கடலில் போட்டாலும் இயங்கும் கேமரா!
ஜப்பானில் கடலில் அடித்துச் செல்லப்பட்ட கேமரா, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இயங்கும் நிலையில் கண்டெடுக்கப்பட்டது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. டோக்கியோவில் உள்ள சோஃபியா பல்கலைக்கழகத்தில் படித்து வருபவர் செரினா. வயது 20. இவர், கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன், இஷிகாக்கி கடற்கரைப் பகுதியில், தன் நண்பர்களுடன் சென்று கடலடி சாகசம் (Scuba Diving) செய்தார். அப்போது, தன் கையிலிருந்த கேமராவைக் கடலுக்கடியில் தவறவிட்டார். இந்நிலையில், பல நூறு கிலோ மீட்டர்களுக்கு அப்பால் உள்ள தைவான் கடற்கரைப் பகுதியில் அந்த கேமரா கரை ஒதுங்கியுள்ளது. இது தொடர்பாக கேமராவைக் கண்டெடுத்த, ஹோ சாவேன் கூறும்போது, 'வழக்கமாக பள்ளி மாணவர்கள் குழுவாகச் சென்று, கடற்கரைப் பகுதியைச் சுத்தம் செய்வோம். அப்படிப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, நான் பாசி மண்டிய கேனான் கேமரா ஒன்றைக் கண்டெடுத்தேன். கேமரா வாட்டர்ஃப்ரூப் உறைக்குள் வைக்கப்பட்டிருந்தது. அதை என் ஆசிரியரிடம் கொடுத்தேன். அவர் ஆன் பட்டனை அமுக்கிய போது, இயங்க ஆரம்பித்தது. இதையடுத்து, அதில் உள்ள புகைப்படங்களை ஆராய்ந்தோம். எடுக்கப்பட்ட புகைப்படங்கள், ஜப்பான் தீவில் உள்ள பகுதி என்பது தெரியவந்தது. அதைவைத்து, ஜப்பானியர்தான் அதைத் தவறவிட்டுள்ளார்கள் என்று முடிவு செய்தோம். நாங்கள் சமூக வலைதளங்களில் இது தொடர்பாகப் பதிவிட்டோம். கேமராவைத் தவறவிட்டவர் எங்களுடன் தொடர்பு கொண்டுள்ளார். அவர் தைவான் வந்து கேமராவை வாங்கிக்கொள்ள உள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகக் கடலில் கிடந்தாலும், பேட்டரி சார்ஜ் அப்படியே இருந்தது எங்களுக்கு ஆச்சரியமாக உள்ளது.' என்று தெரிவித்துள்ளார்.