப்புது விஷயங்களை கற்றுக் கொள்ளுங்கள் புதிய மனிதர்களை சந்தித்து பேசுங்கள்,ஒழுக்கத்தை உயிரிலும் மேலாய் கருதுங்கள் பல ஆண்டுகள் சினிமாவில் இருந்த போதும் கிசுகிசுவில் சிக்காத வெகு சிலரில் நானும் ஒருவனாக இருக்கக்காரணம் அந்த ஒழுக்கம்தான்.எல்லோரும் எனக்கு எண்பத்தாறு வயது என்றார்கள் உண்மையில் இந்த ஏப்ரல் வந்தால் எனக்கு 90 வயது.,வயது தெரியாத என் வாலிபத்திற்கு காரணம் அந்த ஒழுக்கம்தான்.கவலைப்பட்டால் வயது குறையப்போவதில்லை,கவலைப்பட்டால் நோய் தீரப்போவது இல்லை கவலைப்பட்டால் வருமானம் வரப்போவதில்லை இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ்வது எப்படி என்று திட்டமிட்டு வாழ்ந்தால் வயது தெரியாது என்றார்.மூத்தகுடிமக்கள் மன்றம் சார்பில் தலைவர் தலைவர் நாகராஜன்,செயலாளர் சேது சேஷன்,சிறப்பு விருந்தினர் கனகசபை ஆகியோர் டைரக்டர் முத்துராமனை கவுரவித்தனர்,அப்போது அரங்கமே எழுந்து நின்று கைதட்டி பாராட்டியது.-எல்.முருகராஜ்.