உள்ளூர் செய்திகள்

ஆண்ட்ராய்டில் ஓர் ஆய்வகம்

அறிவியலில் ஆர்வமும், ஈடுபாடும் உள்ளவரா நீங்கள்? உங்களுக்காகவே கூகுள் ஒரு புதிய ஆண்ட்ராய்டு செயலியை (Android App) அறிமுகம் செய்துள்ளது. இனி நீங்கள் போனை விளையாட மட்டுமல்ல; அறிவியல் தொடர்பான சிறு ஆய்வுகள் செய்யவும் பயன்படுத்த முடியும். ஆமாம்... ஆண்ட்ராய்டு போனில் ஓர் அறிவியல் பரிசோதனைக்கூடம் என்று இதைச் சொல்லலாம். 'அறிவியல் பத்திரிகைச் செயலி' (சயின்ஸ் ஜர்னல் ஆப் / Science Journal App) என்று பெயரிடப்பட்டுள்ள இந்தச் செயலி மாணவர்கள் செய்யக்கூடிய சிறிய ஆராய்ச்சிகளுக்கு உதவுகிறது. ஒளி, ஒலி, வெப்பம் போன்ற அன்றாடத் தகவல்களை மாணவர்களுக்குப் புரியும் வண்ணம் 'கிராப்' வரைபடங்களாகத் தருகிறது. ஒலி, ஒளி, வெப்பம் போன்றவற்றை நாமே போன் மூலமாகப் பதிவு செய்து புதிய 'கிராப்' வரைபடங்களையும் உருவாக்கலாம். போனில் உள்ள உணர்கருவிகளின் (Sensors) உதவியுடன் இந்தச் சிறு ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. கூகுளின் இந்தச் செயலியுடன் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள மிகப்பெரிய அறிவியல் ஆய்வுக்கூடமாகிய 'எக்ஸ்ப்ளோரடோரியம்' (Exploratorium) இணைந்து செயல்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !