மண் எண்ணெய் விளக்கில் படித்து, பல்வேறு பட்டங்கள் பெற்று, ராணுவ விஞ்ஞானியாக மத்திய அரசின் உயர்பதவியில் இருப்பவர் அந்த சம்பாத்தியத்தில் என்ன செய்வார்?சராசரி மனிதராக இருந்தால் கஷ்டப்பட்ட போது கிடைக்காததை எல்லாம் இப்போது இஷ்டப்படி அனுபவிப்பார்.குடிசை வீட்டை இடித்து பிரமாதமாகக் கட்டுவார் அதில் ஜிம், ஹோம் தியேட்டர் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை ஏற்படுத்திக் கொள்வார்.ஆனால் இவரோ சீரமைத்துக்கட்டிய வீட்டில் பெரும்பகுதியை மாணவ மாணவியருக்கான கல்வி வேலைவாய்ப்பு தரும் புத்தகங்கள் கொண்ட இலவச நுாலகமாகவும்,அவர்களுக்கான வழிகாட்டி மையமாகவும் மாற்றியுள்ளார்.மின்சாரமே இல்லாத வீட்டில் மண் எண்ணெய் விளக்கில் படித்த இவர் இப்போது இங்கு படிககவரும் ஏழை எளிய மாணவர்களுக்காக ஒளிரும் மின் விளக்குகள் மற்றும் குளிர்சாதன வசதி கொண்ட அறையைக்கட்டிக் கொடுத்துள்ளார் அது மட்டுமின்றி மாணவர்களுக்கு வழிகாட்டவரும் துறை நிபுணர்களுடன் கலந்துரையாட காற்றோட்டமாக மாடியை மாற்றியமைத்துள்ளார்,
இப்படி எல்லாம் ஒருவர் செய்வரா? இந்தக் காலத்தில் இப்படி ஒரு மனிதரா?யார் இவர் என்று நீங்கள் ஆர்வமுடன் கேட்பது புரிகிறது.அவர்தான் ராணுவ விஞ்ஞானி டில்லிபாபுசென்னை வியாசர்பாடியில் மிகச் சாதரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் டில்லிபாபு,தான் முன்னேற கல்வி ஒன்றுதான் வழி என்பதை உணர்ந்து கடுமையாக படித்தார்.படிச்சுக் கிழிச்சவர் என்று சொலவடை உண்டு ஆனால் இவரைப் பொறுத்தவரை கிழித்து படித்தவர், ஆம் முழு புத்தகம் வாங்க வசதியின்றி நண்பர்களுடன் சேர்ந்து ஒரு புத்தகம் வாங்குவர் அந்த புத்தகத்தில் உள்ள பத்து 'சாப்டரை' தனித்தனியாக பத்தாக கிழித்து ஆளுக்கு ஒரு 'சாப்டர்' என்று மாற்றி மாற்றி படித்துவிட்டு பின் மீண்டும் முழுபுத்தகமாக்கி வேறு ஒரு வசதியற்றவருக்கு வழங்கிவிடுவார், அந்த வகையில் படித்துக் கிழத்தவர் இல்லை இவர் கிழித்து படித்தவர்.உற்பத்தி பொறியியலில் முனைவர் பட்டம் பெற்றார்,லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்ட மத்திய அரசின் தேர்வில் தேர்வாகி பெங்களூருவில் உள்ள மத்திய அரசின் போர் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றுகிறார் சுருக்கமாக சொல்வதனால் நம் நாட்டு ராணுவ வளத்தையும் பலத்தையும் பெருக்கும் ராணுவ விஞ்ஞானி.தமிழ் மீது மிகப்பெரிய பற்றுக் கொண்ட இவர் தமிழில் முதுகலை பட்டம் பெற்றதுடன் இதுவரை 12 அறிவியல் நுால்களை எளிய தமிழில் எழுதியுள்ளார்,தான் படிக்கும் போது என்னவெல்லாம் தேவைப்பட்டதோ அதெல்லாம் மாணவர்களுக்கு கிடைக்கவேண்டும் என்பதுதான் அவரது ஆசை விருப்பம் எல்லாம்.இதன் காரணமாக வியாசர்பாடியில் உள்ள பெற்றோர் வசிக்கும் வீட்டை மாணவர்கள் நலனிற்காக சீரமைத்துக்கட்டியுள்ளார், இதனை மாணவர்கள் நலனிற்காக அர்ப்பணித்தும் உள்ளார்.'கலாம் சபா' என்று பெயரிடப்பட்ட நுாலகம் மற்றும் வழிகாட்டி மையத்தை நிலவு மனிதர் மயில்சாமி அண்ணாதுரை துவக்கிவைத்தார்,போலீஸ் அதிகாரி சாமுண்டீஸ்வரி,ஐஏஎஸ் செல்வம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இந்த விழாவில் தனது பெற்றோர்கள் விஜயகுமார்-விக்டோரியா ஆகியோரை கவுரவித்தது நெகிழ்ச்சியை தருவதாக இருந்தது, தனது மனைவி செல்வி மகள் இலக்கியா ஆகியோரையும் இந்த விழாவில் பங்கேற்கவைத்து இந்த மையத்தின் வளர்ச்சியில் உங்கள் தொண்டும் பங்கும் இருக்கவேண்டும் என்று சொல்லாமல் சொல்லிக்காட்டினார்.நல்ல புத்தகங்கள் எப்போதும் நல்லதையே செய்யும் என் வீட்டில் 3 ஆயிரம் புத்தகங்கள் இருக்கிறது ஆனால் ஒரு டி.வி..கூட இல்லை காரணம் எனக்கு புத்தகம் படிக்கவே விருப்பம்.இங்கு வரும் மாணவர்களும் படிப்பதில் மட்டுமே நாட்டம் செலுத்தவேண்டும் நீங்கள் நன்றாக படித்து ஒரு படி ஏறி பொருளாதார தடையால் அடுத்த படி மேலே போகமுடியாமல் தவித்தால் அப்போதும் இந்த மையம் உதவும்.நான் மண் எண்ணெய் விளக்கு ஒளியில் படித்தவன் மண் எண்ணெய் தீர்ந்தால் அதில் பழையபடி சூடு ஆறும்வரை காத்திருந்து மண்எண்ணெய் மாற்றி ஊற்றும் வரை மகனின் படிப்பு தடைப்படுமே என நினைத்து எப்போதும் தயார் நிலையில் கூடுதலாக மண் எண்ணெய் நிரம்பிய விளக்கை தயார் செய்துவைத்து, நான் துாங்கும் வரை தானும் துாங்காது விழித்திருந்த என் தாய் விக்டோரியாதான் நான் பார்த்த முதல் விஞ்ஞானி என்று தனது ஏற்புரையில் சொல்லி நெகிழ்ந்தார் டில்லிபாபு.அவர் பேசி முடித்த போது தாய் விக்டோரியா கண்களில் இருந்து மட்டுமல்ல பார்வையாளர்கள் பலரது கண்களில் இருந்தும் கண்ணீர்...இந்த கலாம் சபா நுாலகம் மற்றும் வழிகாட்டி மையம் முதல் கட்டமாக சனி,ஞாயிறு ஆகிய நாட்களில் மாலை 3 மணிமுதல் மாலை 6 மணிவரை செயல்படும், இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு திரு சுந்தர் (95511 92770)என்பவரை தொடர்புகொள்ளவும்,-எல்.முருகராஜ்