கபினி ஆற்றங்கரையில் ஒருநாள்
கேரளாவின் வயநாடு மாவட்டத்திலிருந்து உருவாகும் கபினி ஆறு, கிழக்கே கர்நாடக மாநிலத்தின் நரசிப்பூரில் சென்று காவிரி ஆற்றுடன் கலக்கிறது. மைசூரிலிருந்து ஐம்பது மைல் தொலைவில் உள்ள சர்கூரில் அமைந்திருக்கும் கபினி நீர்த்தேக்கப்பகுதியும், கபினி கழிமுகமும், நாகரஹோளே என்றழைக்கப்படும் காடுகளை வளமாக்குவதோடு, காட்டுயிர்கள் அடர்த்தியாக இப்பகுதியில் வாழவும் வழி செய்கின்றன.கர்நாடக மாநிலத்தின் பந்திப்பூர் தேசியப் பூங்காவையும், நாகரஹோளே தேசியப் பூங்காவையும் பிரிப்பது, இந்த கபினி நீர்த்தேக்கம் தான். பூங்கா என்றதும் ஊஞ்சல் கட்டி, சறுக்கு மரம் ஏறி விளையாடும் சிறுவர் பூங்காக்கள் அல்ல. காட்டுயிர்கள் செறிவாக வாழும் காட்டுப்பகுதி. மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரங்களில் அமைந்திருக்கும் இந்த தேசியப் பூங்காக்களில், சிறு ஓடைகள், குன்றுகள், பள்ளத்தாக்குகள், ஆறுகள் என இயற்கை வளம் உண்டு. அரிதான தாவர இனங்கள், விலங்குகள், பறவைகள், பூச்சி இனங்கள் உள்ளிட்ட காட்டுயிர்களும் உண்டு. நாகரஹோளே காட்டின் மறுமுனையான கபினி நீர்த்தேக்கப்பகுதிக்கு, இரண்டு நாள் பயணம் மேற்கொண்டோம். புலி, சிறுத்தை, கருஞ்சிறுத்தை, கோலார் கரடி, யானைகள், சாம்பார் மான்கள், புள்ளிமான்கள், சோலை மந்திகள் (குரங்கு) மற்றும் அரிதான பறவையினங்களை வெகு அருகில் பார்க்கக்கூடிய வாய்ப்பு இக்காட்டில் கிடைப்பதால், அரசே சில காட்டுச்சவாரிகளை ஏற்பாடு செய்கிறது. கபினியைச் சுற்றி அமைந்திருக்கும் தங்கும் விடுதிகள் வசூலிக்கும் வாடகை கொஞ்சம் அதிகம் என்பதால், கபினியிலிருந்து 15 மைல் தொலைவிலுள்ள சர்கூர் எனும் சிற்றூரில் தங்கி, காட்டுச்சவாரியை மேற்கொள்வது என்று திட்டமிட்டோம்.மதிய உணவுக்குப் பின், பிற்பகலில் சர்கூரிலிருந்து, வனச்சரக அலுவலகம் வந்தடைந்தோம். ஒளிப்படக் கருவிகளைத் தயாராக வைத்துக் கொண்டு, காட்டுச்சவாரி பேருந்துக்காக காத்திருந்தோம். தனது கூட்டை மனிதர்களிடமிருந்து காப்பதற்காக, ஒரு செம்பருந்து கூட்டுக்கு நேர் எதிரே உள்ள மற்றொரு மரத்தில் காவலுக்கு அமர்ந்திருந்தது. சரியாக 4:30 மணிக்கு எங்கள் வனச்சரக பேருந்து கபினி நாகரஹோளே காட்டை நோக்கி கிளம்பியது. மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் கடுமையான வறட்சி நிலவுவதால், இலையுதிர் காடான நாகரஹோளேவில் பச்சை நிறத்தையே பார்க்க முடியவில்லை. அனைத்தும் வறண்டு காய்ந்து போயிருந்த படியால், கபினி கழிமுகத்துக்கு அருகே உள்ள புல்வெளியில், உணவுக்காக ஒரு யானை குடும்பமும், அருகில் சில புள்ளிமான் கூட்டமும் ஒரு மயிலும், இரண்டு காட்டுப்பன்றிகளும் மேய்ந்து கொண்டிருந்த அற்புதக் காட்சியைக் காண முடிந்தது. மாலைச் சூரியனின் ஆரஞ்சு படர்ந்த பச்சைப் புல்வெளியையும், சிறு சுடர்களாகத் தெரியும் வனவிலங்கு கூட்டங்களையும் படமெடுத்துக் கொண்டோம். திரும்பி வரும் வழியில், ஒரு தாய் மான், குட்டிக்கு பாலூட்டிக் கொண்டிருந்தது. அழிந்து வரும் உயிர்களில் ஒன்றான சோலைமந்தி (Langur) ஆங்காங்கே தாவிக் கொண்டிருந்தன. காட்டுக் கோழிகள் யானை லத்திகளைக் கிளறிக் கொண்டிருந்தன. ஒரு பாம்புக் கழுகு (Crested Serpant Eagle) தனது அலகால் இறகுகளை நீவி உண்ணிகளை அகற்றிச் சுத்தம் செய்து கொண்டிருந்தது. டீ குடிக்க மாலையில் நாம் இறங்கிப் போவதைப் போல, வெகு சாவகாசமாக ஒரு பெண் புலி, காட்டுப் பாதையைக் கடந்து, ஒரு நீர்க்குட்டையை நோக்கி சென்று கொண்டிருந்தது. தாகம் தணிக்கவும், குளியல் போட்டு உடலைக் குளிர்விக்கவும் புலிகளும், சிறுத்தைகளும் வெளியே வரும் இக்காட்சிகள்தான் கபினியின் சிறப்பு ! - அ.மு.செய்யது