அரசுப் பள்ளியைத் தத்தெடுத்த அரசு ஊழியர்
காலத்தால் அழிக்க முடியாதது கல்விச் செல்வம் மட்டுமே. அதை அடுத்த தலைமுறைகளுக்கு வழங்குவது பள்ளிகள்தானே! அப்படி ஓர் அரசுப் பள்ளியைத் தத்தெடுத்து உதவி வருகிறார் வெங்கடேஷா. இவர், கர்நாடக மாநிலம் பெங்களூருவின் புறநகர்ப் பகுதியான கொடிகெஹல்லியைச் சேர்ந்தவர். கடந்த 39 ஆண்டுகளாக, தன் பகுதியில் உள்ள ஆரம்பநிலை அரசுப் பள்ளியைத் தத்தெடுத்து உதவி வருகிறார். ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியரான வெங்கடேஷா, தன்னால் முடிந்த அளவுக்கு உடலுழைப்பு, நிதி திரட்டுதல், வழிகாட்டல் என்று, அரசுப் பள்ளியின் வளர்ச்சிக்கு உதவி வருகிறார்.கல்வி வரம்“நான், என் தந்தை என, எல்லோரும் படித்தவர்கள்; என் பிள்ளைகளுக்கும் கல்வியைக் கொடுத்துள்ளேன். நாங்கள் வறுமைச் சூழலிலும் அரசுக் கல்வியைக் கற்று முன்னேறினோம். இந்தக் கல்வி, சாதாரண மக்களுக்குத் தரமாகக் கிடைக்க வேண்டாமா? கொடிகெஹல்லி ஆரம்பநிலை அரசுப் பள்ளி, 1978ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆனால், அதன் தரம் திருப்தியாக இல்லை. வகுப்பறையில் பெஞ்ச் இல்லை; கழிவறைகளில் தண்ணீர் இல்லை. உலகம் தொழில்நுட்பமயமாய் ஆகிவிட்ட நிலையில், அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகளே இல்லை. புதிய டெக் வசதிகளை எப்படி எதிர்பார்ப்பது? பிள்ளைகளைப் பள்ளிக்கூடங்களுக்கு அனுப்புங்கள் என்று, அரசு பிரசாரம் மட்டுமே செய்கிறது. அதற்கான எந்த கள நடவடிக்கையையும் முறையாக மேற்கொள்ளவில்லை. அதேசமயம், அரசு மாற்றத்தைக் கொண்டு வரும் என்று என்னால் நம்பிக்கொண்டு உட்கார முடியவில்லை. தினக்கூலிகளாகப் பணியாற்றும் பெற்றோர், தம் பிள்ளைகளை வேலைக்கு அனுப்பவே முனைப்பாய் உள்ளனர். பெற்றோர்களைச் சந்தித்துப் பேசி, குழந்தைகள் படிக்க அனுமதி பெறுவதுதான் எனக்குப் பெரிய சவால். தொடர் முயற்சிகளால், 5ஆம் வகுப்பு வரையுள்ள இப்பள்ளியில், 80 மாணவர்கள் படிக்கிறார்கள். அவர்களுக்குத் தேவையான நோட்டுப்புத்தகங்கள், சீருடைகள், காலணிகள், ஸ்வெட்டர், தண்ணீர் சுத்திகரிப்புக் கருவி, ஸ்டீல் பிளேட்டுகள் என்று எல்லாவற்றையும், பள்ளி மேம்பாட்டு அசோஷியேஷன் மூலம் வழங்கி வருகிறோம். இச்சங்கத்தின் தலைவராக 39 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறேன். பெற்றோர்கள் என் மீது வைத்த நம்பிக்கையே கல்விப்பணியைச் சாத்தியப்படுத்தியது. கல்வி மீது அக்கறைஇதுவரை 79 முறை பள்ளியில் நான் தேசியக்கொடியை ஏற்றிவைத்துள்ளேன். பள்ளி நிகழ்ச்சிகளுக்கு, அரசியல்வாதியையோ, உள்ளூர் பிரமுகர்களையோ பெற்றோர்கள் அழைக்க விரும்புவதில்லை. தம் மீது யாருக்கு உண்மையான அக்கறை என்பதை அவர்கள் அறிந்துள்ளனர். இலவசமாய் சீருடைத் துணிகளை வழங்கினாலும், அதைத் தைக்கச் செலவாகும் 200 ரூபாய்க்குச் சிரமப்படும் பெற்றோர்கள்தான் இங்கு அதிகம். அடிப்படை உரிமைகல்வி கற்கத் தகுதியுள்ள ஒரு மாணவருக்குக்கூட அந்த வாய்ப்பு மறுக்கப்படக்கூடாது. அனைவருக்கும் சமவாய்ப்புகள் தந்துவிட்டுத்தான் போட்டிபோட வைப்பது நியாயம். அரசுப் பள்ளிகளுக்கான கல்விப்பணியில் என் மகன்களும் ஆர்வமாகத் தோள் கொடுத்து வருகின்றனர். எந்தப் பணியையும் அவ்வப்போது என்றில்லாமல், அதைத் தொடர்ச்சியாகச் செய்வதுதான் பயன் தரும் என்பது என் நம்பிக்கை. நாம் ஒவ்வொருவரும் நம்மால் முடிந்த பணிகளைச் செய்தாலே, சமூகத்தில் மாற்றம் வரும்” என்று நம்பிக்கையுடன் பேசுகிறார் வெங்கடேஷா.