உள்ளூர் செய்திகள்

தமிழ்ச் சொற்களின் கூட்டணி

விண் என்றால் வானம். மீன் என்றால் நீரில் நீந்துகிற ஓர் உயிரினம். விண்மீன் என்றால்?ஒன்றுக்கொன்று தொடர்பற்றதாகத் தோன்றும் இந்த இரு சொற்களும் ஒன்றாகச் சேரும்போது, விண்ணில் நீந்திச் செல்லும் ஒளிக்கோளம் என்கிற பொருளைத் தருகின்றன.இதைப்போல் தமிழில் பலவிதமான சொற்களை ஒன்றாகச் சேர்த்துப் புதிய சொற்களை உருவாக்கலாம். ஏற்கெனவே நாம் நன்கறிந்த சொற்களைப் பிரித்துப் பார்த்தால், அந்தச் சொற்களே அவற்றின் பொருளை உணர்த்துவதைக் காணலாம்.எடுத்துக்காட்டாக, 'மணிமாலை' என்ற சொல், மணி, மாலை என்று பிரிகிறது. மணிகளைக் கோத்த மாலை என்னும் பொருளைத் தருகிறது. இதில் 'மாலை' என்ற சொல்லை அப்படியே வைத்துக்கொண்டு அதற்குமுன் வெவ்வேறு சொற்களைச் சேர்த்து முத்துமாலை, காசுமாலை, மரகதமாலை, பூமாலை என்று பல புதிய சொற்களை உருவாக்கலாம்.இந்தச் சொற்கள் அனைத்திலும் 'மாலை' என்பது கழுத்தில் அணிந்துகொள்கிற ஒரு நகையை, அதாவது, ஒரு பொருளைக் குறிக்கிறது. மாறாக, 'புகழ்மாலை' என்ற சொல்லில் 'மாலை' என்பது பொருளில்லை. அது ஒரு கருத்தைத் தெரிவிக்கிறது. 'புகழ்மாலை' என்பது, ஒருவரைப்பற்றிய புகழ்மொழிகளைத் தொகுத்துப் பேசுதல்.சொற்களை இந்த வரிசையில்தான் இணைக்கவேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை, முன்பின்னாகவும் பின்முன்னாகவும் இருவிதமாகவும் இணைத்துப் பார்க்கலாம். வெவ்வேறு பொருள்கள் கிடைக்கும். எடுத்துக்காட்டாக, கிளிக்கூண்டு (கிளியை அடைத்து வைக்கும் கூண்டு), கூண்டுக்கிளி (கூண்டுக்குள் இருக்கும் கிளி)தோசைக் கல் (பாத்திரம்), கல் தோசை (தோசையில் ஒரு வகை).குழந்தைத் தொழிலாளர் (சிறுவர்), தொழிலாளர் குழந்தை (வேலை செய்பவரின் குழந்தை)கையால் தட்டித் தட்டி அச்சிடும் பணியைத் 'தட்டச்சு' என்று அழைக்கிறோம். இது, 'தட்டுதல்', 'அச்சிடுதல்' என்ற இரு சொற்களின் தொகுப்பாக அமைந்து பொருத்தமான பொருளைத் தருகிறது.நீங்களும் வெவ்வேறு சிறுசொற்களை இணைத்துப் புதிய சொற்களை உருவாக்கிப் பார்க்கலாம். அது ஒரு நல்ல மொழிப் பயிற்சியாக அமையும்.எடுத்துக்காட்டாக, இங்குள்ள சொற்களைப் பலவிதமாக இணைத்துப் பாருங்கள். அதனால் உருவாகும் புதிய சொற்கள் உங்கள் மனத்தில் எப்படிப்பட்ட காட்சிகளை உருவாக்குகின்றன என்று சிந்தியுங்கள்:வலை, மரம், நிலம், கல், கொடி, மலர், மதி, ஆறு, பழம், குணம், விலை, நட, மிகை, அதிகம், குறைவு, இனிமை, பண்பு, தெளிவு.- நாகா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !